வியாழன், 9 ஜூன், 2011

இலங்கை தமிழர்கள் பாதிப்புக்கு தி.மு.க.,வும் காரணம் : சட்டசபையில் கட்சி தலைவர்கள் பேச்சு

"இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்கவும், அவர்களை பாதுகாக்கவும், தி.மு.க., எந்த ஆரோக்கியமான நடவடிக்கையும் எடுக்கவில்லை,'' என, சட்டசபையில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பேசினர்.


இலங்கை அரசு மீது, பொருளாதார தடை விதிக்க கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்ததும், பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

தமிழரசன் - இந்திய குடியரசு கட்சி: தீர்மானத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். தமிழ் மொழியையும், தமிழர்கள் பிரச்னையையும் சொந்த விளம்பரத்திற்கு சிலர் பயன்படுத்தும் நிலையில், தமிழர்களுக்கு ஆதரவான குரலை துணிவுடன் ஒலித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி. சொந்த மண்ணில் இரண்டாம் தர குடிமக்களாக இருக்கும் தமிழர்கள் பிரச்னையை அரசியலாக்கி அதில் வாழ்வோர் மத்தியில், தமிழர்கள் வாழ்வு மேம்பட கொண்டு வந்த தீர்மானத்தை முழுமையாக ஏற்கிறோம்.

கிருஷ்ணசாமி - புதிய தமிழகம்: இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை குற்றவாளி கூண்டில் ஏற்றும் வரை, தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இத்தீர்மானம், இலங்கைத் தமிழர்களின் விடுதலைக்கான திறவுகோல். தீர்மானத்துடன் நிற்காமல், இங்கிருந்து சட்டசபை குழு ஒன்றை இலங்கைக்கு அனுப்பி, உண்மை நிலையை அறிய வேண்டும்.

ஜவாஹிருல்லா - மனிதநேய மக்கள் கட்சி:உலகத்தமிழர்கள் பட்ட காயங்களுக்கு மருந்து தடவும் தீர்மானமாக அமைந்துள்ளது. பல மனித உரிமை அமைப்புகள், உண்மை கண்டறியும் குழுக்கள் விசாரித்து, ராஜபக்ஷே போர்க்குற்றம் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளன. தமிழகத்தில், தமிழர்கள் நலனை காக்கிறோம் என ஒரு ஆட்சி கடந்த காலத்தில் நடந்தது.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து, ஐ.நா.,சபை அறிக்கை வெளியிட்ட அதேநேரத்தில், அப்போதைய தமிழக ஆட்சியாளர்கள், உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றி, சில மணி நேரத்தில் முடித்தனர். இந்திய அரசு தன்னை காப்பாற்றும் என ராஜபக்ஷே நினைக்கிறார். எனவே, இந்தியா உறுதியான முடிவெடுத்து, இலங்கையுடனான ராஜ்ய உறவை துண்டிக்கவும், மத்திய அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

ரங்கராஜன் - காங்: இலங்கைத் தமிழர்களை பாதுகாக்கவே மத்திய அரசும், காங்கிரசும் விரும்புகிறது. இங்கிருந்து மருந்துகள், உடை, உணவுப் பொருட்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காகவே எங்கள் தலைவர் ராஜிவ் உயிர் நீத்தார். இந்த தீர்மானத்தை காங்கிரஸ் வரவேற்கிறது.

நஞ்சப்பன் - இந்திய கம்யூனிஸ்ட்: இந்திய அரசின் தவறான நடவடிக்கையால் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இன அழிப்பு நடந்துள்ளது. தீர்மானத்தில், "இன ஒழிப்பு' என குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறேன். போராட்டத்தை நடத்துவது விடுதலைப்புலிகளா, டெலோ அல்லது வேறு அமைப்புகளா என பார்க்கக்கூடாது. உண்மையில், ராணுவ தளவாடங்கள் கொடுத்து தமிழர்களுக்கு எதிரான போரை நடத்தியது இந்திய அரசு தான். இந்திராவும், ராஜிவும் இலங்கை பிரச்னையில் சரியான முடிவு எடுத்தனர். இப்போதைய தலைவர் அதை எடுக்கவில்லை. காங்கிரஸ் தடம் புரண்டு விட்டது. கூட்டணியில் இருந்த தி.மு.க., எதிர்க்கவில்லை. இந்திய ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு மத்திய அரசே வேட்டு வைக்கும் நிலை உள்ளது.

(இவ்வாறு அவர் பேசிய போது, காங்., சட்டசபை தலைவர் கோபிநாத் எழுந்து, "நேரில் சென்று பார்த்ததுபோல் பேசுகிறார். மத்திய அரசையும், காங்கிரசையும் தாக்கி பேசுகிறார். நாங்கள், இலங்கைத் தமிழர்களுக்காக ராஜிவை இழந்தோம். எனவே, மத்திய அரசையும், காங்.,கையும் தாக்கி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்' என்றார். ஆனால் அவர் கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை.)

குணசேகரன் - இந்திய கம்யூனிஸ்ட்: ராஜிவ் மரண சம்பவத்தில் எங்கள் தலைவர் தா.பாண்டியன் உடனிருந்து, குண்டுகாயம் பட்டார். அந்த சம்பவம் வேறு; இந்த பிரச்னை வேறு. காங்கிரஸ் உறுப்பினர் இரண்டையும் இணைக்கக் கூடாது. இலங்கைக்கு உதவி செய்த மத்திய அரசை, அவர்களுடன் கூட்டணியிலிருந்தபோதும் தி.மு.க., அரசு, போரை தடுக்க ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழர்களுக்கு துரோகம் செய்யும் கட்சி காங்கிரஸ். அதற்கு துணை நிற்கும் ஒரு கட்சி, காட்டிக் கொடுக்கும் கட்சியாக உள்ளது.

சவுந்தரராஜன் - மார்க்சிஸ்ட்: கடந்த கால ஆட்சியாளர்களுக்கு அஞ்சல் வழிதான் அரசியல் வழியாக இருந்தது. இலங்கை பிரச்னையில் முதல்வர் ஜெயலலிதா வெறும் கடிதம் எழுதி கைகழுவி விடாமல், முதல் கூட்டத்திலேயே தீர்மானம் கொண்டு வந்ததை வரவேற்கிறோம். பொருளாதார தடை விதித்தால், அங்குள்ள தமிழர்களுக்கும் எந்த பொருட்களும் கிடைக்காமல் பாதிப்பு ஏற்படும். எனவே, பொருளாதார தடை வேண்டுமா என்பதை மட்டும் தீர்மானத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.

பா.ம.க.,வின் பாராட்டு மழை : இலங்கை மீதான பொருளாதார தடையை வலியுறுத்தும் தீர்மானத்தில், சட்டசபையில், பா.ம.க., உறுப்பினர் கலையரசன் பேசும்போது, "தீர்மானத்தை முழு மனதுடன் வரவேற்கிறோம். இத்தீர்மானம் கொண்டு வந்ததற்கு முதல்வரையும், தமிழக அரசையும் வெகுவாக பாராட்டுகிறோம். சரித்திர புகழ்பெற்ற இத்தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு தெரிவிக்கிறோம். "இலங்கை பிரச்னையில் கட்சி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவரும் ஓரணியில் திரண்டு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு பாராட்டு மழை பொழிந்தார்.

http://www.dinamalar.com/


1 கருத்து:

Tamilthai சொன்னது…

வணக்கம் இணையத்தள பொறுப்பாளருக்கு.
நலமாய் இருப்பீர்கள் என்று எண்ணுகின்றோம்!
நான் தமிழ்தாய் இணைய ஆசிரியர் மாறன் .

நாம் உங்களிடம் கேட்கும் விடயம் நாம் எமது தளத்தில் உலக தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்
எனவே எமது இணையத்தை மக்களுக்கு தெரிய படுத்த உங்களின் தளத்தில் எமது தமிழ்த்தாய்.காம் link ஐ கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறான்

நன்றி
மாறன் .
http://www.tamilthai.com/