வியாழன், 14 ஜூலை, 2011

மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக நிர்வாகிகள் மீது ரூ. 5 கோடி நில அபகரிப்புப் புகார்

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் உதவியாளர்கள், திமுக பிரமுகர்கள் மீது ரூ. 5 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டிப் பறித்து விட்டதாக புகார் தரப்பட்டுள்ளது. புகார் உண்மையானதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை புறநகர் எஸ்.பி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நில அபகரிப்புப் புகார்கள் மீது போலீஸார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தனிப் பிரிவே அமைத்து போலீஸார் துரிதகதியில் செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மு.க.அழகிரியின் முக்கிய உதவியாளர்கள் மூன்று பேர் மீது நில அபகரிப்புப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பொட்டு சுரேஷ், கோ.தளபதி மற்றும் எஸ்ஆர் கோபி ஆகியோரே அந்த முக்கியப் புள்ளிகள்.

மதுரையில் கடந்த திமுக ஆட்சியில் ராஜாக்கள் போல வலம் வந்த அழகிரியின் முக்கிய உதவியாளர்களில் இந்த மூவருக்கும் தனி இடமே உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மதுரை திருமங்கலம் அருகே உள்ள வெங்கடசமுத்திரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவனாண்டி மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை புறநகர் எஸ்.பியிடம் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:

செங்குளம் என்ற இடத்தில் எங்களுக்கு சொந்தமான ரூ. 5 கோடி மதிப்புள்ள 5.14 ஏக்கர் நிலத்தை ரூ. 40 லட்சம் கொடுத்து விட்டு பொட்டு சுரேஷ், எஸ்.ஆர்.கோபி, திமுக நகர் மாவட்டச் செயலாளர் கே.தளபதி, திருமங்கலம் ஒன்றியத் தலைவர் கே. சந்திரசேகரன், திருமங்கலம் டவுன் பஞ்சாயத்துத் தலைவர் இந்திரா காந்தி அவரது கணவர் கிருஷ்ணசாமி ஆகியோர் அபகரித்து விட்டனர்.

இதே நிலத்துக்கு இதற்கு முன் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்பவர் ரூ. 4.3 கோடி தருவதாக உறுதி அளித்து பவர் ஆப் அட்டார்னி பெற்றுக் கொண்டார். ஆனால்2007ல் ரூ. 1.4 கோடி தந்து விட்டு ஏமாற்றி விட்டார். இதன் பிறகே உறவினர் ஒருவர் மூலம் பொட்டு சுரேஷ்சை அணுகினோம்.

பிரச்னையை தீர்த்து வைப்பதாக அவர் உறுதி அளித்தார். ஆனால் அவரது எண்ணம் பின்னர் தான் தெரிந்தது. அவரது ஆட்கள் எங்களை தாக்கி பதிவு அலுவலகத்துக்கு கட்டாயப்படுத்தி கொண்டு சென்றனர். அங்கு இந்திரா காந்தி பெயரில் நிலத்தை பதிவு செய்து கொண்டனர் எனத் தெரிவித்துள்ளனர்.

ஐஜி சிவனாண்டியும் சிக்குகிறார்

ஏற்கனவே கொடைக்கானலில் திமுக நகராட்சித் தலைவர் உள்பட 3 பேரையும், சிவகங்கையில் 4 பேரையும் நில அபகரிப்புப் புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர். கொடைக்கானல் விவகாரத்தில், முன்னாள் மேற்கு பிராந்திய ஐ.ஜியான சிவானண்டியும் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.

கொடைக்கானல் நகராட்சித் தலைவராக இருந்த முகம்மது இப்ராகிமுக்காக நில உரி்மையாளரை சிவனாண்டி மிரட்டிப் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதேபோல சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் திமுக இளைஞர் அணி செயலாளர் பி. முருகன், அவரது சகோதரர் பி. சுப்பையா உள்ளிட்டோர் மீது சிவகங்கையில் நில அபகரிப்பு புகார் கூறப்பட்டு உள்ளது.

சிவனாண்டி கடந்த அதிமுகஆட்சியில் ராஜா போலம் வலம் வந்தவர். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்தார்.இதனால் கடந்த திமுக ஆட்சியில் அவரை போட்டுப் பார்த்தது திமுக அரசு. இறுதியில் அவர் திமுகவுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது அவர் மீது நில அபகரிப்புப் புகார் எழுந்துள்ளது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2011/07/14/m-k-azhagiri-s-assistants-deep-trouble-aid0091.html

கருத்துகள் இல்லை: