சனி, 2 ஜூலை, 2011

ஜூலை 4ம் தேதி தெலுங்கானா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், எம்.எல்.சிக்கள் கூண்டோடு ராஜினாமா

ஹைதராபாத்: ஆந்திராவில் தெலுங்கானா விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், எம்.பிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சிக்கும், ஆந்திர ஆட்சிக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கிரண் ரெட்டி அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் இதில் அடக்கம் என்பதால் காங்கிரஸ் கட்சி வட்டாரம் பரபரப்பில் மூழ்கியுள்ளது. ஜூலை 4ம் தேதி தாங்கள் ராஜினாமா செய்யப் போவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தெலுங்கானாவைச் சேர்ந்தவரும், ஆந்திர மாநில பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான ஜனா ரெட்டி கூறுகையில், தெலுங்கானா தனி மாநில கோரிக்கைக்காக நாங்கள் விலக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தெலுங்கானாவை நிர்மானிக்க தாமதம் ஆவதால், நாங்கள் எல்லாம் ஏதோ பதவிக்காக ஒட்டிக் கொண்டிருப்பதாக மக்கள் தவறாக கருதும் நிலை ஏற்பட்டு விட்டது.

எங்களுக்குப் பதவி தேவையில்லை. மக்களின் உணர்வுகளைத்தான் நாங்கள் மதிக்கிறோம். எனவேதான் ஜூலை 4ம் தேதி அத்தனை பேரும் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளோம்.

எம்.பிக்கள் லோக்சபா சபாநாயகருக்கும், எம்.எல்.ஏக்கள் சட்டசபை சபாநாயகருக்கும், மேலவை உறுப்பினர்கள் மேலவைத் தலைவரிடமும் தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி வைப்பார்கள் என்றார் ஜனா ரெட்டி.

இதற்கிடையே, ஹைதராபாத் வந்துள்ள குலாம் நபி ஆசாத், தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸார் அவசரப்படக் கூடாது என்று கூறியுள்ளார். அவர் கூறுகையில், ஒரு தனி மாநிலத்தை உருவாக்குவது என்பது எளிதான காரியமல்ல. இதைப் பார்த்து நாளை மற்ற மாநிலங்களிலும் பிரச்சினை தலை தூக்கும் என்பதால் இதில் அவசரம் காட்ட முடியாது. காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் தங்களது முடிவை வாபஸ் பெற வேண்டும் என்றார்.
http://thatstamil.oneindia.in/news/2011/07/02/congress-lawmakers-from-telangana-resign-masse-aid0091.html

கருத்துகள் இல்லை: