வியாழன், 30 ஜூன், 2011

மகிந்த ராஜபக்சவின் ரஷ்யாவிற்கான கேளிக்கைப் பயணம்

இந்த மாநாட்டின்போது அரச தலைவர்கள் பலரை அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்ததாக சிறிலங்காவிலுள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும், வெறுமனே நான்கு நாடுகளின் அரச தலைவர்கள் மாத்திரமே இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இவ்வாறு Lanka-e-News தனது புலனாய்வுச் செய்தியில் தெரிவித்துள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ்பேர்க் நகரில் யூன் 18ல் இடம்பெற்ற உலக வர்த்தக மாநாட்டிற்கான அதிபர் ராஜபக்சவின் பயணம் எந்தவித நோக்கமுமில்லாதது என மொஸ்கோவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச ஊடகங்கள் இந்த பயணம் தொடர்பாக அளவுக்கு அதிகமாக ஊதிப் பரப்புரை செய்தபோதும் இந்தப் பயணம் தோல்வியிலேயே முடிவடைந்தது.

இந்த மாநாட்டின் முதலாவது நகைச்சுவையான விடயம் என்னவெனில், 3000 அமெரிக்க டொலர்களை செலுத்திய பின்னரே ஒருவர் இதில் கலந்து கொள்ள முடியும்.

3000 அமெரிக்க டொலர்கள் செலுத்தி அழைப்பிதழைப் பெற்றுக் கொண்டே சிறிலங்கா அதிபரும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார்.

அதிபருடன் சென்ற 81 பேரில் 9 பேர் மட்டும் அவருடன் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 27,000 டொலர்களை [30 இலட்சம் இலங்கை ரூபா] செலுத்தியிருந்தனர்.

இத்தகைய செலவினங்கள் மற்றும் ஊடகங்களின் பரப்புரை ஒருபுறமிருக்க அதிபர் முதலாவது மற்றும் இறுதி நாள்கள் மட்டுமே இந்த மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்.

இரண்டாவதாக கவனத்தை ஈர்க்கும் அம்சம் இந்தக் காலப்பகுதியில் ரஷ்யாவிலுள்ள விருந்தினர் விடுதிகளில் தங்குமிடச் செலவுகள் மூன்று மடங்காக உள்ளன.

ஆதலினால் ரஷ்யப் பயணம் தொடர்பான விபரங்கள், ஏற்பட்ட செலவுகள் மற்றும் இந்தக் கேளிக்கைப் பயணத்தினால் நாட்டிற்கு கிடைக்கப் பெற்ற நலன்கள் என்ன என்ற அனைத்து விபரங்களையும் நாடாளுமன்றில் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பு நாட்டினது அரச தலைவருக்கு உள்ளது.

ரஷ்ய அதிபரின் அழைப்பினை ஏற்றுத் தான் அதிபர் மகிந்த ராஜபக்ச ரஷ்யாவிற்கான இந்தப் பயணத்தினை மேற்கொண்டார் என்ற அதிபர் செயலகத்தின் ஊடாக அறிக்கை அப்பட்டமான பொய்.

சாதாரண ஒரு வர்த்தகரைப் போல தானும் இந்த மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டினை விலைகொடுத்து வாங்கியே மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தாரே தவிர அவருக்கு எந்தவொரு அழைப்பும் ரஷ்ய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை.

அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டதைப் போல அனைத்து நடவடிக்கைகளையும் ஒழுங்குசெய்யுமாறும், இது ஒரு உத்தியோகபூர்வப் பயணம் என்ற தோற்றப்பாட்டினை ஏற்படுத்துமாறும் மகிந்தவின் உறவினரான ரஷ்யாவிற்கான சிறிலங்காவினது தூதுவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன் விளைவாகவே உத்தியோகபூர்வ அரசுமுறைப் பயணத்தின் போது அரச தலைவர் ஒருவரை வரவேற்கும் தகுதிபெற்ற ரஷ்யாவின் அரச தலைவர்கள் எவரும் மகிந்த ராஜபக்சவினை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு வரவில்லை. சென்பீற்றஸ்பேக் நகரத்தின் பிரதி மேயர் தான் அதிபர் ராஜபக்சவினை வரவேற்றிருந்தார்.

சென் பீற்றஸ்பேக் நகரத்தில் இடம்பெற்ற இந்த மாநாடானது வர்த்தக சமூகத்தினரின் சார்பில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததே தவிர இது அரச தலைவர்களுக்கான மாநாடன்று.

ஒரு நாட்டினது அதிபர் கலந்து கொள்ளும் அளவிற்கு இந்த மாநாட்டில் எதுவும் இருக்கவில்லை. சிறிலங்காவிலிருந்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவதற்கு யாரையும் அனுப்பியிருக்க வேண்டுமெனில் அது நாட்டினது வர்த்த சமூகத்தினராகத்தான் இருந்திருக்க வேண்டும்.

சுருங்கக் கூறின், இந்த மாநாடு எவ்வகையிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஐரோப்பிய பொருளாதார மாநாடு ஆகாது.

இந்த மாநாட்டின்போது அரச தலைவர்கள் பலரை அதிபர் மகிந்த ராஜபக்ச சந்தித்ததாக சிறிலங்காவிலுள்ள ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்த போதிலும், வெறுமனே நான்கு நாடுகளின் அரச தலைவர்கள் மாத்திரமே இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

சீனா, ஸ்பெயின், பின்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இவர்கள். பெல்ஜியத்திலிருந்து அரச விவகாரங்களுக்கான அமைச்சர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.

ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரச தலைவர்களைச் சந்திப்பதற்கும் அதிபர் ராஜபக்ச நேரமொதுக்கித் தருமாறு கோரியிருந்தார். ஆனால் மிகவும் குறுகிய நேரம் மாத்திரமே இவர்களைச் சந்திப்பதற்கு மகிந்தவிற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டதாம்.

போரின் போது உயிர்நீத்த படையினரினரைப் பற்றியே அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தச் சந்திப்பின்போது பேசினாராம். ஆனால் ரஷ்யா மற்றும் சீனாவின் அரச தலைவர்கள் இதற்குப் பதிலாக எதனையும் கூறுவில்லை.

ஐ.நாவின் தருஸ்மனின் தலைமையிலான அறிக்கையினைப் பற்றியோ அன்றில் சனல் -4 ஆவணப்படம் தொடர்பாகவே இங்கு எதுவும் பேசப்படவில்லை.

"உங்களுடன் எவரும் இல்லாவிட்டாலும் நாங்கள் உங்களுக்குத் துணையாக இருக்கிறோம்" என ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மகிந்தவிடம் உறுதியளித்தினராம் என சிறிலங்காவினது அரச ஊடகங்கள் செய்திவெளியிட்டிருந்தன.

ஆனால் இது வெறும் பொய். இந்த இரண்டு அரச தலைவர்களில் எவரும் இத்தகைய எதனையும் மகிந்தவிடம் கூறவில்லை.

அரச தலைவர்களுக்கிடையிலான இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களென அதிபரின் ஊடகங்கள் விடுத்த செய்தியினை வீடியோப் படம் மூலமாகவோ அல்லது வேறு வழிவகைகள் ஊடாகவோ உறுதிப்படுத்துமாறு நாங்கள் சவால் விடுகிறோம்.

இல்லையேல் இரு நாட்டு அரசதலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கலந்துரையாடலின் அடிப்படையில் ஏதோவொரு உடன்பாட்டுக்கு இவர்கள் வந்திருக்கவேண்டும்.

தங்களது இந்த வாதத்தினை உண்மையென நிரூபிக்கும் வகையில் இத்தகைய ஆவணங்கள் ஏதேனும் இருக்குமெனில் அவற்றை வெளிப்படுத்துமாறு நாங்கள் வெளிவிவகார அமைச்சுக்கும் சவால் விடுக்கிறோம்.

சரி அது அவ்வாறே இருக்கட்டும். அதிபர் ராஜபக்ச தனது பரிவாரங்களுடன் மேற்கொண்ட இந்தக் கேளிக்கைப் பயணத்தினால் சிறிலங்காவிற்குக் கிடைத்த பொருளாதார ரீதியிலான அல்லது வேறு வகையிலான நன்மைகள்தான் என்ன?

http://www.puthinappalakai.com/view.php?20110630104173

கருத்துகள் இல்லை: