திங்கள், 6 ஜூன், 2011

கருணாநிதி பிறந்த நாளில் வெறிச்சோடிய அறிவாலயம்

தி.மு.க., தலைவர் கருணாநிதி, தனக்கு பிறந்த நாள் வாழ்த்து கூற தொண்டர்கள் வர வேண்டாம் என, வேண்டுகோள் விடுத்ததால், நேற்று தி.மு.க.,வின் தலைமையகமான அண்ணா அறிவாலயம் களையிழந்து காணப்பட்டது.தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு நேற்று 88வது பிறந்தநாள். ஒவ்வொரு பிறந்த நாளின் போதும், அவர் அறிவாலயத்தில் தொண்டர்களை சந்திப்பது வழக்கம். தமிழகம் முழுவதுமிருந்து வரும் கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிப்பதுடன், பலப் பரிசுகளை வழங்குவர். இம்முறை சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மகள் கனிமொழி சிறையில் அடைப்பு போன்ற காரணங்களால், கருணாநிதி மன வருத்தத்தில் உள்ளார். திகார் சிறையில் மகள் இருக்கும்போது, தனது பிறந்த நாளை கோலாகலமாகக் கொண்டாட விரும்பவில்லை.இது தொடர்பாக அவர் நேற்றுமுன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "எனது பிறந்தநாளையொட்டி அண்ணாதுரை, பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர, வேறு எந்த நிகழ்ச்சிகளிலும், கலந்து கொள்ளும் மன நிலையில் நான் இல்லை. எனவே, எனக்கு வாழ்த்து வழங்க, என்னை சந்திக்க வேண்டுமென கட்சியினர் வற்புறுத்த வேண்டாம். வீட்டிற்கோ, கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக, கட்சியினரும், தமிழ் மக்களும் மன்னிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.அதையேற்று அறிவாலயத்திற்கு, நேற்று தொண்டர்கள் வரவில்லை. தி.மு.க., மாணவரணி சார்பில் ரத்ததான முகாம் மட்டும் நடந்தது. நேற்று அறிவாலயத்தில் தோரணங்கள் கூட கட்டப்படவில்லை. வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. வந்திருந்த சில தொண்டர்களும் கவலை தோய்ந்த முகத்துடனே காணப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் யாரும் வரப்போவதில்லை என்பதை அறிந்ததும், வந்திருந்தவர்களும் புறப்பட்டு சென்றனர்.

கருத்துகள் இல்லை: