ஞாயிறு, 5 ஜூன், 2011

'சீமான்': போன், எஸ்எம்எஸ் ஆதாரங்களைக் கொடுத்த விஜயலட்சுமி!

சீமான் மீதான புகாருக்கு தொலைபேசி, எஸ்எம்எஸ் ஆதாரங்களை போலீஸில் கொடுத்தார் விஜயலட்சுமி

நாம் தமிழர் அமைப்பின் தலைவரான இயக்குநர் சீமான் மீதான புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசி பேச்சு மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை போலீஸில் கொடுத்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

சீமான் என்னைக் காதலித்தார். 3 ஆண்டுகளாகப் பழகி விட்டு இப்போது என்னைத் திருமணம் செய்ய மறுக்கிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி.

இதுகுறித்து விசாரணை நடத்த போலீஸாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். அதன்பேரில் தற்போது வளசரவாக்கம் போலீஸார் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜயலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தாரிடம் 2 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது தனக்கும், சீமானுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விஜயலட்சுமி கூறியதாக தெரிகிறது.

மேலும் சீமான் மீதான தனது புகார்களுக்கு ஆதாரமாக தொலைபேசிப் பேச்சுக்கள், எஸ்எம்.எஸ். செய்திகள் உள்ளிட்டவற்றை போலீஸாரிடம் கொடுத்துள்ளார் விஜயலட்சுமி.

இதையடுத்து இதன் அடிப்படையில் சீமானிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. மேலும் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ள சில இடங்களுக்கு நேரில் போய் விசாரணை நடத்தவும் போலீஸார் தீர்மானித்துள்ளனர்.

விரைவில் விசாரணைக்கு வருமாறு கூறி சீமானுக்கு போலீஸ் தரப்பிலிருந்து சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

தற்போது விசாரணைதான் நடந்து வருவதாகவும், விஜயலட்சுமி சொல்வது உணமையாக இருக்கும்பட்சத்தில் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவசரப்பட்டு எதையும் செய்ய மாட்டோம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: