புதன், 22 ஜூன், 2011

பிரபாகரன் மனைவி மகள் உயிருடன் உள்ளனர்-இலங்கை பாராளுமன்றத்தில் தகவல்

கொழும்பு: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி மற்றும் மகள் உயிருடன் உள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தில் அந்நாட்டு ஆளும்கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கையில் தனி ஈழம் அமைக்க 30 ஆணடுகளுக்கும் மேல் போராடியவர் தேசியத் தலைவர் என்று போற்றப்படும் பிரபாகரன். கருணா, கேபி, இந்தியா உள்ளிட்ட சில வல்லரசுகளின் சதியால் இந்தப் போராட்டம் தோல்வியில் முடிந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது. ஆனால் இதுகுறித்து இன்னும் பலத்த சர்ச்சை நிலவுகிறது. பிரபாகரன் உயிருடன் பத்திரமாக இருப்பதாகவும், மீண்டும் அவர் ஈழப்போரை நடத்த வருவார் என்றும் விடுதலைப் புலிகள் இயக்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இறுதிக்கட்ட ஈழப்போரின் போதுமட்டும் 3 லட்சம் அப்பாவி தமிழர்களும், போராளிகளும் அழிக்கப்பட்டுள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது. கடைசி சில தினங்களில் மட்டுமே 1.5 லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிருடன் பிடிபட்டவர்களில் ஏராளமானவர்கள் கதி என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை. இறுதிப் போரின்போது பிரபாகரன் மகன் சார்லஸ் கொல்லப்பட்டார்.

ஆனால் அவரது மனைவி மதிவதனியும், குழந்தைகள் பாலச்சந்திரன், துவாரகாவும் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை.

உயிருடன் உள்ளனர்...

இறுதிக்கட்ட போர் நடந்தபோது அவர்கள் இலங்கையில் இருந்து பத்திரமாக வெளியேறி விட்டதாகவும், வெளிநாடு ஒன்றில் பாதுகாப்புடன் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் பிரபாகரன் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, மகன் பாலசந்திரன் மூவரும் உயிருடன் இருப்பதாக இலங்கை பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி. ஏ.எச்.எம். அஸ்கர் தெரிவித்தார். இவர் இலங்கை அதிபர் ராஜபக்சேவின் முன்னாள் ஆலோசகர்.

அஸ்கரிடம் மற்ற எம்.பி.க்கள் இது தொடர்பாக மேலும் பல கேள்விகளை கேட்டனர். அதற்கு அவர், பிரபாகரன் குடும்பத்தினர் உயிருடன் இருப்பது எனக்கு உறுதியாக தெரியும் என்றார். ஆனால் பிரபாகரன் மனைவி, மகள், மகன் எந்த நாட்டில் உள்ளனர்? இந்த தகவல் எப்படி கிடைத்தது? என்பன போன்றவற்றுக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்றார்.

போர்க்குற்றத்திலிருந்து தப்பிக்க சதியா...?

இத்தனை நாட்கள் கழித்து இப்போது திடீரென பிரபாகரன் மனைவி பிள்ளைகள் உயிருடன் இருப்பதாக இலங்கை அரசு கூறுவது, சர்வதேச நாடுகள் தரும் போர்க்குற்ற நெருக்கடியிலிருந்து தப்பிக்கவே என தமிழர் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிவதனியும் குழந்தைகளும் உயிருடன் இருப்பதாக செய்தி வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே கூறப்பட்ட ஒன்றுதான். இப்போது அவர்கள் மூலம் தன் மீதான குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு முயற்சிக்கிறது. எனவே உலகத் தமிழர்களும் சர்வதேசத்தினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என தமிழர் அமைப்புகள் கூறியுள்ளன.

http://thatstamil.oneindia.in

கருத்துகள் இல்லை: