புதன், 1 ஜூன், 2011

சாய்பாபா அறையில் என்ன தான் இருக்கிறது? நீடிக்கும் ரகசியம்

சாய்பாபாவின் ஆசிரமமான பிரசாந்தி நிலையத்தில் உள்ள அவரது தனி அறையான யஜூர் மந்திரில் என்ன இருக்கிறது என்பது மர்மமாக உள்ளது.

சத்ய சாய்பாபா கடந்த மார்ச் 28-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது தனி அறையான யஜூர் மந்திர் பூட்டப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி சாய்பாபா இறந்தார். இந்நாள் வரை சாய்பாபாவின் அறை திறக்கப்படவில்லை. அதன் சாவி தற்போது சாய் அறக்கட்டளை செயலர் சக்ரவர்த்தியிடம் உள்ளது.

இதற்கிடையே யஜூர் மந்திரில் சாய்பாபாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த விலை மதிக்கமுடியாத பொருட்கள், கணக்கிலடங்கா பணம் மற்றும் நகைகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

சாய்பாபாவுக்கு நினைவிடம் கட்டுவதற்காக பிரசாந்தி நிலையத்தை 6 வார காலம் மூடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் எப்பொழுது மந்திரைத் திறப்பது, பொதுமக்கள் மற்றும் ஊடகங்களை அனுமதிப்பது தொடர்பாக நேற்று அறக்கட்டளை உறுப்பினர் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் வராததால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

யஜூர் மந்திரில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள அனைவரும் ஆவலாய் உள்ளனர். அதனால் யஜூர் மந்திரைத் திறக்குமாறு உள்ளூர் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

சாய்பாபாவின் தனி அறையை முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஊடகங்களின் முன்னிலையில் திறக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் நாகி ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: