வெள்ளி, 15 ஜூலை, 2011

மும்பையில் குண்டு வெடித்தபோது சிதறிய ரூ.25 கோடி வைரங்கள்!

மும்பை: மும்பையின் ஓபரா ஹவுஸ் பகுதியில் நேற்று முன் தினம் வெடிகுண்டு வெடித்தபோது குண்டுகளின் பாகங்கள், சேதமடைந்த கட்டிடங்களின் பாகங்களுடன் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரங்களும் சிதறின.

ஓபரா ஹவுஸ் பகுதியின் கஹூ கல்லி எனப்படும் சிறிய தெரு வைர விற்பனைக்குப் பேர் போனது. பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படும் இந்தக் கடைகளில் ஒரு நாளைக்கு பல கோடி மதிப்புள்ள வைரங்கள் விற்பனையாவது வழக்கம்.

கடந்த புதன்கிழமை மாலை 6.50 மணிக்கு இந்தப் பகுதியில் வெடிகுண்டு வெடித்தபோது கடைகளை மூடத் தயாராகிக் கொண்டிருந்தனர் பெரும்பாலான வியாபாரிகள்.

வைரங்களை பட்டர் பேப்பரில் வைத்து மடித்து, வெல்வட் துணிகளில் பத்திரப்படுத்துவது வழக்கம். பின்னர் அதை தங்களது வீடுகளுக்கு கடை அதிபர்கள் கொண்டு சென்றுவிடுவர்.

கடைகளை மூடிக் கொண்டிருந்த நேரத்தில், குண்டு வெடித்ததி்ல் பல வைரக் கடைகள் சேதமடைந்தன. ஏராளமான வைரங்களும் சிதறிவிட்டன. கிட்டத்தட்ட ரூ. 25 கோடி மதிப்புள்ள வைரங்கள் வரை காணாமல் போய்விட்டதாக கடை அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

வைரங்கள் சிதறியிருக்கலாம் என்பதை அறிந்த பல கடைகளின் ஊழியர்கள், குண்டு வெடித்த சில நிமிடங்களுக்குப் பின் அந்தப் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வந்துள்ளன. இதில் எத்தனை வைரங்களை கடை ஊழியர்களும், பொது மக்களும் எடுத்துச் சென்றனர் என்பது தெரியவில்லை.

பணமோ, வைரேமா போனதைப் பற்றிக் கூட கவலையில்லை. பல உயிர்களை இந்த குண்டு வெடிப்பில் பலி கொடுத்துவிட்டோம். எங்களுக்கு பாதுகாப்பே இல்லையா என்பது தான் பெரிய கவலையாக உள்ளது என்கிறார் மும்பை வைர வியாபாரிகள் சங்கத்தின் தலைவரான பரத் ஷா கோபத்துடன்.

இந்த குண்டு வெடிப்பையடுத்து நேற்றும் இன்றும் இந்தப் பகுதியில் வைர வியாபாரம் நடக்கவில்லை.
http://thatstamil.oneindia.in/news/2011/07/15/mumbai-blasts-diamonds-worth-rs-25-crore-went-flying-aid0090.html

கருத்துகள் இல்லை: