சனி, 2 ஜூலை, 2011

பத்மநாபசாமி கோயிலில் பிரமிக்க வைக்கும் நகை குவியல்... ரூ 50 ஆயிரம் கோடி மதிப்பு!!

திருவனந்தபுரம்: பத்மநாபசாமி கோவில் ரகசிய அறைகளில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் 10 கிலோ எடையுடன் 18 அடி நீள தங்க மாலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்றது பத்மநாபசாமி கோவில். இது ஒரு வைணவத் திருத்தலம்.

திருவாங்கூர் மன்னர் பரம்பரைக்குச் சொந்தமான அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் இந்த கோவில் இருந்து வருகிறது. இந்த கோவில் கருவறைக்கு அருகே 6 ரகசிய பாதாள அறைகள் நீண்ட காலமாக பூட்டப்பட்டு இருந்தன.

அந்த பாதாள அறைகளை திறந்து, உள்ளே இருக்கும் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொக்கிஷங்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, உச்சநீதி மன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.

இதற்காக ஓய்வு பெற்ற கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் உள்பட 7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர், 6 ரகசிய அறைகளுக்கும் ஏ,பி,சி,டி,இ,எப் என பெயரிட்டு ஒவ்வொன்றாக திறந்து நகைகளின் விவரங்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

ஏ மற்றும் பி அறைகளில் நகைகள் மதிப்பீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த அறைகளில் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த, தங்க மணிகள், தங்கத்திலான சாமி சிலைகள், தங்க கயிறு, தங்க கிரீடங்கள், தங்க மாலைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டன.

கேரள பட்ஜெட்டை விட அதிகம்

அவற்றில் விலைமதிக்க முடியாத அபூர்வமான வைரம், வைடூரியம் உள்பட நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து அறைகளில் உள்ள தங்கம், வைரம், வைடூரியம், ரத்தினம் ஆகியவற்றின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.

கேரள மாநில ஆண்டு பட்ஜெட்டின் வருவாய் அளவே ரூ.35 ஆயிரம் கோடிதான். இந்த நிலையில் பத்மநாபசாமி கோவிலில் உள்ள நகைகளின் மதிப்பு ரூ.50 ஆயிரம் கோடியை தாண்டி இருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஏ அறையில் இருந்த சுமார் 10 கிலோ எடைகொண்ட 18 அடி நீளமுள்ள தங்கச் சங்கிலி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அது பத்மநாபசுவாமிக்கு அணிவிக்க மன்னரால் வழங்கப்பட்டது என தெரிகிறது.

ஒரு பாதாள அறையின் உள்பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேல் திறக்கப்படாத மற்றொரு சிறிய ரகசிய அறை திறக்கப்பட்டது. அந்த அறையில் விஷ வாயு மற்றும் விஷப் பூச்சிகள் இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டதால், முதலில் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டது.

1200 தங்கச் சங்கிலிகள்

அதன்பின்னர் மதிப்பீட்டு குழுவினர், தீயணைப்பு படை வீரர்கள் உதவியுடன் முகக்கவசம் அணிந்து உள்ளே சென்றனர். அங்கும் குவியல் குவியலாக நகைகள்தான் இருந்தன. 1200-க்கு மேற்பட்ட 'சரப்பொலி' என்று அழைக்கப்படும் தங்கச் சங்கிலிகள் ஒரு அறையில் இருந்தன. அவற்றில் 'அவல்' என்று அழைக்கப்படும் ரத்தினக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தன.

அவை திருவாங்கூர் மன்னர்கள், ராணிகள் அணிந்த நகைகளாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 3 மணி மகுடங்கள், தங்கத் தாம்பாளங்களில் தங்க நாணயங்களும் இருந்தன. 'சொர்ண தண்டு' என்று அழைக்கப்படும் தங்க செங்கோல், நெக்லஸ் மற்றும் ஏராளமான பதக்கங்களும் குவிந்து இருந்தன.

ஜொலிக்கும் வைரங்கள்

பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் அதிக அளவிலான தங்கக் குடங்கள் உள்ளன. அவற்றிற்குள் தங்க க்காசுகள் குவிந்திருந்தன. அவை அனைத்தும் புதிதாக செய்யப்பட்டது போல பொலிவுடன் காணப்பட்டன.

அதேபோல பெரிய ரத்தின கற்கள் பதித்த அரியாசனம், மன்னர்கள் அணியும் கிரீடங்கள், நவரத்தின கற்கள் பதித்த தங்க கிரீடங்கள், பத்மநாபசாமி சிலை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு கலை வண்ணத்தில் பளிச்சிட்டன.

நெப்போலியன் கால நாணயங்கள்

இவற்றில் பிரஞ்சுப் பேரரசன் நெப்போலியன் காலத்து நாணயங்கள் ஏராளமாக இருந்தன. அதே போல வெனிஸ் நாணயங்கள் மட்டும் 70 கிலோவுக்கும் அதிகமாக இருந்தன.

எண்ணி முடிக்க ஒரு வாரம் ஆகலாம்

சந்தன மண்டபம் என்று அழைக்கப்படும் பகுதியில் உள்ள 'ஏ' அறையில் அனைத்தும் கணக்கிடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டுவிட்டன. அனைத்து அறைகளிலும் உள்ள நகைகளை கணக்கிட்டு மதிப்பீடு செய்ய இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்று கருதப்படுகிறது. இவற்றின் மதிப்பையும் சேர்த்தால் இன்னும் பல ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட தங்க நகைக் குவியல்கள் மன்னர் காலத்து நகைகள் என்பதால், அதன் தொழில்நுட்பம், வடிவமைப்பு டிசைன்கள் ஆகியவற்றை பார்ப்பதற்கு பொது மக்களும், தங்க நகை வியாபாரிகளும், நகை வடிவமைப்பாளர்களும் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

விலை மதிப்பற்ற நகைகள் இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதால், பத்பநாபசாமி கோவிலுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/02/rs-50k-cr-worth-treasure-padmanabha-swamy-temple-aid0136.html

1 கருத்து:

Ponniyinselvan சொன்னது…

my grandpa was a duke. i used to tell my relatives to search all places so that they may find some treasure. They did not believe me. Now they may try.There was a telltale that one of my relatives found a treasure which had a crown +++.Good heavens. India is rich,in everything, culture, religion,arts and now jewels.Really amazing.
kalakarthik