செவ்வாய், 7 ஜூன், 2011

ஆடு, மாடு வழங்கும் திட்டம் நடைமுறை சாத்தியம் எப்படி?-

"வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து, நான்கு ஆடுகளும், முக்கியமான கிராமங்களைத் தேர்வு செய்து, 60 ஆயிரம் மாடுகளும் வழங்கப்படும்' என, அ.தி.மு.க., தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டத்தை நடைமுறைபடுத்தும் வழிமுறைகள் குறித்து, அரசு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.


அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், கிராமப்புற ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக, தமிழகம் முழுவதும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாய குடும்பங்களுக்கு நான்கு ஆடுகளும், குறிப்பிட்ட கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, அதில், குடும்பத்திற்கு ஒரு மாடு வீதம், 60 ஆயிரம் மாடுகள் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இது நடைமுறையில் சாத்தியப்படாத திட்டம் என்றும், கிராமப்புற மக்களை, ஜெயலலிதா ஆடு, மாடு மேய்க்கச் சொல்கிறார் என்றும், எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்தன.ஆனால், இத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டால் தங்கள் வாழ்வை மேம்படுத்த அது பெரிதும் உதவும் என, கிராம மக்கள் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அ.தி.மு.க., அரசு அமைந்ததுமே, தேர்தல் அறிக்கையில் அறிவித்த திட்டங்களை, ஒவ்வொன்றாக செயல்படுத்த, அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.


தற்போது, விவசாய குடும்பங்களுக்கு மாடு, ஆடுகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடைமுறைகளை, அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.


இது பற்றி, துறை செயலர் ககன்தீப்சிங் பேடியிடம் கேட்ட போது, ""இது மிகப் பெரிய திட்டம். இந்த திட்டம் குறித்து இப்போது தான் பேசி வருகிறோம். திட்டம் எப்போது அமலாகும் என்ற காலவரையரையை இப்போதே முடிவு செய்ய முடியாது. இதை செயல்படுத்துவது குறித்து ஆரம்ப நிலை விவாதங்கள் மட்டுமே தற்போது நடந்து வருகின்றன,'' என்றார்.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் கே.குருமூர்த்தி, 72, கூறியதாவது: இத்திட்டம் எத்தனை ஆண்டுகளில் செயல்படுத்தப்படும், கறவை மாடுகளாக வழங்கப்படுமா, கன்றுக் குட்டிகளாக வழங்கப்படுமா என்பது தெரியவில்லை. அது போல், ஆடுகள் குட்டியாக வழங்கப்படுமா, வெள்ளாடா, செம்மறி ஆடா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எப்படி வழங்கினாலும் நன்மை தான்.இருப்பினும் இவை வகைப்படுத்தப்பட்டு, அவற்றிற்கு ஒரு விலை நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்படாவிட்டால், அவை ஊழலுக்கு வழி வகுத்து விடும். அரசு இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆடு, மாடுகள் ஒழுங்கான முறையில் வளர்க்கப்படும் போது கிராமப்புற பொருளாதாரமும் மேம்படும்.தமிழகம் முழுவதும், 22.40 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. அவர்களில் ஆடுகள் வழங்கும் வீட்டிற்கு மாடு வழங்கக் கூடாது, மாடு வழங்கும் வீட்டிற்கு ஆடுகள் வழங்கக் கூடாது. இத்தகைய நிர்ணயம் செய்யாமல், "கலர் டிவி' வழங்கப்பட்டது போல், ஆடு, மாடுகளை வீடுகளுக்கு வழங்கப்படுமானால், அவை கசாப்பு கடைகளுக்கும், கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யவுமே அதிகம் பயன்படும். எனவே இந்த விவகாரத்தில் அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு குருமூர்த்தி கூறினார்.

வி.கோபாலகிருஷ்ணன் -

http://www.dinamalar.com


கருத்துகள் இல்லை: