திங்கள், 20 ஜூன், 2011

ரஷ்யாவில் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து ஆதரவு தேடும் மகிந்தவின் திட்டம் கைகூடவில்லை

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ரஷ்யாவில் பல்வேறு நாடுகளினதும் தலைவர்களை ஒரேயிடத்தில் தனியாகச் சந்தித்துப் பேசுவதற்கு தீட்டியிருந்த திட்டம் வெற்றி பெறவில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கடந்தவாரம் ரஷ்யாவுக்கான அதிகாரபூர்வ பணயத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நேற்று கொழும்பு திரும்பினார்.

ரஷ்யாவின் சென்.பீற்றர்ஸ்பேர்க்கில் நடைபெற்ற அனைத்துலக பொருளாதார மன்றத்தின் 15வது கூட்டத்தில் பங்கேற்க வரும் வெளிநாட்டு அரசுத் தலைவர்களைச் சந்திப்பதே இவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.

சுமார் 100 வரையான நாடுகளினது தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தை, அனைத்துலக நெருக்கடிகளில் இருந்து சிறிலங்காவை விடுவிப்பதற்கான முயற்சிக்கு பயன்படுத்த மகிந்த ராஜபக்ச எண்ணியிருந்தார்.

ஆனால் ரஷ்ய அதிபர் டிமிற்றி மெட்வெடேவ், சீன அதிபர் ஹு ஜின்டாவோ, ஸ்பானிய பிரதமர் ஜோஸ் லூயிஸ் சபாட்டியோ, கசாகிஸ்தான் அதிபர் நூர்சுல்தான் நசர்பயெவ் ஆகியோரை மட்டுமே மகிந்த ராஜபக்சவினால் சந்திக்க முடிந்தது.

ரஷ்யா மற்றும் சீன அதிபர்களுடனான சந்திப்பு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது.

அத்துடன் இந்த நாடுகள் இரண்டும் ஏற்கனவே சிறிலங்காவுக்கான ஆதரவை உறுதி செய்திருந்தவையாகும்.

இவர்கள் தவிர ஸ்பானிய பிரதமரையும் கசாகிஸ்தான் அதிபரையுமே சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இவர்களுக்கே மகிந்த ராஜபக்ச நாட்டு நிலைமைகள் மற்றும் போருக்குப் பிந்திய மீள்கட்டுமானம், நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

ஆனால் இந்தச் சந்திப்புகள் முக்கியத்துவம் மிக்கதாக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவையல்ல என்றும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.

சிறிலங்கா அதிபர் எதிர்பார்த்தது போன்று பல நாடுகளின் தலைவர்களைச் சந்திக்க முடியாது போனதால், ரஷ்யப் பயணத்தின் முக்கிய நோக்கம் நிறைவேறவில்லை என்றும் அந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: