திங்கள், 25 ஜூலை, 2011

15 ஆயிரம் ரூபா பணத்திற்காக முதியவரைக் கொன்றது சிறீலங்கா இராணுவம்! வன்னியில் சம்பவம்!

முல்லைத்தீவு குமுழமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த முதியவர் ஒருவர் 15 ஆயிரம் ரூபா பணத்திற்காக இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குமுழமுனை மேற்கு கிராமத்தினைச் சேர்ந்த 65 வயதுடைய முதியவரான பிலிப் செல்லையா என்பவர் கடந்த புதன் கிழமை குடும்ப வறுமைகாரணமாக முள்ளியவளை இலங்கை வங்கியில் நகையினை அடைவு வைக்கச் சென்றிருக்கின்றார். மறு நாளாகியும் அவர் வீடு திரும்பாததை அடுத்து முதியவரின் உறவினர்கள் பொலிஸ், இராணுவம், இராணுவப் புலனாய்வாளர்களிடம் முறையிட்டிருக்கின்றர்.

இந் நிலையில் வெள்ளிக்கிழமை ஐந்தாம் கட்டை என்ற பகுதியில் இருந்து மர்மான முறையில் கொல்லப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டிருக்கின்றது.

இந்தச் சம்பவம் குறித்து முதியவரின் குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,

நகையினை அடைவு வைத்துவிட்டு 15, ஆயிரம் ரூபாவுடன் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தவர் ஐந்தாம் கட்டை என்ற பகுதியில் மரநிழலில் இழைப்பாறியிருக்கின்றார். அவர் இழைப்பாறிய இடத்திற்கு இரண்டு பக்கமும் 50 மீற்றர் தொலைவில் இராணுவ நிலைகள் இருந்திருக்கின்றன. அந்த நிலைகளில் இருந்து இராணுவத்தினர் முதியவருடன் உரையாடிக்கொண்டிருந்ததை ஊரார் கண்டிருக்கின்றனர்.

அதன் பின்னர் அவர் காணாமல் போனதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அந்தப் பணத்தினை பிடுங்கிக் கொள்வதற்காகவே அந்த முதியவர் கொல்லப்பட்டதாக உறவினர்கள் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: