திங்கள், 6 ஜூன், 2011

ஆசிய நாடுகளும் கைவிட்டதால் கவலையில் சிறிலங்கா - கொழும்பு வார இதழ்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் அயலில் உள்ள இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவும் தமக்கு ஆதரவாக கருத்து வெளியிடாதது சிறிலங்கா அரசைப் பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில் சிறிலங்கா பெரும் நெருக்கடி ஒன்றை சந்திக்கவுள்ளது.

இதன்போது இந்தியாவின் ஆதரவு சிறிலங்காவுக்கு மிகவும் முக்கியமான தேவையாக இருக்கிறது.

ஆனால், இப்போது நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் இந்தியா, பங்களாதேஸ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் தமக்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் வெளியிடாமல் மௌனமாக இருந்து வருவது சிறிலங்காவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இது அடுத்த கூட்டத்தொடர் பற்றிய அச்சத்தை சிறிலங்காவுக்கு ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு வாரஇதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, ஜெனிவாவில் நடைபெறும் கூட்டத்தொடரில் பங்கேற்கும் சிறிலங்கா அமைச்சர்கள் நிமால் சிறிபால டி சில்வா, மகிந்த சமரசிங்க, சட்டமாஅதிபர் மொகான் பீரிஸ், பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலக ஆகியோர் கடந்தவாரம் முழுவதும் தமக்கு ஆதரவு தேடி இரவுபகலாக பரப்புரைகளை மேற்கொண்டுள்ளனர்.

கடந்தவாரம் முழுவதும் இந்த நால்வரும், அதிகாலை தொடங்கி பின்னிரவு வரை மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் 47 நாடுகளினதும் பிரதிநிதிகளைச் சந்தித்து, கைகுலுக்கி நண்பர்களைத் தேடுவதிலேயே ஈடுபட்டிருந்ததாகவும் கொழும்பு வார இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காணொலிப் பதிவு தொடர்பான, அனைத்துலக விசாரணைகளைக் கோரும் தீர்மானம் கொண்டு வரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே, இவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் கொழும்பு வாரஇதழ் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: