வெள்ளி, 3 ஜூன், 2011

இரகசியமாக புதுடெல்லி அனுப்பப்பட்ட பசில் – போன வேகத்திலேயே கொழும்பு திரும்பினார்

சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச புதுடெல்லிக்கு இரகசியப் பயணம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ஆதரவைப் பெறும் நோக்கில் சிறிலங்கா அதிபரால் அமைச்சர் பசில் ராஜபக்ச, கடந்த 26ம் நாள் காலை புதுடெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் இந்தியா அவரை கண்டுகொள்ளாமல் அன்றையதினமே திருப்பி அனுப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளால் சிறிலங்கா அரசு அனைத்துலக அரங்கில் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்தநிலையைச் சமாளிக்க இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் புதுடெல்லிக்கு மேற்கொண்ட பயணமும் தோல்வியிலேயே முடிந்தது.

இதையடுத்து இந்தியா கொடுத்துள்ள அழுத்தங்களை குறைத்து , நெகிழ்வுப்போக்கை கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளும் நோக்கில், தனது சகோதரரான அமைச்சர் பசில் ராஜபக்சவை, சிறிலங்கா அதிபர் இரகசியமாக புதுடெல்லிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாவதற்கு நான்கு நாட்கள் முன்னதாக பசில் ராஜபக்ச புதுடெல்லி சென்றிருந்தார்.

அங்கு அவருக்கு அங்கு பெரிய வரவேற்பு ஏதும் அளிக்கப்படாததுடன், இந்திய உயர் தலைவர்கள் எவரையும் சந்திப்பதற்கு வாய்ப்பும் வழங்கப்படவில்லை.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் மட்டுமே பசில் ராஜபக்சவைச் சந்தித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இதன்போது, சிறிலங்கா வெளிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனான பேச்சுக்களில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் காணப்படும் முன்னேற்றங்களை அடிப்படையாகக் கொண்டே, இந்தியாவின் எதிர்கால நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்று பசில் ராஜபக்சவிடம் எடுத்துக் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை. இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்திக்க அமைச்சர் பசில் ராஜபக்ச கடுமையான முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை வெற்றியளிக்கவில்லை.

இதனால், அவர் கடந்த 26ம் நாள் மாலையே கொழும்பு திரும்பியுள்ளார்.

கடந்த 26ம் நாள் காலையில் இந்தியா சென்ற பசில் ராஜபக்ச, தேசிய சிவ்சங்கர் மேனனைச் சந்தித்து விட்டு அன்று மாலையே கொழும்பு திரும்பியதை, சிறிலங்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியதாகவும் உதயன் நாளிதழ் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: