வெள்ளி, 10 ஜூன், 2011

காங்கிரஸ் கூட்டணி: கருணாநிதி முடிவு என்ன?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை அறிவாலயத்தில் இன்று மாலை, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.

தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, ராஜ்யசபா எம்.பி.,யும், தி.மு.க., தலைவர் கருணாநிதி மகளுமான கனிமொழி ஆகியோர், ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி, டில்லி திகார் சிறையில் உள்ளனர். ஜாமின் வழங்கக் கோரி கனிமொழி, டில்லி ஐகோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, அரசியல் செல்வாக்கு மிகுந்த கனிமொழி, வெளியில் சென்றால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். இது, தி.மு.க.,வினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி கைதாகி சிறையில் வாடுவது, அவரது தந்தை கருணாநிதிக்கு மன வேதனையை அளித்துள்ளது. மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால், கனிமொழி கைதை தடுத்திருக்க முடியும் என்ற எண்ணம், தி.மு.க., தலைவரிடம் மட்டுமின்றி, தொண்டர்களிடமும் உள்ளது. கடந்த வாரம் திருவாரூரில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில், கருணாநிதி பேசும்போது, தன் மன வேதனையை வெளிப்படுத்தினார். "திகார் சிறையில் ஒரு பூவை வைத்தால், 15 நிமிடங்களில் வாடிவிடும். அந்த அளவிற்கு வெப்பம் உள்ளது. அங்கு என் மகள் கனிமொழி வாடுகிறார்; மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை' என, தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது, டில்லி ஐகோர்ட், கனிமொழி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்திருப்பது, கருணாநிதியின் கவலையை அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய, முடிவு செய்துள்ளனர். இதற்காக, துரைமுருகன் நேற்று முன்தினம், டில்லி புறப்பட்டு சென்றார். தேர்தலுக்கு முன்னதாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கட்சியினர் கைதாவதை தடுக்க, மத்திய அரசில் இடம் பெற்றிருப்பது அவசியம் என, தி.மு.க.,வினர் கருதினர். அதற்காகவே, தேர்தலின் போது காங்கிரஸ் இழுத்த இழுப்பிற்கெல்லாம், தி.மு.க., சென்றது. அவர்கள் கேட்ட இடங்களைக் கொடுத்தனர்; தமிழகத்தில் ஆட்சியையும் பறி கொடுத்தனர். கனிமொழி கைதாவதையும் தடுக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்ற கேள்வி தி.மு.க.,வினரிடையே எழுந்துள்ளது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பதவிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த நெருக்கடியால், தி.மு.க., தலைமை செய்வதறியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழுவின் அவசரக் கூட்டம், இன்று மாலை 4.30 மணிக்கு, சென்னை அறிவாலயத்தில் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு பின், கடந்த மாதம் 30ம் தேதி, தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடந்தது. இரண்டாவது முறையாக இன்று நடைபெற உள்ளது. கூட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொதுச் செயலர் அன்பழகன், பொருளாளர் ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களாக 28 பேர் உள்ளனர். கூட்டத்தில், மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து நீடிப்பது தொடர்பாகவும், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யவும், தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படாததைக் கண்டித்து, போராட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தி.மு.க., உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் முடிவை, அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

http://www.dinamalar.com

கருத்துகள் இல்லை: