செவ்வாய், 28 ஜூன், 2011

சிறிலங்கா அதிகாரமட்டத்துக்கு பரிச்சமில்லாத ரஞ்சன் மாதாய் இந்திய வெளிவிவகாரச் செயலராகிறார்

இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலராக தற்போது பிரான்சுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும் ரஞ்சன் மாதாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது இந்திய வெளிவிகாரச் செயலராக உள்ள நிருபமா ராவின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் எதிர்வரும் ஜுலை 31ம் நாளுடன் நிறைவடையவுள்ள நிலையில் அவர் அமெரிக்காவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையிலேயே 59 வயதான ரஞ்சன் மாதாய் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1ம் நாள் இந்திய வெளிவிவகாரச் செயலராக பொறுப்பேற்கவுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு இவர் இந்தப் பதவியில் இருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் தெரிவித்தார்.
கேரளாவைச் சேர்ந்த ரஞ்சன் மாதாய் இதற்கு முன்னர் வியன்னா, கொழும்பு , வொசிங்டன், தெகரான், பிரசெல்ஸ் போன்ற நகரங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார்.

1995-1998 காலப் பகுதியில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலராகவும், பங்களாதேஸ், மியான்மர், சிறிலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளுடனான உறவுகளுக்குப் பொறுப்பாக பிரிவின் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது.

ஏற்கனவே இஸ்ரேல், கட்டார் நாடுகளிலும் இவர் இந்தியத் தூதுவராகவும், பிரித்தானியாவுக்கான பிரதி தூதுவராகவும் ரஞ்சன் மாதாய் பணியாற்றியுள்ளார்.

ஏற்கனவே இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்த ஜே.என்.டிக்சிற், சிவ்சங்கர் மேனன்,நிருபமா ராவ் போன்றோர் சிறிலங்காவுக்கான தூதுவர்களாகப் பணியாற்றியவர்கள் என்பதால், கொழும்பு அதிகாரமட்டங்களுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் ரஞ்சன் மாதாய் கொழும்பில் இந்தியத் தூதரகத்தில் இளநிலை அதிகாரியாகவே பணியாற்றிவர் என்பதால் சிறிலங்கா அதிகார மட்டங்களுடன் அவ்வளவு பரிச்சயமில்லாதவர்.

இதனால் இவரது கொழும்புடனான அணுகுமுறைகள் முன்னையவர்களை விட சற்று வேறுபட்டதாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

http://www.puthinappalakai.com/

கருத்துகள் இல்லை: