திங்கள், 20 ஜூன், 2011

சிறிலங்காவின் உதவியுடன் கேரளக் கடலில் நடமாடும் சோமாலியக் கடற்கொள்ளையர் – பயணிகள் கப்பலுக்கு ஆபத்து

சிறிலங்கா கடற்படையின் உதவியுடன் இந்தியக் கடற்பகுதியில் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மீண்டும் நடமாடத் தொடங்கியுள்ளதாக இந்திய இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக தூத்துக்குடி- கொழும்பு பயணிகள் கப்பல் சேவைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

கேரள கடற்பகுதியில் திருவனந்தபுரத்துக்கு அப்பால் சென்று கொண்டிருந்த கப்பல்களை கடத்த சோமாலிய கடற்கொள்ளையர்கள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் தொடர்பாக இந்திய கடற்படையும், கடலோரக் காவல்படையும் கவலையடைந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை காலை 8.11 மணியளவில் திருவனந்தபுரத்துக்கு மேற்கே 28 கி.மீ தொலைவில் கப்பல் ஒன்றை கடத்தும் முதலாவது முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் இருந்து கிடைத்த தகவலை அடுத்து இந்தியக் கடற்படை உலங்குவானூர்தி ஒன்று அந்த இடத்துக்கு அனுப்பப்பட்டதாக லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக கடல்சார் பிரிவு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா கடற்பகுதியையே சோமாலியக் கடற்கொள்ளையர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்ற சந்தேகத்தை இது உறுதி செய்வதாகவும் இந்திய இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

சோமாலியக் கடற்கொள்ளையர்களினால் அந்தமானுக்கு பயணம் மேற்கொள்ளும் தனியார் படகுகளுக்கும், கொழும்பு- தூத்துக்குடி பயணிகள் கப்பல் சேவைக்கும் ஆபத்து ஏற்படுக் கூடும் என்றும் அந்த இணைத்தளம் தெரிவித்துள்ளது.

சோமாலியக் கடற்கொள்ளையர்களுக்கு சிறிலங்கா கடற்படையினர் உதவி செய்து வருவதாக ஏற்கனவே இந்தியா தரப்பில் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com

கருத்துகள் இல்லை: