புதன், 20 ஜூலை, 2011

நில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு சுரேஷ் உள்பட 4 பேர் கைது

மதுரை: மதுரையில் நில மோசடியில் ஈடுபட்ட திமுக மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, பொட்டு சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள வேங்கடசாமி சமுத்திரத்தைச் சேர்ந்தவர் சிவனாண்டி. இவரது மனைவி பாப்பா. இவர்களுக்கு செங்குளத்தில் 5.14 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்பாபு, கொடி. சந்திரசேகரன், சேதுராமன் உள்ளிட்ட சிலர் தங்களை மிரட்டி நிலத்தை அபகரித்ததாக மதுரை மாவட்ட எஸ்.பி. அஸ்ரா கார்க்கிடம் சிவனாண்டியும், அவரது மனைவி பாப்பாவும் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கு முன்ஜாமீன் கோரி மதுரை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் கோ. தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் என். சுரேஷ்பாபு, கொடி. சந்திரசேகரன், சேதுராமன் ஆகிய 4 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்யாத நிலையில் முன்ஜாமீன் வழங்கத் தேவையில்லை என கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த நேரில் ஆஜராகுமாறு கோ. தளபதி, என். சுரேஷ்பாபு, கொடி சந்திரசேகரன், சேதுராமன் ஆகியேருக்கு போலீசார் சம்மன் அனுப்பினர்.

இதனை ஏற்று தளபதி, பொட்டு சுரேஷ் மற்றும் சந்திரசேகரன் ஆகியோர் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு விசாரணைக்கு சென்றனர். தொழி்ல அதிபர் சேதுராமன் தலைமறைவாகிவிட்டார். அந்த 3 பேரிடம் எஸ்.பி. அஸ்ரா கார்க், துணை கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து திமுக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு, கொடி சந்திரசேகர், திருப்பரங்குன்றம் திமுக நகர் செயலாளர் கிருஷ்ண பாண்டியன் ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதில் கோ.தளபதி, சுரேஷ்பாபு என்ற பொட்டு சுரேஷ் ஆகியோர் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் வலதுகரமாக செயல்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

முன்னதாக மத்திய அமைச்சர் அழகிரியின் விசுவாசியான மதுரை திமுக பிரமுகரும், முன்னாள் வேளாண் விற்பனை குழு தலைவருமான அட்டாக்பாண்டி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/20/land-fraud-case-azhagiri-supportes-held-aid0176.html

கருத்துகள் இல்லை: