சனி, 4 ஜூன், 2011

ஸ்பெக்ட்ரம்: தயாநிதி மாறனிடம் விரைவில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்தப்படும் என்று நாடாளுமன்றக் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து காங்கிரஸ் எம்.பி. சாக்கோ தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை இந்தக் குழு சம்மன் அனுப்பி வரவழைத்து விசாரணை நடத்தி வருகிறது.

இந் நிலையில் முன்பு தொலைத் தொடர்பு துறை அமைச்சர் பொறுப்பை வகித்த தயாநிதி மாறனிடமும் விசாரணை நடத்த இந்தக் குழு முடிவு செய்துள்ளது. இது குறித்து சாக்கோ கூறுகையில்,

தயாநிதி மாறனையும் விசாரணை பட்டியலில் சேர்த்துள்ளோம். தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது அவர் ஸ்பெக்ட்ரம் லைசென்களை ஒதுக்கீடு செய்தது தொடர்பான தகவல்களை சேகரித்து வருகிறோம்.

விரைவில் தயாநிதியிடமும் விசாரணை நடத்துவோம். நாடாராளுமன்றக் கூட்டுக் குழுவின் அடுத்தக் கூட்டம் வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் நடைபெறும். 7ம் தேதி சிபிஐ இயக்குனர் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். இந்த விவகாரத்தில் சிபிஐ இதுரவை சேகரித்துள்ள விவரங்களைக் கேட்பாம் என்றார்.

மாறனை பிரதமர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்-பாஜக:

இந் நிலையில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் பதவி விலகாவிட்டால் அவரை பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பாஜக கூறியுள்ளது.

அக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவேத்கர் நிருபர்களிடம் கூறுகையில், முறைகேடு புகாருக்கு ஆளான அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தயாநிதி மாறன் உடனடியாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும். அவராக ராஜினாமா செய்யாவிட்டால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து பிரதமர் மன்மோகன்சிங் நீக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: