வியாழன், 9 ஜூன், 2011

கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு அனுமதி: தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் முதல்வர் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 9: கச்சத்தீவை சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனிடம், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
தமிழக மீனவர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் மற்றும் உயர் அதிகாரிகள் இலங்கை செல்கின்றனர். முன்னதாக சென்னை வந்த சிவசங்கர் மேனன் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து, அதுதொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன் பிடிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என சிவசங்கர் மேனனிடம், முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.
கச்சத்தீவு விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறுதிமொழிகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து தமிழர்கள் எவ்வளவு பேர் இடம்பெயர்ந்தனர் என்பது குறித்தும், எவ்வளவு பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது என்பது குறித்தும், முகாம்களில் எவ்வளவு பேர் உள்ளனர் என்பது குறித்தும் சரியான தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டியதோடு, அவர்கள் முன்பு வசித்த இடங்களிலேயே குடியமர்த்தப்படவேண்டும். சிங்களர்களுக்கு வழங்கப்படுவதுபோல் சம உரிமை தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அண்மையில் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றபோது, காற்றின் வேகத்தால் இழுத்துச் செல்லப்பட்டு நைனாத் தீவில் ஒதுங்கிய தமிழக மீனவர்கள், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்கவும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு ஆலோசகரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
ஆலோசனையின் முடிவில், முதல்வர் தெரிவித்த விவரங்கள் அனைத்தும் இலங்கை அதிபரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிவசங்கர் மேனன் கூறினார். இலங்கைப் பயணம் முடிந்து தில்லி திரும்பும் வழியில், மீண்டும் தமிழக முதல்வரைச் சந்தித்து பேச்சுவார்த்தையின் விவரங்கள் எடுத்துரைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை: