வெள்ளி, 10 ஜூன், 2011

ராஜபக்சவிற்கு இது 'கூடாத' வாரம்

இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், மே 30 அன்று, ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அதில் ஒருவர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்த சம்பவமானது மகிந்தவின் அரசாங்கம் அது நாள் வரையில் ஓரளவு பேணிப் பாதுகாத்திருந்த ஒட்டு மொத்த கௌரவத்திற்கும் பாரிய இழுக்கு ஏற்பட வழிவகுத்தது.

இவ்வாறு மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவை தளமாகக்கொண்ட The Saudi Gazette என்னும் ஊடகத்தில் Feizal Samath சிறிலங்கா பற்றி எழுதியுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

அக்கட்டுரையின் முழுவிபரமாவது,

ராஜபக்சவிற்கு இது கூடாத வாரமாக மட்டும் அமைந்துவிடவில்லை. குறிப்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆறு ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டுள்ள மிகவும் வெட்கப்பட வேண்டிய விடயமாகவும் அமைந்துள்ளது.

30 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போரை முடிவிற்குக் கொண்டு வந்து வெற்றி வாகை சூடியதன் மூலம், எதிர்க்கட்சிகளைத் தோற்கடித்து மேலும் ஆறு ஆண்டு கால ஆட்சியை மகிந்த அரசாங்கம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், தற்போது அதாவது அண்மைய சில மாதங்களில், வாழ்வாதார செலவு அதிகரித்தமை மற்றும் மாதாந்த சம்பளக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பொதுத் துறை ஊழியர்களும், பல்கலைக்கழக கல்விமான்களும் அரசாங்கம் மீது அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை உள்ளடக்கிய அரசாங்கத்தின் பரிந்துரையை எதிர்த்து கடந்த வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் ஆர்ப்பாட்டங்களின் போது காவற்துறையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர்.

"இது சிறிலங்கா அதிபருக்கான கூடாத வாரமாக அமைந்துள்ளது. அதாவது பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்டவற்றுள் அதிபர் மகிந்தவின் பெயருக்கு இழுக்கு ஏற்பட்ட ஒன்றாகவே இது அமைந்துள்ளது" என பெயர் குறிப்பிட விரும்பாத உள்ளுர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்காப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரானது மே 2009 ல் முடிவிற்கு வந்ததன் பின்னர் கூட, தற்போதும் அரசாங்கம் தொடர்பான விமர்சனங்களைக் கூற முன்வரும் மனித உரிமை ஆர்வலர்கள், சுயாதீன பத்திரிகையாளர்கள், பொது மக்கள் போன்றோர்; தமது பெயர்களை வெளிப்படுத்த ஒருபோதும் விரும்புவதில்லை.

கடந்த இரு வாரங்களாக, சிறிலங்காவின் சிறுபான்மைச் சமூகமான தமிழர் வாழிடங்களில் அவர்களுக்கான அதிகாரங்கள் காலதாமதமின்றி பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என இந்தியா, சிறிலங்கா அரசாங்கத்தை அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.

சிறிலங்காவில் இடம்பெறும் இனப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமான அதிகாரப் பகிர்வானது வடபகுதிக்கு மிகவும் இன்றியமையாத ஒன்று எனவும் அதனை வழங்க சிறிலங்கா அரசாங்கம் ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் இந்தியாவிற்கு அண்மையில் பயணம் செய்திருந்த சிறிலங்காவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜி.எல்.பீரிசிடம் டில்லி அரசாங்கம் கேட்டுள்ளது.

இந்நிலையில் சிறிலங்கா இந்தியாவிடமிருந்து எதிர்பார்த்த விடயத்தை பீரிசால் வெளிப்படுத்த முடியாதிருந்தது. இதைப் போலவே, தமிழர்களுக்கு அதிகாரங்களைக் கூடுதலாகக் கையளிக்கும்போது தமது ஆதரவு என்றும் சிறிலங்காவிற்குக் கிடைக்கும் என கடந்த வாரம் இந்தியாவிற்கு பயணம் செய்திருந்த மகிந்தவின் இளைய சகோதரரும், சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்சவிடம் டில்லி நிர்வாகம் கோரியிருந்ததால் இவரது பயணமும் தோற்றுப் போனது.

தென்னிந்தியாவில் வாழும் தமிழ் மக்களுக்கும் சிறிலங்காவின் வடக்கில் வாழும் தமிழ் மக்களுக்கும் இடையில் கலாசார ரீதியாக நல்லதொரு தொடர்புநிலை பேணப்படுவதுடன், இவ்விரு சமூகத்தவர்களும் வெறும் 18 கி.மீற்றர் நீளமான பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சிறிலங்கா அரசாங்கமானது தமிழர்களின் நலனை அதிகம் கருத்தலெடுத்துச் செயற்படும் பட்சத்தில் மட்டுமே, அவர்களுக்கான இராணுவ ரீதியிலான ஆதரவுகளையோ அல்லது பொருளாதார ரீதியிலான ஆதரவுகளையோ வழங்க இந்தியா முன்வரும் என அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தியாவின் ஆதரவைப் பெறும் முயற்சியில் மகிந்த ராஜபக்ச ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில், மே 30 அன்று, ஆர்ப்பாட்டப் பேரணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது சிறிலங்கா காவற்துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு அதில் ஒருவர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்த சம்பவமானது மகிந்தவின் அரசாங்கம் அது நாள் வரையில் ஓரளவு பேணிப் பாதுகாத்திருந்த ஒட்டு மொத்த கௌரவத்திற்கும் பாரிய இழுக்கு ஏற்பட வழிவகுத்தது.

அதாவது தனியார்துறை ஊழியர்களுக்கான ஒய்வூதியக் கொடுப்பனவு தொடர்பாக சிறிலங்கா அதிபரால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் எந்தவொரு கலந்தாலோசனைகளும் இன்றி மிக வேகமாக முன்னகர்த்தப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

இந்தப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தற்காலிகமானதாக அல்லாமல் நிரந்தரமானதாக அமைந்திருந்தமை பொதுத் துறை ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய பிரச்சினையைத் தோற்றுவித்திருந்தது.

பொதுத் துறை ஊழியர்கள் ஏற்கனவே அரச கட்டுப்பாட்டு சேம நிதிக்காக மாதந்தோறும் அவர்களது சம்பளத் தொகையிலிருந்து எட்டு வீதத்தை வழங்கிவருகின்றனர். இதில் மேலும் இரண்டு வீதத்தை தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்திற்காக வழங்க வேண்டும்; என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்தே சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது.

வர்த்தக சங்கத்தினரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் வாய்மொழி மூலம் இடம்பெற்ற விவாதத்தை அடுத்து, கொழும்பிற்கு வடக்காக 30 கி.மீற்றர் தொலைவிலுள்ள கட்டுநாயக்க விமான நிலையச் சுற்றாடவில் அமைந்திருந்த சுதந்திர வர்த்தக வலயத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரு வார கால ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் இது இளம் ஊழியர் ஒருவரது சாவுடன் முடிவிற்கு வந்தது.

எதிர்பார்க்கப்படாத இந்த ஊழியரின் மரணமானது, சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மேலும் இறுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது. இவ்வாறான பொதுமக்களின் எதிர்ப்பலைகளால் ராஜபக்ச முதன்முதலாக, தன்னால் பரிந்துரைக்கப்பட்ட தனியார்துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தியுள்ளார்.

இதற்கப்பால், அதே வாரம் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் சிறிலங்காப் படைவீரர்களால் மிகவும் காடைத்தனமாகக் கொல்லப்பட்ட புலிகள் தொடர்பான காட்சிகளை உள்ளடக்கிய காணொலி ஒன்றும் காண்பிக்கப்பட்டதுடன், அது தொடர்பான பல கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கும் சிறிலங்கா அரசாங்கம் தள்ளப்பட்டிருந்தது.

இக்கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட உயர் அதிகாரத்தைக் கொண்ட பிரதிநிதி, சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பாக ஏனைய நாடுகளின் பிரதிநிதிகளால் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது திணறினார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது படையினரால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டமை போன்றவற்றை உள்ளடக்கிய சிறிலங்கா அரசாங்கத்தின் போர்க் குற்றச்சாட்டுக்களிற்கு எதிராக சுயாதீன விசாரணைகள் எவ்வித காலதாமதமும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டும் என மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது மிகப் பெரும் அழுத்தங்களைச் சுமத்தி நிற்கின்றன.

இதனை ராஜபக்ச எதிர்த்து நிற்பதுடன், சீனா, பாகிஸ்தான், ஈரான், லிபியா போன்றவற்றை தனக்கான புதிய நண்பர்களாக இணைத்துள்ளார். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்றவற்றால், ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் பொய் என நிரூபிப்பதற்காகவே தற்போது புதிய கூட்டாளிகள் இணைக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்காப் படைகள் யுத்த வெற்றியைப் பெற்றுக் கொள்வதற்காக எவ்வாறான தந்திரோபாயங்களைப் பின்பற்றினர் என்றும் அதில் அவர்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் தொடர்பாகவும் கலந்தாலோசிப்பதற்காக கூட்டப்பட்ட இராணுவக் கருத்தரங்கானது இதில் கலந்து கொண்ட பல மேற்குல நாடுகளின் பிரதிநிதிகளை அதிருப்திக்கு உள்ளாக்கியிருந்தது.

நாட்டின் உயர் நீதி பேண் அதிகார அமைப்பாக உள்ள உயர் நீதிமன்றின் பிரதம நீதியரசராக தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சிராணி பண்டாரநாயக்காவின் நியமனம் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டு நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்ற ஊடகவியலாளர்களால் விமர்சிக்கப்படுவதானது ராஜபக்ச அரசாங்கம் மீது ஏவப்பட்டுள்ள மற்றுமொரு ஏவுகணையாக உள்ளது.

அரசாங்கத்தால்; நியமிக்கப்பட்ட ஒரு அரச வங்கியின் பொறுப்பதிகாரியாக சிரானியின் கணவர் கடமையாற்றுவதால், இவரது நீதித்துறை சார் சுதந்திரம் கேள்விக்குள்ளாகியுள்ளது.

அரசியல் செல்வாக்கைக் கருத்திலெடுத்து கடந்த காலங்களில் நியமிக்கப்பட்ட சில நீதிபதிகளின் செயற்பாடுகளால், சிறிலங்காவின் நீதியானது கேள்விக்குறியாகி நிற்கும் இந்நிலையில் சிராணியின் நியமனமும் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சாவிற்கு இது ஒரு கூடாத வாரமாகவே அமைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: