செவ்வாய், 21 ஜூன், 2011

அறிவிக்கப்பட்ட திட்டங்கள் விரைந்து முடிக்கப்படும்: ஜெயலலிதா உறுதி

திருச்சி: ""ஸ்ரீரங்கம் தொகுதிக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, நன்றி தெரிவிப்பு சுற்றுப்பயணத்தில் வாக்காளர்களிடம் முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்தார்.

சட்டசபை தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளரை விட, 41 ஆயிரத்து 848 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றியடைந்து, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தமிழக முதல்வரானார். தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, மூன்று நாள் சுற்றுப்பயணமாக, கடந்த 19ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். நேற்று மதியம் 3.30 மணிக்கு சங்கம் ஓட்டலில் இருந்து முதல்வர் ஜெயலலிதா, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க கிளம்பினார். அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பரசம்பேட்டையில், ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு நன்றி அறிவிப்பு சுற்றுப் பயணத்தை துவக்கினார்.

தொடர்ந்து, ஜீயபுரம், எலமனூர், பெருகமணி, பெட்டவாய்த்தலை, குழுமணி, கோப்பு பாலம், எட்டரை பாலம், சோமரசம்பேட்டை என கிராமம் கிராமமாகச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, தொகுதி மக்களிடையே பேசியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் என்னை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ததால், நான் மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளேன். அதற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு, 190 கோடி ரூபாய்க்கும் மேலாக பல நலத்திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இவற்றை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும். மீண்டும் உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தனது முதல் நாள் சுற்றுப்பயணத்தை, சோமரசம்பேட்டை எம்.ஜி.ஆர்., சிலை அருகே நேற்றிரவு 7 மணிக்கு முடித்த முதல்வர் ஜெயலலிதா, அங்கிருந்து தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பினார். இரண்டாம் நாள் நன்றி அறிவிப்பு சுற்றுப்பயணத்தை, இன்று (21ம் தேதி) மாலை 4 மணிக்கு, மணிகண்டம் ஒன்றியம் புங்கனூரில் துவக்கி வைக்கும் முதல்வர் ஜெயலலிதா, இன்றிரவே திருச்சியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: