வெள்ளி, 8 ஜூலை, 2011

பூட்டுப் பிரச்சனை: பத்மநாப சுவாமி கோவில் 6- வது பாதாள அறை திறப்பு ஒத்திவைப்பு

டெல்லி: பத்மநாப சுவாமி கோவிலின் 6-வது பாதாள அறையை தேதி குறிப்பிடும் வரை திறக்க வேண்டாம் என்று இன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் 6 பாதாள அறைகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் நியமித்த 7 பேர் கொண்ட குழு முன்பு அவற்றை திறந்து அதில் உள்ள பொக்கிஷங்களைக் கணக்கிடும் பணி நடந்து வருகிறது. இதுவரை 5 பாதாள அறைகள் திறக்கப்பட்டுள்ளன.

அவற்றில் இருந்து தங்க, வைர, வைடூரிய நகைகள். சாமி சிலைகள், தங்க காசுகள் என விலைமதிப்பற்ற பொருட்கள் கிடைத்துள்ளன. இதன் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 6-வது பாதாள அறையை திறக்க முயன்றபோது அதன் பூட்டை திறக்க முடியவில்லை. இந்த அறைகள் கடந்த 135 ஆண்டுகளுக்கு மேல் பூட்டியே கிடந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பூட்டை உடைத்தால் உள்ளே இருக்கும் பழமையான பொருட்களுக்கு ஏதேனும் சேதம் வந்துவிடுமோ என்று அதிகாரிகள் அஞ்சினர். இதையடுத்து 6-வது அறையைத் திறக்கலாமா, வேண்டாமா என்று உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மறுதேதி குறிப்பிடும் வரை 6-வது பாதாள அறையைத் திறக்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை பாதுகாக்க மாநில அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேரள அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.

6-வது பாதாள அறையைத் திறக்க பூட்டு மட்டும் காரணமன்று. பாதுகாப்பு கருதியும் தான் இந்த அறையைத் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/08/padmanabhaswamy-temple-opening-6th-vault-delayed-aid0128.html

கருத்துகள் இல்லை: