திங்கள், 27 ஜூன், 2011

போர்க்குற்றம் சுமத்துவோரின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் ஆதாரங்கள் உள்ளன - மிரட்டுகிறார் சவீந்திர சில்வா

சிறிலங்காவில் இருந்து தீவிரவாதம் அழிக்கப்பட்டு விட்டபோதும், அது நாடு கடந்த அளவில் பரவியுள்ளதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மட்டத்தில் வியாபித்துள்ள புலிகள் ஆதரவு சக்திகளை தோற்கடிப்பதற்கான போர் தற்போது நடந்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இது இலகுவான காரியமல்லை. ஏனென்றால் இது சிறிலங்காவுக்குள் நடக்கவில்லை.

அனைத்துலக சமூகம் மற்றும் தமது சொந்த நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் பல நடிகர்கள் இதில் தொடர்புபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் நிதியை அடையாளம் காணும் முயற்சியில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் கூறியுள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா இந்த முயற்சியில் வெற்றி பெற முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கு நேரடியாக உதவிய நாடுகள், அரசியல்வாதிகள், உதவி நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் தன்னிடம் உள்ளதாகவும், அவற்றை தான் முள்ளிவாயக்காலில் விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் காஸ்ரோவின் பதுங்குகுழியில் இருந்து கண்டெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தகவல்கள் சிறிலங்கா மீது பொய்யான போர்க்குற்றம் சுமத்தும் தரப்பினரின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.

மூன்று ஐரோப்பிய நாடுகளே விடுதலைப் புலிகளுக்கு விமானங்களையும் அவற்றுக்கான உதிரிப்பாகங்களையும் வழங்கியுள்ளன என்றும் அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20110627104155

கருத்துகள் இல்லை: