வெள்ளி, 3 ஜூன், 2011

கோத்தாபயவுக்கு ஜேர்மனி தூதுவர் கடுந்தொனியில் எச்சரிக்கை – வெடிக்கிறது மற்றொரு இராஜதந்திர மோதல்

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக, சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு, எச்சரிக்கை விடுக்கும் வகையில்- கடும் தொனியிலான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இதன் பிரதி ஒன்றை சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில், மிகையான பலத்தை தொழிலாளர்கள் மீது பிரயோகிக்கக் கூடாது என்று பாதுகாப்புச் செயலரை எச்சரித்துள்ள ஜேர்மனி தூதுவர் ஜீன்ஸ் புளொட்னர், சிறிலங்கா காவல்துறையினர் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் எல்லைமீறி நடந்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது சிறிலங்காவில் ஜேர்மனியின் தற்போதைய மற்றும் எதிர்கால முதலீடுகளில் எதிர்மறையான பாரிய தாக்கத்தை ஏற்படக் கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள பல ஜேர்மனி நிறுவனங்கள் சிறிலங்கா காவல்துறையினரின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிரடிப் படையினர் கூட ஜேர்மனி நாட்டு நிறுவனங்களின் கட்டங்களுக்குள் புகுந்து தொழிலாளர்களைத் தாக்கியதாகவும், அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பாக சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

ஆனால் இதுபற்றிக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா அரசின் மூத்த அதிகாரி ஒருவர், ஜேர்மனி தூதுவர் புளொட்னர், இந்த விவகாரம் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கே கடிதம் எழுதியிருக்க வேண்டும் என்றும், பாதுகாப்புச் செயலருக்கு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, ஜேர்மனித் தூதுவர் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை கோத்தாபய ராஜபக்சவை பெரிதும் எரிச்சலடைய வைத்துள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, வழக்கத்துக்கு மாறாக- ஜேர்மனித் தூதுவர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எழுதியுள்ள கடிதம், கட்டுநாயக்க தாக்குதல்களால் சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதாக கொழும்பு இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: