சனி, 4 ஜூன், 2011

ஜூனியர் விகடன், ஆனந்த விகடனுக்கு கனிமொழி நோட்டீஸ்- வழக்கு தொடர முடிவு

திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழியின் மகன் குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதாக கூறி ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களுக்கு கனிமொழியின் வக்கீல்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து கனிமொழியின் சார்பில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் வி. ஜி. பிரகாசம், அரிஸ்டாட்டில் ஆகியோர் அனுப்பியுள்ள நோட்டீஸில்,

திருமதி கனிமொழியின் 11வயது மகனான ஆதித்யா பள்ளி செல்லும் மாணவன் என்றும், மைனர் என்றும் பாராமல் அந்த 11 வயது மகனைப் பற்றிய செய்திகளையும் அவனது புகைப்படங்களையும் வெளியிட்டிருப்பது உள் நோக்கம் கொண்டது.

ஐ.நா. சபை விதிகளின்படி மைனர் மற்றும் குழந்தைகளைப் பற்றிய செய்திகளை வெளியிடும் போது ஊடகங்களும், பத்திரிகைகளும் மிகுந்த கவனத்தோடு கட்டுப்பாட்டோடும் இருக்க வேண்டும்.

குறிப்பாக மைனர்களின் புகைப்படங்களை பிரசுரிப்பதால் அவர்களது உள்ளம் பாதிக்கப்படும் என்பதையும் சமுதாயத்தில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் விதி முறைகள் இருக்கும் போது அவற்றையெல்லாம் மீறி ஆனந்தவிகடனும், ஜூனியர் விகடனும் ஆதித்யா பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் வெளியிட்டிருப்பது முற்றிலும் பத்திரிகை தர்மத்திற்கு எதிரானது.

வியாபார நோக்கத்திற்காக இத்தகைய செய்திகளை வெளியிட்ட இவ்விரு இதழ்களும் கனிமொழியின் மகனின் மனதில் இதனால் ஆழமான வடு ஏற்படும் என்பதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை.

கனிமொழிக்கு எதிரான ஆதாரமற்ற பொய் வழக்கிற்கும் அவரது மகனுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாத நிலையிலும் ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் வெளியிட்ட செய்திகளால் தாய் என்ற முறையில் திருமதி கனிமொழி மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.

எனவே சம்பந்தப்பட்ட இரு இதழ்களும் மூன்று நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டப் பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸ் ஆனந்த விகடன் மற்றும் ஜூனியர் விகடன் இதழ்களின் ஆசிரியர்கள், பதிப்பாளர், வெளியீட்டாளர், செய்தியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் தனித்தனியே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: