திங்கள், 25 ஜூலை, 2011

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார்.நீதிமன்றத்தில் ராசா வாதம்!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார். இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும் என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா சிபிஐ நீதிமன்றத்தில் வாதாடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார்.

இந்த வழக்கில் ராசா உள்பட 14 பேர் கைதாகி திகார் சிறையில் உள்ளனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் ராசா மீது சிபிஐ மோசடி, கிரிமினல் சதி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

இந்த வழக்கில் சிபிஐ தரப்பு வாதம் சனிக்கிழமையுடன் முடிவடைந்தது. சிபிஐ வழக்கறிஞர் யு.யு. லலித் நேற்று முன்தினம் வாதாடுகையில், குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவருமே முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன என்று கூறி தனது வாதத்தை முடித்தார்.

இதையடுத்து இன்று முதல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வாதம் தொடங்கியது.

அப்போது ராசா தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறுத்து தானே வாடினார். தனக்காக வாதாட அவர் வழக்கறிஞரை வைத்துக் கொள்ளவில்லை. சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்ற அவர் தனது சார்பில் தானே வாதாடினார்.

அவர் கூறுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விடுவதில்லை என்ற முடிவை நான் எடுக்கவில்லை. கடந்த பாஜக கூட்டணி ஆட்சியில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றியே நானும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தேன்.

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கறையை ஏலம் விட வேண்டாம் என்ற முடிவு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட கொள்கை முடிவு. அதையே நானும் தொடர்ந்து பின்பற்றினேன். இதனால் நான் எந்தத் தவறும் செய்யவில்லை.

நான் தவறு செய்திருப்பதாகச் சொன்னால் 1993ம் ஆண்டிலிருந்து தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்களாக இருந்த அனைவரையுமே கைது செய்து என்னுடன் சிறையில் தள்ள வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனைக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல் அளித்தார். அவரது முன்னிலையில் தான் இதற்கான ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன. இதை பிரதமர் மறுக்க முடியாது. வேண்டுமானால் அதை அவர் மறுத்துப் பார்க்கட்டும்.

'ப.சிதம்பரம் தான் ஒப்புதல் தந்தார்':

யூனிடெக், டிபி ரியாலிட்டி நிறுவனங்களின் பங்குகள் விற்பனை சட்டப்படியே நடந்தன. அதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. டி.பி. ரியாலிட்டி நிறுவனத்தின் பங்குகள் விற்பனைக்கு அப்போதைய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் ஒப்புதல் அளித்தார் என்றார்.

இந்த விவகாரத்தில் பிரமதரையும் ப.சிதம்பரத்தையும் ராசா இழுத்துவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(மிகக் குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸை பெற்ற டிபி ரியாலிட்டி மற்றும் யூனிடெக் ஆகியவை உடனடியாக தங்களது பங்குகளை மிக அதிகமான விலைக்கு விற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அந்த நிறுவனங்கள் பெரும் லாபம் அடைந்தன.

ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வைத்திருந்ததால் தான் அந்த நிறுவனங்களின் விலைகள் அவ்வளவு விலைக்கு விற்பனையாயின. இதனால், ஸ்பெக்ட்ரத்தின் விலை உண்மையிலேயே மிக அதிகமாக இருக்க, அதை மிகக் குறைந்த விலைக்கு ராசா ஒதுக்கிக் தந்து இந்த நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடிக்க உதவினார் என்பது சிபிஐயின் வாதமாகும். மேலும் இவ்வாறு ராசா செய்த உதவிக்குக் கைமாறாக ராசாவுக்கு இந்த நிறுவனங்கள் ஏராளமான கோடிகளை அள்ளித் தந்தன என்றும், அவை மொரீஷியஸ், ஷெசல்ஸ் தீவுகளில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டு, லண்டன், சிங்கப்பூர் வங்கிகள் வழியாக ராசாவின் பினாமிகளுக்கு வந்து சேர்ந்தன என்பதும் சிபிஐயின் வாதமாகும்).

ஆ.ராசாவின் வழக்கறிஞர் சுஷில்குமார் வாதிடுகையில், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் ஆ.ராசா எந்த குற்றமும் செய்யவில்லை.

முந்தைய பாஜக அரசு வகுத்த கொள்கையின் அடிப்படையில் தான், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏலமுறையை கடைப்பிடிப்பதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது. அலைக்கற்றை ஒதுக்கீடு மத்திய அமைச்சரவை ஒப்புதலுடனேயே செய்யப்பட்டது.

2ஜி அலைகற்றை திட்டம் சாதாரண மக்களுக்கு தொலைதொடர்பு வசதி கிடைப்பதற்காக தொலைதொடர்பு வசதி கிடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம். ஏல முறையை பின்பற்றியிருந்தால் அந்த இலக்கை எட்டியிருக்க முடியாது.

ஆ.ராசா பதவி காலத்தில்தான் தொலைபேசி கட்டணம் பாதியாகக் குறைக்கப்பட்டு, நாடு முழுவதும் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டன என்பதையும், தொலைதொடர்புத் துறையில் இது புதிய சாதனை என்றார்.

http://thatstamil.oneindia.in/news

கருத்துகள் இல்லை: