புதன், 8 ஜூன், 2011

சூரியன் மறைந்தாலும் மீண்டும் உதிக்கும்: கருணாநிதி

ஜூன் 8: சூரியன் மறைந்தாலும் மீண்டும் உதிக்கும். வெற்றியும் தோல்வியும் மாறிமாறி வருவது ஒரு இயக்கத்துக்கு இயல்புதான் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி திருமண விழாவில் பேசினார்.

திமுக அமைப்புச் செயலாளர் பெ.வீ.கல்யாணசுந்தரம் மகன் க.கதிரவன்,எஸ்.ரோகிணி திருமணம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசியது:

திமுகவின் வளர்ச்சி, இதுவரையில் மெல்ல மெல்ல ஆனால் உறுதியாக நடைபெற்றிருக்கிறதென்றால் அதற்குக் காரணம் நாம் தொடர்ந்து ஆற்றி வருகின்ற கொள்கைப் பிரசாரமும், சமுதாய எழுச்சிப் பிரசாரமும்தான்.

இதைப்போல தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், சிறுபான்மை மக்கள் தமிழகத்தில் நல்வாழ்வு பெற வேண்டும் என்று சூளுரைத்து அந்தப் பணியைத் தொடர்ந்து ஆற்றி வருகின்ற காரணத்தினால் என்பதையும் மறந்துவிடக்கூடாது. தேர்தல் தோல்வி நமக்கு ஒரு தடைக்கல் அல்ல. ராஜீவ் காந்தி மறைந்தபோது, திமுக மீது பழி சுமத்தி மாற்றுக் கட்சிக்காரர்கள் செய்த பிரசாரத்தால் மக்களுடைய ஆதரவை பெருவாரியாக இழந்தோம். துறைமுகம் தொகுதியில் ஒரேயொரு ஆளாக நான் வெற்றி பெற்றேன். அதற்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் முதன் முதலாக 185 இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி நடத்தியதையும் யாரும் மறுக்க முடியாது.

சூரியன் உதிக்கும்: இரண்டு நாள்களுக்கு முன்பு ஒருவர் சூரியன் அஸ்தமனமானது அஸ்தமனமானதுதான், இனி உதிக்காது என்று சொல்லியிருக்கிறார்.

சின்ன பிள்ளை ஒன்றைக் கூப்பிட்டு, இன்றைக்கு சூரியன் மறைந்தால் நாளைக்கு என்ன ஆகும் என்று கேட்டால், நாளைக்கு மீண்டும் உதிக்கும் என்று சொல்லும்.

ஒரு குழந்தைக்குத் தெரிந்த ரகசியம்கூட அவர்களுக்குத் தெரியாதது ஆச்சரியம்தான்.

எனவே பகலும், இருளும் மாறிமாறி வருவதைப் போல வெற்றியும், தோல்வியும் ஒரு இயக்கத்திற்கு மாறிமாறி வருவது இயல்புதான் என்றார் கருணாநிதி.

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, அமைப்புச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள்.

கருத்துகள் இல்லை: