செவ்வாய், 7 ஜூன், 2011

சிறிலங்காவிற்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயத்தை இந்தியா ஆதரிக்கவில்லை: ஜி.எல்.பீரீஸ்

இலங்கையில் நடந்த போரில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்க அரசிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என்ற சில நாடுகளின் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கவில்லை என்று சிறிலங்க அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் கூறியுள்ளார்.

அமைச்சர் ஜி.எல்.பீரீஸின் இந்தியப் பயணத்தின்போது சிறிலங்க அரசுக்கு இந்திய அரசு கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளது என்பது இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிகிறது என்று ஜனதா விமுத்தி பெரமுணா கட்சியின் உறுப்பினர் அனுரா குமார திஸ்ஸநாயகா குற்றம் சாற்றினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பீரீஸ் இவ்வாறு கூறியுள்ளார். அதுமட்டுமின்றிஇ சிறிலங்க அரசிற்கு எதிராக ஐ.நா.நிபுணர் குழு அளித்த பரிந்துரை குறித்து விவாதிக்கவே தான் டெல்லிக்கு பயணம் செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். டெல்லி பயணத்தில் ஐ.நா.அறிக்கை குறித்து விவாதித்ததாக இரு நாடுகளும் அளித்த கூட்டறிக்கையில் ஒரு வரி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

'ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையைக் கண்டித்து இந்தியா அறிக்கை விடவேண்டும் என்று ஒருபோதும் நாம் எதிர்பார்க்கவில்லை. நாம் அந்த அறிக்கையை நிராகரித்துவிட்டோம். இதேபோல் மற்ற நாடுகளும் அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று அறிக்கை விட்டால் அதுவே அந்த அறிக்கைக்கு தேவையற்ற முக்கியத்துவத்தை ஏற்படுத்திவிடும். இந்த அறிக்கைக்கும்இ ஐ.நா.அவைக்கும் எந்த தொடர்பும் இல்லை இது ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த குழுவின் அறிக்கை மட்டுமே' என்று பீரீஸ் கூறியுள்ளார்.

'சிறிலங்க அரசிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சில நாடுகள் வலியுறுத்தின ஆனால் அதை இந்தியா ஆதரிக்கவில்லை. அது நமக்குத் திருப்தியளிக்கிறது. நமக்கு ஆதரவு தேடவே டெல்லி சென்றேன். ஏனென்றால் நமக்கு எதிரான பிரச்சனைகள் ஐ.நா.விலு ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் விவாதிக்கப்படுகின்றன என்பதால்' என்று பீரீஸ் கூறியுள்ளார்.

இந்தியாவிடம் ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை விவாதித்ததுபோல் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பில் உள்ள 22 நாடுகளின் பிரதிநிதிகளுடன் விவாதித்ததாகவும் பீரீஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: