வியாழன், 9 ஜூன், 2011

மத்திய அமைச்சரவை மாற்றம் திடீர் ஒத்திவைப்பு

அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஒத்திவைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் அதற்கு முக்கியக் கவனம் செலுத்த பிரதமர் தீர்மானித்திருப்பதாகவும், எனவே அமைச்சரவை மாற்றத்தினை தற்போதைக்கு அவர் ஒத்திவைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் தயாநிதி மாறன் மட்டும் விரைவில் மாற்றப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் குறித்து யோசிப்பேன் என்று பிரதமர் கூறியிருந்தார். ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு மேற்கு வங்க முதல்வராகி விட்டதால் அந்த இடம் காலியாக உள்ளது. மேலும் தயாநிதி மாறன் மீது அடுக்கடுக்காக ஊழல் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் அமைச்சரவை மாற்றத்தை ஒரு சில நாட்களில் பிரதமர் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான கட்டியமாக அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடுமாறு பிரதமர் உத்தரவிட்டார். மேலும் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் அவர் ஆய்வு நடத்தினார்.

இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்தை பிரதமர் சற்று ஒத்திவைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஊழல் எதிர்ப்பு இயக்கப் போராட்டங்கள் வலுத்து வருவதால், அதற்கு கூடுதல் கவனம் செலுத்தும் வகையிலும், பிரச்சினைகளைத் தீர்த்த பின்னர் அமைச்சரவை மாற்றத்தை செய்யலாம் என்ற எண்ணத்திலும் பிரதமர் இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் தயாநிதி மாறன் மட்டும் விரைவி்ல் மாற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தயாநிதி மாறன் மீதான சிபிஐயின் கரம் இறுக ஆரம்பித்துள்ளது. அவருக்கு எதிராக சிவசங்கரன் கொடுத்துள்ள வலுவான வாக்குமூலத்தை வைத்து அவர் மீது வழக்கு தொடர சிபிஐ தயாராக உள்ளது. இதற்கான அனுமதியை பிரதமரிடமிருந்து அது எதிர்நோக்கியுள்ளது. இந்த விவகாரத்தை நீண்ட காலத்திற்கு கிடப்பில் போட முடியாத இக்கட்டான நிலையில் பிரதமர் இருக்கிறார். எனவே விரைவில் அதற்கான அனுமதியை பிரதமர் கொடுக்கக் கூடும். அப்படிக் கொடுப்பதற்கு முன்பே தயாநிதி மாறனை ராஜினாமா செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனேகமாக ஜூலை மாதத்திற்குப் பின்னரே அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

வெளிநாடுகளுக்குப் போக தடை

முன்னதாக மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அதிரடி ஆய்வு நடத்தியுள்ளார்.

நேற்று முன்தினம்தான் மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரம், தங்களது உறவினர்களின் சொத்து விவரம் உள்ளிட்டவற்றை தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார் பிரதமர்.

இந்த நிலையில் அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் ஆய்வு மேற்கொண்டுள்ளார். அமைச்சர்களுக்கு பல்வேறு உதத்ரவுகளையும் அவர் அதிரடியாக பிறப்பித்துள்ளார்.

நீண்ட நாட்களுக்கு வெளிநாடுகளுக்கு டூர் போகக் கூடாது என்பது அதில் முக்கியமான ஒன்றாகும்.

கருத்துகள் இல்லை: