வியாழன், 9 ஜூன், 2011

ஜெயலலிதாவுடன் சிவசங்கர் மேனன் சந்திப்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றபோதிலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு குறித்து முதல்வர் ஜெயலலிதாவுடன் சிவசங்கர் மேனன் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கும் தீர்மானம் மற்றும் கச்சத்தீவை மீட்கும் வழக்கில் தமிழக வருவாய் துறையையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொள்ளும் தீர்மானம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மேனனின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதனிடையே ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையினால் இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்துள்ள நிலையில்,தம்மை இந்த நெருக்கடியிலிருந்து விடுவிக்க இந்திய அரசின் உதவியை கோரி வருகிறது இலங்கை.

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியை பயன்படுத்தி, இந்தியாவுக்கு சாதகமான சில திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோர் அடங்கிய இந்திய உயர்மட்டக் குழு நாளை கொழும்பு செல்கிறது.

இந்திய உயர்மட்டக் குழுவின் இரண்டு நாள் பயணத்தின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து, இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு சாதகமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க இலங்கையை இந்தியக் குழு நிர்ப்பந்திக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் இன்று தமிழக முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார் சிவசங்கர் மேனன்.

கருத்துகள் இல்லை: