வியாழன், 30 ஜூன், 2011

பான் கீ மூன் மீளவும் தேர்ந்தெடுக்கப்பட்டமைக்கான காரணம் என்ன?

பெரும்பாலும் பன் கீ மூனின் கருத்துக்கள் அமெரிக்கர்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறதெனில், சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்ற விடயத்தில் அமெரிக்காவின் கருத்து பான் கீ மூனது கருத்தினை விட வேறுபட்டதாக இருக்க முடியாது.

இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட Daily Mirror 29 JUNE 2011 இதழில் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை 'புதினப்பலகை'க்காக [www.puthinappalakai.com] மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக பான் கீ மூன் வல்லுநர்கள் குழு என்ற ஒன்றை அமைத்திருந்தமையினைக் கருத்திற்கொண்டு, அவர் மீண்டும் ஐ.நாவின் செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்குச் சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கிறது.

பான் கீ மூன் அமைத்திருந்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரலில் வெளிவந்த நிலையில், பான் கீ மூன் செயலாளர் நாயகமாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தனது ஆதரவினை வழங்கக்கூடாது என குறிப்பிட்ட சில உள்ளூர் ஊடகங்கள் கூட செய்திகளை வெளியிட்டிருந்தனர்.

மே முதலாம் நாளன்று கொழும்பு நகர வீதிகளில் திரண்ட அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பான் கீ மூன் மீண்டும் செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கக்கூடாது எனக் கோரியதுடன் இதற்கான ஆதரவினை ஏனைய நாட்டு நாடுகளிடமிருந்தும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கோரினர்.

இருப்பினும் பான் கீ மூனை மீண்டும் செயலாளர் நாயகமாக்கும் பிரேரணை ஐ.நாவின் ஆசிய நாடுகளுக்கான குழுவிடம் முன்வைக்கப்பட்டபோது இதற்குச் சிறிலங்கா எந்தவிதமான எதிர்ப்பினையும் காட்டவில்லை. இந்த நியமனத்திற்கு இணங்கியிருந்தது.

எவ்வாறிருப்பினும் பான் கீ மூன் மீண்டும் செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதை கியூபா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் எதிர்த்தன. இந்த நாடுகளைப் போலவே பன் கீ மூனை மீளவும் நியமிக்கும் தீர்மானத்திற்கு சிறிலங்காவும் தனது எதிர்ப்பினை வெளியிட்டிருக்கமுடியும். ஆனால் சிறிலங்காவோ ஏனைய நாடுகளுடன் இணைந்து இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளித்திருந்தது.

ஐ.நாவின் ஆசியக்குழுவில் தனக்கு காத்திரமான குரல் ஏதும் இல்லை என்பதால் சிறிலங்கா இந்த முடிவினை எடுத்ததா அல்லது பான் கீ மூனுக்கு உதவிசெய்வதன் ஊடாக அவரது தயவினைப் பெறுவதற்கு அது முனைந்ததா என்பது சரியாகத் தெரியவில்லை.

கியூபாவினதும் இலத்தீன் அமெரிக்க நாடுகளினதும் எதிர்ப்புகள் பான் கீ மூன் ஐ.நாவின் செயலாளர் நாயகமாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை எதுவும் செய்துவிடவில்லை.

ஆசியக் குழுவின் முன் இந்தப் பிரேரனை முன்வைக்கப்பட்டபோது சிறிலங்கா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்குமெனில் அது பான் கீ மூனின் பெயருக்குச் சிறு களங்கத்தினையாவது ஏற்படுத்தியிருக்கக்கூடும்.

ஆனால் பான் கீ மூன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் தீர்மானத்தினை ஆமோதித்த சிறிலங்கா தொடர்ந்தும் மௌனமாக இருந்தது.

கூடவே பான் கீ மூன் இரண்டாவது தடவையாகவும் செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு சிறிலங்கா ஆதரவளிக்கக்கூடாது என்ற தொனிப்பட எழுதிவந்த நாட்டினது ஊடகங்கள் கூட எந்தவிதமான கருத்தினையும் வெளியிடவில்லை.

பான் கீ மூனால் நியமிக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவினது சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான அறிக்கை வெளிவந்த வேளையில், தான் மீண்டும் பதவியில் தொடருவதற்காக அனைத்துலக நாடுகளின் ஆதரவினைப் பெறும் முனைப்புக்களில் பான் கீ மூன் ஈடுபட்டிருந்தார் என்பது தெளிவு.

குறித்த இந்த அறிக்கை வெளிவந்த கையோடு பான் ரஷ்யாவிற்குப் பயணித்திருந்தார். கொசோவோ மோதலின்போது பான் கீ மூனின் உத்தரவுகள் மற்றும் செயற்பாடுகளை நிராகரித்த ரஷ்யா, அவர் மீண்டும் செயலாளர் நாயகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக பிரேரணை முன்வைக்கப்படும்போது பாதுகாப்புச்சபையில் தனக்கிருக்கும் வீற்றோ அதிகாரத்தினைப் பயன்படுத்தப்போவதாக அது எச்சரித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால் தனது ரஷ்யப் பயணத்தின்போது தனக்கான ரஷ்யாவின் ஆதரவினை பான் கீ மூன் மீளவும் உறுதிப்படுத்திக்கொண்டார்.

மறுபுறத்தில் ஐ.நாவின் செயலாளர் நாயகமாக பான் கீ மூன் இரண்டாவது முறையாகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்குச் சீனா ஆரம்பம் முதலே தனது ஆதரவினை வெளிப்படுத்திவந்தது.

"சீனாவினை மகிழ்வுடன் வைத்திருக்கும் அதேநேரம் ரஷ்யாவினை சாந்தப்படுத்துவதற்கு பான் கீ மூனால் முடிந்திருக்கிறது" என றொய்ட்டஸ் செய்திச்சேவையிம் இராசதந்திரி ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆனால் பான் கீ மூன் மீண்டும் நியமிக்கப்படுவதற்கு அமெரிக்காவின் ஆதரவுதான் காரணம் என இந்தச் செய்திச்சேவை தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தது.

குறித்த இந்தச் செய்திக் குறிப்பில் றொய்ட்டர் கீழ்க்கண்டவாறு கூறுகிறது. "மேற்கு நாடுகளினதும் ஐக்கிய அமெரிக்காவினதும் தீவிர நண்பன் என்ற பெயரினை தென் கொரியாவினைச் சேர்ந்த ஐ.நாவின் செயலாளர் நாயகம் பெற்றிருக்கிறார். அதேநேரம் வெள்ளை மாளிகையினதும் அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்தினதும் நிலைப்பாட்டினை எதிரொலிக்கும் ஒருவர்தான் தென்கொரியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பான் கீ மூன் என்றும் வோசிங்டனுடன் கூட்டிணைந்தே இவர் செயற்படுகிறார் என்றும் சில இராசதந்திரிகள் குற்றம் சுமத்துகிறார்கள்."

"ஐ.நா செயலாளர் நாயகம் வோசிங்டனுடன் கூட்டிணைந்தே செயற்படுகிறார் என்ற கூற்றினை முற்றாக மறுக்கும் ஐ.நா அலுவலர்கள் பான் கீ மூனின் கருத்துக்கள் அமெரிக்கர்களின் கருத்துக்களுடன் பெரும்பாலும் ஒத்துப்போவதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்" என பிறிதொரு அனைத்துலகச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தப் புறநிலையில் சிறிலங்கா அரசாங்கமானது மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டிய தருணமிது. பெரும்பாலும் பன் கீ மூனின் கருத்துக்கள் அமெரிக்கர்களுடைய கருத்துக்களுடன் ஒத்துப் போகிறதெனில், சிறிலங்காவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்ற விடயத்தில் அமெரிக்காவின் கருத்து பான் கீ மூனது கருத்தினை விட வேறுபட்டதாக இருக்க முடியாது.

வல்லுநர் குழுவின் அறிக்கை தொடர்பில் கருத்துரைத்த செயலாளர் நாயகம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றும் அதிகாரம் தனக்கில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாவது தடவையாகவும் பதவியில் தொடருவதற்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவினை அவர் கோரிநின்ற வேளையிலேயே பான் கீ மூனின் இந்தக் கருத்து வெளிவந்திருந்தது.

இதன் போது அவர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டிருந்தார். ஆனால் தற்போது அவர் இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் தனது இருப்பினை உறுதிப்படுத்தியதொரு நிலையில் இருக்கிறார். இந்த நிலையில் வரும் நாட்களில் பான் கீ மூன் எடுக்கப்போகும் தீர்மானங்கள் தொடர்பில் தற்போது எதிர்வுகூறமுடியாது.

http://www.puthinappalakai.com/view.php?20110630104178

1 கருத்து:

Yoga.s.FR சொன்னது…

மகிந்த ராஜபஷ இரண்டாவது பதவிக்காலத்துக்கு ஏலவே தேர்வு செய்யப்பட்டது போல் பான் கி மூனும் இரண்டாவது பதவிக்காலத்துக்கு "ஏகமனதாக" தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்!சிறு வித்தியாசம்,அவர் "ஏகமனதாக" தேர்வு செய்யப்படவில்லை,இவர் அவ்வாறு தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்!அவர் "கண்ணீர்த் துளி"நாட்டுக்குத் தலைவர்!இவர்,அனைத்துலக விவகாரங்களை கையாளும் தலைவர்.போர்க்குற்றங்கள்,மனித உரிமை மீறல்கள் அமெரிக்காவின் வழி காட்டலில் மேலோங்குமா?பொறுத்திருப்போம்!அறுபத்தியிரண்டு ஆண்டுகள் போராடவில்லையா?தொடர்வோம்