திங்கள், 6 ஜூன், 2011

என் மகள் கனிமொழி கைதாகி, சிறையில் வாட மத்திய அரசுதான் காரணம்-கருணாநிதி

ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில். அப்படிப்பட்ட இடத்தில், அந்த திஹார் சிறையில் இருக்கிறார் என் மகள் கனிமொழி. இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார் என் மகள் கனிமொழி என்று கூறியுள்ளார் தி்முக தலைவர் கருணாநிதி.

திருவாரூரில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு கருணாநிதி பேசியதாவது:

நான் முதன் முதலாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா ஆணையிட்ட போது குளித்தலையில் போட்டியிடு என்று கட்டளையிட்டார். அங்கு நான் வெற்றி பெற்ற போது பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட இன்று திருவாரூர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெற செய்துள்ளீர்கள். என்னை முதல்வராக ஆக்க வேண்டும் என்றும் பல்வேறு தொகுதிகளில் வாக்கு அளித்தவர்களும், வாக்கு அளிக்க நினைத்தவர்களுக்கும், வாக்கு அளிக்க இயலாதவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் ஏமாற்றி விட்டார்கள்

தமிழக மக்கள் என்னை ஏமாற்றினாலும், திருவாரூர் தொகுதி மக்கள் எனக்கு தூக்க முடியாத சுமையை ஏற்றி உள்ளனர். அது சுமையாக இருந்தாலும் சுகமான சுமையாக இருக்கிறது.

56, 67-ல் நடந்த தேர்தல்களில் நான் இங்கு போட்டியிட வேண்டும் என்று விரும்பினாலும், அப்போது இருந்த அரசியல் பிரமுகர்கள் வேண்டும் என்றே இந்த தொகுதியை தனித்தொகுதியாக ஆக்கி போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தினார்கள். அதன் காரணமாக இவ்வளவு காலம் காத்திருந்து போட்டியிட்ட என்னை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளீர்கள்.

நான் நீங்கள் விரும்பியபடி முதல்வராக ஆகவில்லை என்றாலும் உங்கள் எம்.எல்.ஏ.வாக ஆகி விட்டேன். ஒரு எம்.எல்.ஏ.வாக செய்ய வேண்டிய பணியை உங்களுக்கு நான் நேரடியாக ஈடுபட்டோ அல்லது தி.மு.க.வின் முக்கிய பிரமுகர்களை வைத்தோ செய்து தருவேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.

தி.மு.க. இந்த தேர்தலில் தோற்று விட்டது என்று யாராவது சொன்னால் நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது தோற்பது திராவிட இயக்கத்தின் உணர்வு, கொள்கைகள் அல்ல. அவைகளை மேலும் கூர்மைப்படுத்தி, வலிமைப்படுத்த இந்த தோல்வி அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதிய ஆட்சி வந்திருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். புதிய ஆட்சியில் கவர்னர் உரை வந்திருக்கிறது. அந்த கவர்னர் உரையை நான் சட்டமன்றத்திற்கு செல்லாவிட்டாலும், வாங்கிய தோழர்கள் மூலமாக படித்து பார்த்தேன். கவர்னர் உரையை கூட நின்று நிதானமாக, அச்சுப் பிழையின்றி, தயாரிக்கிற பொறுமை இந்த ஆட்சிக்கு இல்லை என்பது கவர்னர் உரையை படிக்கும் போதே தெரிகிறது. பிழை திருத்தும் பணி சரியாக நடைபெறவில்லை. பேரறிஞர் என்பதற்கு பேராறிஞர் என்று அச்சு கோர்க்கப்பட்டு உள்ளது.

அந்த புத்தகத்தில் 2-ம் பக்கத்தில் 3-வது பாராவில் அவர்களை அறியாமலே ஒரு உண்மையை குறிப்பிட்டுள்ளனர். அதில் இந்த புதிய அரசும் ஏழைகளின் நலனையே முன்னிறுத்தி செயல்படும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அப்படி என்றால் பழைய அரசும் அப்படிதான் செயல்பட்டது. புதிய அரசும் அதை முன்னிறுத்தி செயல்படும் என்று தங்களை அறியாமலேயே தெரிவித்து உள்ளனர். அந்தப் பிழையை, பிழை என்று பாராமல் நான் நமக்கு கிடைத்த பாராட்டு என்று தான் எடுத்துக் கொள்வேன்.

தமிழ் மொழியின் பெருமையை உலகம் அறிய செய்வோம் என்று கூறிப்பிட்டு உள்ளனர். பழைய சட்டமன்ற கட்டிடத்தில் செம்மொழி மைய அலுவலகம், நூலகம் இருந்தது. அது என்ன ஆகி விட்டது என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், வெள்ளைக்காரன் காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எவ்வளவு காலம் தான் சட்டமன்றம் செயல்படும் என்று சிலர் கேள்வி கேட்டனர். இதையடுத்து புதிய சட்டமன்றம் கட்டினோம்.

அந்த கட்டிடத்தை பற்றி பாராட்டாத ஏடுகளே கிடையாது. அந்த கட்டிடத்துக்கு கிடைத்த புகழை, நசுக்க, சீரழிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக அந்த இடத்தையே மாற்றி பழைய முறையிலேயே சட்டமன்றம் நடக்கும் என்று கூறினால் அதற்கு என்ன பெயர். மாற்றம் வரும், மாற்றம் வரும் என்று சொன்னார்கள். இந்த மாற்றம் தானா. இப்படிப்பட்ட மாற்றத்தை தான் தமிழர்கள் விரும்பினார்களா என்பதற்கு பதில் வேண்டாமா. மாற்றம் வேண்டும் என்பது காலாகாலமாக கூறி வருவது. அந்த மாற்றம் ஏற்பட்டே தீரும்.

வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற திட்டம் போட்டு முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படும் என அறிவித்து அவ்வாறே 3 லட்சம் வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தையும் கைவிடப்படுவதாக அறிவித்தால் நியாயம் தானா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

குடிசை வீடுகளில் யார் இருக்கிறார்கள். சீமான்களா, பணக்கார அதிபர்களா? மிட்டா மிராசுகளுக்காகவா, மாடமாளிகையில் இருப்பவர்களுக்காக இல்லை. குடிசைகளில் உள்ள பாட்டாளி, பாட்டாளியின் மனைவி, குழந்தைகளுக்காக இந்த திட்டத்தை அறிவித்து ஆண்டுதோறும் இந்த திட்டத்திற்கு உதவித்தொகையை உயர்த்தி அறிவித்து வந்துள்ளேன். முதலில் ரூ.75 ஆயிரம் அதன் பின்னர் 1 லட்சத்து 25 ஆயிரம் என்றெல்லாமல் உயர்த்தினேனே அந்த பெரும் திட்டத்தை கைவிடுகிறேன் என்று இந்த அரசு கூறி உள்ளது.

தேர்தல் என்பதற்காக இலவச திட்டங்களை நாங்கள் அறிவிக்கவில்லை. தொடர்ந்து எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டம். இது நீண்ட கால திட்டம். தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டம் என்பதை யாரும் மறுக்க முடியாது. இலவச மின்சாரம் தி.மு.க. ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. இடையில் சில பிரச்சினை காரணமாக மின் பற்றாக்குறை ஏற்பட்டது. அதற்கான தடங்கல்களை மக்கள் சிரமப்பட்டு ஏற்றுக்கொண்டார்கள்.

திமுகவை அழிக்க முடியாது

தி.மு.க.வை இது போன்ற செயல்பாடுகளால், இது போன்ற நிகழ்வுகளால் வீழ்த்தி விடலாம் என்று எண்ணிப்பார்ப்பவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

என்னைப்பற்றி, எனது மகன்களை, மகள்களை பற்றி, பேரன்களை பற்றி பல்வேறு செய்தி வந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் கருத்து விஷமாகி திராவிட இயக்கம் என்ற அந்த சொல்லையே வீழ்த்தி விடலாம் என்று. திராவிட இயக்கம் என்ற சொல்லை அழித்து விட, வீழ்த்தி விட எந்த கொம்பனும் பிறக்கவில்லை.

எனது மகள் கனிமொழி டெல்லி திகார் சிறையில் உள்ளார். எனது மூத்த மகள் செல்வி இங்கு வந்துள்ளார். அவர் திருவாரூர் தொகுதியில் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். அவரின் உழைப்பை யாரும் மறக்க முடியாது. செல்வியோடு, கனிமொழியும் ஊர், ஊராக சென்று பிரசாரம் செய்து தி.மு.க.வின் வெற்றிக்காக பாடுபட்டார். ஆனால் அவர் இன்று மத்திய அரசின் உத்தரவாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு காரணத்தாலோ சிறையில் உள்ளார்.

வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை. கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடி விடும்

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார். திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன். ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்.

அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் செல்வியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப் பெற்றிருக்கின்றோம்.

ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது, எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்காக பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.

அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு, கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது. இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.

வேதனையைப் பகிர்ந்து கொள்கிறேன்

வேதனையை பகிர்ந்துகொள்வதற்காக நான் வரவில்லை. நீங்கள் எனது சகோதரர்கள், சொந்தக்காரர்கள் என்பதால் உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

திராவிட இயக்கத்தின் லட்சியத்திற்காக, கொள்கைக்காக, எந்த காரியம் செய்ய வேண்டுமோ? அதை செய்துவிட்டுத்தான் மறைவேன் என்று உங்களிடம் கூறி விடைபெற்றுக்கொள்வதற்காகத்தான் வந்தேன். இப்படி சொல்வதால் பொதுவாழ்க்கையில் இருந்து அல்ல. இந்த இயக்கத்தை எல்லோரும் ஒன்று சேர்ந்து காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெற்றுக்கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

கூட்டத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவே கருணாநிதி திருவாரூரிலிருந்து புறப்பட்டு சென்னை வந்து சேர்ந்தார்.

அழுதார்

கருணாநிதி பேசும்போது, குறிப்பாக கனிமொழி குறித்துப் பேசும்போது அவ்வப்போது கண்கலங்கி சில விநாடிகள் தனது பேச்சை நிறுத்திக் கொண்டார். பின்னர் விம்மிய குரலில் அவர் தொடர்ந்து பேசினார். கனிமொழி அடைக்கப்பட்டுள்ள திஹார் சிறை குறித்து அவர் பேசும்போது அழுது விட்டார்.

கருத்துகள் இல்லை: