புதன், 20 ஜூலை, 2011

இன்றைய மாலைச் செய்திகள் 19.07.211

தமிழினியின் தடுப்புக் காவல் நீடிப்பு - செய்தித் துளிகள்
]
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி தொடர்பான விசாரணைகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதனால் இவரை விசாரிப்பதற்கு மேலும் காலம் அவகாசம் தரவேண்டும் என சிறிலங்கா காவற்துறையின் குற்றத்தடுப்புப் பிரிவினர், கொழும்பு நீதிமன்றைக் கோரியுள்ளனர்.

இதனையடுத்து ஓகஸ்ட் 01 வரை இவரை விளக்கமறியலில் வைத்திருக்குமாறு கொழும்பு நீதிமன்றின் தலைமை நீதிபதி ரஸ்மி சிங்கப்புலி கட்டளையிட்டுள்ளார்.

தமீழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராக இருந்த தமிழினி என அழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி, சிறிலங்காவின் உள்நாட்டுப் போர் முடிவிற்கு வந்ததையடுத்து மே 2009 இல் சிறிலங்கா பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

00000

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் தேர்வெழுதும் முன்னாள் போராளிகள்


முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளில், 05 பெண் போராளிகள் உள்ளடங்கலாக 302 பேர் இவ்வாண்டு ஓகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ஜணசிங்க தெரிவித்துள்ளார்.

இதில் மூவர் கணிதப் பிரிவிலும், 12 பேர் விஞ்ஞானப் பிரிவிலும், 57 பேர் வர்த்தகப் பிரிவிலும், 230 பேர் கலைப் பிரிவிலும் தோற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய புனர்வாழ்வுப் பயிற்சி பெற்ற போராளிகளில் 62 வீதமானோர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்ததாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய 361 முன்னாள் போராளிகளில் 222 பேர் சித்தியடைந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இதே போன்று கடந்த ஆண்டில் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் தோற்றிய 176 பேரில் 91 பேர் இதில் முழுமையாக சித்தியடைந்துள்ளனர்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வரும் முன்னாள் போராளிகளுக்கான கல்விச் செயற்பாடுகள் பெண், ஆண் போராளிகளுக்கு வெவ்வேறான இடற்களில் மேற்கொள்ளப்படுவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கான கற்பித்தல் செயற்பாட்டை வழங்குவதற்கான இரு பாடசாலைகள் வவுனியாவில் செயற்படுத்தப்பட்டதாகவும், ஆனால் தற்போது பெருந்தொகையான முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டதையடுத்து தற்போது ஒரு பாடசாலையிலேயே கற்றல் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

00000

59வது இடத்தில் சிறிலங்கா

பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவான Heidrick & Struggles என்ற ஆய்வுக்குழுவால், 60 நாடுகள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார அபிவிருத்தி ஆய்வின் முடிவில் திறமை அடிப்படையில் சிறிலங்காவானது 59வது இடத்தில் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நைஜீரியா 60 வது இடத்திலும், இந்தியா 35 வது இடத்திலும், பாகிஸ்தான் 57 வது இடத்திலும் உள்ளது என பொருளாதார ஆராய்ச்சிப் பிரிவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய பொருளாதாரத் திட்டங்களுக்கு தமது நாட்டு தொழிலாளர்களை எவ்வாறு தயார் செய்வது என்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவின்படி, உலக நாடுகள் தமது எதிர்கால நடவடிக்கைகளை விரைந்து முகங்கொடுப்பதற்குப் போதியளவு தயார்ப்படுத்தலற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனத்தொகை, கட்டாயக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி, தொழிலாளர் படைகள், தொழில் சூழல், தொழில் வாய்ப்புக்கள் போன்ற எழு விடயங்கள் தொடர்பாக இந்த ஆய்வில் ஆராயப்பட்டுள்ளன.

00000

உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது

வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போரட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அரசியல் கைதிகள் தங்களது தொடர்ச்சியான உண்ணாவிரப் போராட்டத்தை நேற்று மாலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளனர்.

மன்னார் மறை மாவட்ட வணகத்துக்குரிய ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்தே இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்துள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வீ.ஆர்.டி.சில்வா மற்றும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட கைதிகளை நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிளுடன் வவுனியா சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பிரச்சினை தொடர்பில் பேச்சு நடத்தி விரைவில் தீர்வுபெற்று தருவதாக மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் வழங்கிய உறுதிமொழியையடுத்து உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

இதேவேளை, வவுனியா வைத்தியாசாலையிலுள்ள அரசியல் கைதியையும் ஆயர் இராயப்பு ஜோசப் அடிகளார் பார்வையிட்டார்.

00000

சிறிலங்கா தமிழ்நாடு மீனவர் பிரச்சனை

சிறிலங்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளையும் சேர்ந்த பாதிக்கப்பட்டுள்ள மீனவர் சமூகங்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளைக் களைந்து இரு தரப்பும் மிக அமைதியாக வாழ்வதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்குவதில் தாம் 'சிறப்பு கவனம்' செலுத்தியுள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் நேற்றுத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இரு நாடுகளும் இணைந்து 'நடைமுறை ஒழுங்குகளை' மேற்கொள்வதாகவும், இதற்கான தீர்வொன்றை எட்டுவது தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் பல சுற்றுக் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும், மிகவிரைவில் இரு நாட்டு மீனவ சமூகங்களும் மீன்பிடித் தொழிலை எந்தவொரு தடைகளுமின்றி மேற்கொள்வதற்கான சரியானதொரு தீர்வு எட்டப்படும் எனவும் இவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவதானிப்பு ஆராய்ச்சி நிறுவகத்தால் ஒழுங்குபடுத்தி நடாத்தப்பட்ட மீன்பிடித்துறை தொடர்பான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே இந்திய வெளியுறவுச் செயலர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக, இரு நாட்டு மீனவ சமூகங்களும், தமது நாட்டு எல்லைகளைக் கடந்து மற்றைய நாட்டு கடல் எல்லைக்குள் மீன்பிடிப்பதற்காகப் பிரவேசிப்பதால் இரு தரப்பு மீனவர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.

00000

'யாழினி' குறும்படம்
இலங்கை யுத்தத்தில் கணவனை இழந்த பெண்களை மையமாக வைத்து 'யாழினி' என்ற குறும்படத்தை அவுஸ்திரேலிய தமிழர்கள் சார்லஸ் ராஜ் தயாரிக்க, ஆனந்த் இயக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள யாழினி என்ற பெண் எப்படி கணவனை இழந்தாள், அதற்கு பின்னால் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகையில் 30 நிமிட குறும்படம் எடுத்திருக்கிறோம். அடுத்து விடிவெள்ளி என்ற படத்தை கண்ணிவெடிகளை பற்றி எடுத்து வருகிறோம்.

இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறோம். 25 வருடமாக நடந்து வரும் இலங்கை யுத்தம் குறித்து மிகவும் குறைந்த அளவே சினிமா படங்களாக வெளிவந்திருக்கின்றன.

இவை போதாது, இன்னும் உள்ள பல பிரச்சினைகள் குறித்து பலரும் சினிமாக்களாக எடுத்து உலகம் அறியச் செய்ய வேண்டும். நாங்கள் எடுக்கும் குறும்படங்களை உலகளவில் நடைபெறும் திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப இருக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

00000

தேர்தல் வன்முறை


கிளிநொச்சியில் ஈபிடிபியினரால் தாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அக்கராயன் மணியங்குள விநாயகர் குடியிருப்பைச் சேர்ந்த செல்லத்துரை தயாகரன் என்பவரே தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இவர் தனது 12 வயதான மகனுடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே தாக்குதலுக்கு இலக்கானார்.

இதையடுத்து அக்கராயன் மருத்துவ மனையில் முதலில் சேர்க்கப்பட்ட தயாகரன் பின்னர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஈபிடிபியைச் சேர்ந்த சுரேஸ் என்பவரும் அவரது சகாக்களுமே தம்மை இடைமறித்து தாக்கியதாக தயாகரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரைச்சிப் பிரதேசசபை வேட்பாளரான நடராசா டெனிஸ் ராசாவை ஆதரித்து இவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

00000

http://www.puthinappalakai.com/view.php?20110719104314

கருத்துகள் இல்லை: