வியாழன், 7 ஜூலை, 2011

தமிழகத்தில் ரூ.4000 கோடியில் கார் தொழிற்சாலை : பிரான்ஸ் நாட்டின் போஜோ சிட்ரோயன் நிறுவனம் அமைக்கிறது-பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பி.எஸ்.ஏ எனப்படும் போஜோ சிட்ரோயன் நிறுவனம், சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன் வாயிலாக, 5,000 பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் தொழிற்சாலை அமைப்பது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன்,போஜோ சிட்ரோயன் நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளுக்கான நிர்வாக இயக்குனர் பிரெடிரிக் பேப்ரி, தலைமையிலான குழு, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இதில்,தமிழக தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச்செயலர், தொழில்துறை முதன்மை செயலர், சிப்காட் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட உயரதி காரிகள் கலந்து கொண்டனர் போஜோ சிட்ரோயன் நிறுவனம், இந்தியாவில் ஆந்திரா (ஸ்ரீ சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலம்) மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் கார் தொழிற்சாலையை அமைப்பது குறித்து ஆய்வு செய்து வந்தது. இந்நிலையில், தமிழக முதல்வரின் முயற்சியால், இந்த தொழிற்சாலை தமிழகத்திற்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா, மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஒன்றரை மாதங்களுக்குள், மிக அதிக முதலீட்டில், தமிழகத்தில் இந்த மிகப் பெரிய திட்டத்திற்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தபோஜோ சிட்ரோயன் நிறுவனம், மோட்டார் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனையில் உலகளவில் 6வது இடத்திலும், ஐரோப்பாவில் 2வது இடத்திலும் உள்ளது. பாரீசில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், போஜோ சிட்ரோயன்' என்ற பிராண்டுகளில் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.
கடந்த 2010ம் ஆண்டில், இந்நிறுவனம் 3 லட்சத்து 9 ஆயிரத்து 556 கோடி ரூபாயை விற்றுமுதலாக பெற்றிருந்தது. உலகளவில் மிகப் பெரிய "பார்ச்‹ன் -500 ' நிறுவனங்களின் பட்டியலில், இந்நிறுவனம் 94வது இடத்தில் உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் அமைய உள்ளபோஜோ சிட்ரோயன் நிறுவனத்தின் தொழிற்சாலை, முதல்கட்டமாக, ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக இருக்கும். இத் தொழிற்சாலையின் வாயிலாக 5,000 பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உருவாகும் என்பதுடன், பல்வேறு கார் உதிரிபாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலைகள் அமையவும் இது வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், இந்தியாவின் "டெட்ராய்ட்' என்று அழைக்கப்படும் அளவிற்கு உருவாகியுள்ளது. தற்போது, சர்வதேச அளவில் மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் 20 மிகப் பெரிய நிறுவனங்களுள், ஏழு நிறுவனங்கள், சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொழிற்சாலைகளைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. இவ்வரிசையில், டைம்லர், போர்டு, பீ.எம். டபிள்யூ, ஹுண்டாய், மிட்சுபிஷி, நிசான், ரெனால்ட் ஆகியவற்றுடன் எட்டாவது நிறுவனமாக, "போஜோ சிட்ரோயன்' இடம் பெற உள்ளது. தமிழகத்தில், பல ஆண்டுகளாக அசோக் லேலண்ட், சிம்சன், டி.வி.எஸ், ரானே ஆகிய நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள், தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீத பங்களிப்பை அளிக்கின்றன என்பதுடன், இந்நிறுவனங்கள் அனைத்திலுமாக 80 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். நாட்டின் மொத்த கார் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 21 சதவீதம் என்ற அளவில் உள்ளது. மேலும், வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் 33 சதவீத பங்களிப்பையும், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் 35 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த செயின்ட் கோபெய்ன் மற்றும் மிச்செலின் டயர்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளன. இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டை சேர்ந்தபோஜோ சிட்ரோயன் நிறுவனமும் மிக அதிக அளவில் முதலீடு மேற்கொள்ள உள்ளது என்பது வரவேற்கக்கூடிய அம்சம். இதையடுத்து தமிழகத்தில், தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள கார் நிறுவனங்களின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 12.80 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலுமாக, மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், 18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. இது, வரும் 2015ம் ஆண்டில் 80 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் துறைமுகம், சாலை போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளன. மேலும், மாநிலத்தில் அபரிமிதமான சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களும், தொழிலாளர்களும் உள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக, தமிழகம் மிகவும் அமைதியான மாநிலமாக விளங்குவதால், பல பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு தொழிற்சாலை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இவை தவிர, மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான மிகவும் தரமான உதிரிபாகங்களும் இங்கு கிடைக்கின்றன. தமிழக முதல்வரிடம், பியூஜியாட் சிட்ரியான் நிறுவன உயர் அதிகாரிகள், தொழில் தொடங்குவதற்கு நிலம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தருமாறு கேட்டுக் கொண்டனர். முதல்வரும், நிறுவனம் தமிழகத்தை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கூறி, அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கும் என்று தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=266939

கருத்துகள் இல்லை: