ஞாயிறு, 3 ஜூலை, 2011

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ரூ. 1 லட்சம் கோடிக்கு நகைக் குவியல்-கோவிலுக்கு பாதுகாப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் இதுவரை ரூ. 1லட்சம் கோடி அளவிலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவிலாக கருதப்படும் திருப்பதியை மிஞ்சியுள்ளது பத்மநாபசாமி கோவில்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. திருவிதாங்கூர் சமஸ்தான ராஜ குடும்பத்தினர் வசம் இந்தக் கோவிலின் நிர்வாகம் உள்ளது. இந்த நிலையில் பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த உச்சநீதிமன்றம், இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது. அதன்படி தற்போது ஆய்வு நடந்து வருகிறது.

இதில் பெருமளவிலான நகைக் குவியல் கண்டெடுக்கப்பட்டு அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இதுவரை ரூ. 1 லட்சம் கோடிக்கு மேலான நகைகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் இந்தியாவிலேயே பணக்கார கோவில் என்ற பெயரைக் கொண்ட திருப்பதி கோவிலை மிஞ்சி விட்டது திருவனந்தபுரம் கோவில்.

நேற்று பெருமளவில் தங்க நாணயங்கள், சிலைகள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

நேற்று 6வது நாள் நடந்த சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. இவற்றின் மதிப்பை அவ்வளவு சீக்கிரம் அளவிட முடியாது என்கிறார்கள். மிகப் பெரிய மதிப்புடையவை இவை என்றும் கூறப்படுகிறது.

தூய தங்கத்தால் ஆன, ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும் நேற்று கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் மதிப்பும் தோராயமாக ரூ. 1 லட்சம் கோடி என்று கூறப்படுகிறது.

மொத்தம் உள்ள ஆறு அறைகளுக்கும் ஏ, பி, சி, டி, இ, எப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஏ அறையில் உள்ளவை குறித்து முழுமையாக சோதனை நடத்தப்பட்டு விட்டது. சி, டி மற்றும் எப் அறைகளில் தொடர்ந்து கண்டுபிடிப்புகள் நடந்து வருகின்றன. பி அறையில் இன்னும் சோதனை நடக்கவில்லை. இந்த அறை 1872ம் ஆண்டுக்குப் பிறகு திறக்கப்படவே இல்லை. அதேபோல இ அறையிலும் சோதனை செய்யப்பட வேண்டியுள்ளது.

ஆய்வு திங்கள்கிழமை முதல் தொடரவுள்ளது. மிகப் பெரிய அளவில் நகைக் குவியலும், அரிய வகை பொருட்களும் கிடைத்துள்ளதால் கோவிலின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இதையடுத்து கோவிலுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவில் பாதுகாப்புப் பொறுப்பு கூடுதல் டிஜிபி வேணுகோபால் நாயரிடம் விடப்பட்டுள்ளது. விரைவில் கோவிலுக்கு மிகப் பெரிய அளவிலான பாதுகாப்புத் திட்டமிடப்படவுள்ளதாக நாயர் தெரிவித்துள்ளார்.

தற்போது கிடைத்துள்ள ரூ. 1 லட்சம் மதிப்பிலா நகைகள், பொருட்கள் யாருடைய பொறுப்பு மற்றும் பாதுகாப்பின் கீழ் வைக்கப்படும் என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. கோவில் நிர்வாகம் ராஜ குடும்பத்தினர் வசம் இருப்பதாலும், அரசுக்கு இதுவரை இந்தக் கோவில் தொடர்பாக எந்த உரிமையும் இல்லாததாலும் இது மிகப் பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

கோவிலை அரசே ஏற்க உத்தரவிடக் கோரி அரசு சார்பில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே அந்த வழக்கில் கிடைக்கும் தீர்ப்பைப் பொறுத்துதான் கோவிலில் உள்ள நகை உள்ளிட்ட அரிய வகை பொருட்கள் யாருடைய பொறுப்பின் கீழ் வரும் என்பது தெரிய வரும்.

மேலும் வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய மதிப்பிலான நகைகள் மற்றும் பொருட்களை தொடர்ந்து கோவிலிலேயே வைத்துப் பராமரிப்பது என்பது பாதுகாப்புக்கு உரியதல்ல என்பதால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருட்கள் எங்கு வைக்கப்படவுள்ளது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/03/1-lakh-cr-counting-treasur-hunt-padmanabhaswamy-temple-aid0091.html

கருத்துகள் இல்லை: