திங்கள், 20 ஜூன், 2011

கனிமொழி பிணைய விடுதலை மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சதித் திட்டம் தீட்டியதில் உடந்தையாக செயல்பட்டார் என்று குற்றஞ்சாற்றப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் பிணைய விடுதலை மேல் முறையீட்டு மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

தன்னை பிணையில் விடுதலை செய்யுமாறு கனிமொழி தாக்கல் செய்த மனு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை விசாரித்துவரும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்தாலும், பிறகு டெல்லி உயர் நீதிமன்றத்தாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு வந்த ரூ.200 கோடி பணம், கடனாகப் பெற்றுதுதான் என்று கனிமொழி சார்பாக வாதிடப்பட்டது. அது ஸ்வான் டெலகாம் நிறுவனத்திற்கு முறைகேடாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு அளிக்கப்பட்ட இலஞ்சம்தான் என்று மத்திய புலனாய்வுக் கழகம் வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பி.எஸ்.செளஹான், ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் கொண்ட நீதிமன்றக் குழு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்து முடிக்கும்வரை பொறுத்திறுக்குமாறும், அதன் பிறகு விசாரணை நீதிமன்றத்திலேயே பிணைய விடுதலை மனுவை தாக்கல் செய்யலாம் என்று கனிமொழியையும், கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண் இயக்குனர் சரத் குமாரையும் கேட்டுக்கொண்டது.

தான் ஒரு பெண் என்பதற்காக தன்னை பிணைய விடுதலை செய்ய வேண்டும் என்று கனிமொழி கருதினால் அவர் வழக்கை விசாரிக்கும் ம.பு.க. நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 437இன் கீழ் மனு தாக்கல் செய்து சட்ட நிவாரணம் பெறலாம் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். குற்றப் பத்திரிக்கைத் தாக்கல் செய்து முடித்தப்பிறகு கனிமொழி, சரத் குமார் ஆகியோர் மீண்டும் பிணைய விடுதலை மனு தாக்கல் செய்தால், அதனை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட அவர்களின் மனுக்களோடு இணைத்துப் பார்க்காமல், புதிய மனுவாக ஏற்று விசாரிக்குமாறும் ம.பு.க. சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 437இன் படி, பிணையில் விடுதலை செய்ய முடியாத குற்றங்கள் செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நபர், 16 வயதிற்கு உட்பட்டவராகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது சீக்காளியாகவோ அல்லது துணையின்றி நடந்து செல்ல இயலாதவராகவோ இருந்தால் பிணைய விடுதலை வழங்கலாம் என்று கூறுகிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிணைய மனு விசாரணை செய்யப்பட்டபோது தான் பெண் என்பதை கருத்தில் கொண்டு பிணைய விடுதலை செய்ய வேண்டும் என்று கனிமொழி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் அதனை ம.பு.க. தரப்பு எதிர்த்ததால் அவருக்கு அந்த அடிப்படையில் பிணைய விடுதலை கிடைக்கவில்லை.

http://tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: