புதன், 22 ஜூன், 2011

குத்துக்கரணம் அடித்தார் அஸ்வர் - பிரபாகரனின் குடும்பத்தினர் உயிரோடு இருப்பதாக கூறியது தவறாம்

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே.பிரபாகரனின் மனைவி மற்றும் பிள்ளைகள் உயிரோடு இருப்பதாக தவறுதலாகக் கூறி விட்டதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர்.

பின்லேடன் மனைவி,பிள்ளைகளுடன் கொல்லப்பட்டது போல பிரபாகரனின் மனைவி பிள்ளைகள் கொல்லப்படவில்லை.

அவர்களை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மனிதாபிமானத்துடன் பாதுகாத்து பராமரித்து வருகிறார்.

அவரது பிள்ளைகள் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளார் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் கூறியிருந்தார்

அவரது இந்தக் கருத்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் கூறியது தவறு என்று அஸ்வர் இன்று கூறியுள்ளார்.

ஜேவிபி தலைவர் றோகண விஜேவீரவின் மனைவி மற்றும் பிள்ளைகள் தொடர்பாகவே தான் அவ்வாறு கூற வந்ததாகவும், தவறுதலாக பிரபாகரனின் மனைவி,பிள்ளைகள் உயிரோடு இருப்பதாக கூறிவிட்டதாகவும் அவர் கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விளக்கமளித்து இன்று நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் போரின் இறுதிக்கட்டத்தில் மரணமாகி விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிந்திய தகவல்

பிரபாகரனின் மனைவி, பிள்ளைகள் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறியதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

தமிழ்ச்செல்வனின் மனைவி, பிள்ளைகள் பற்றியே தாம் கூற வந்ததாகவும் தவறுதலாக பிரபாகரன் என்று கூறி விட்டதாகவும் அஸ்வர் சமாளித்துள்ளார்.

இன்று காலை கொழும்பு ஆங்கில ஊடகத்திடம் அவர், றோகண விஜேவீரவின் மனைவி, பிள்ளைகள் என்று கூறுவதற்குப் பதிலாக பிரபாகரன் என்று கூறிவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

சில மணிநேரங்களில் அவர் அதை தமிழ்ச்செல்வன் என்று மாற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: