புதன், 27 ஜூலை, 2011

கேரளாவில் 7 முறை நிலநடுக்கம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதியில், நேற்று நான்கு மணிநேர இடைவெளியில் 7 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

கேரள மாநிலத்தில் நேற்று, இடுக்கி, கோட்டயம், பத்தினம்திட்டா ஆகிய மாவட்டங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று மதியம் கோட்டயம் மாவட்டத்தின், மீனாட்சில், இராட்டுபேட்டா, முண்டகேயம், பாலா, கஞ்சிரம்பள்ளி ஆகிய பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் முண்டகேயம் பகுதியில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

பத்தினம்திட்டா மாவட்டத்தில், கோணியில், நாராயணபூரம் ஆகிய பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடுக்கியின் செருதோணி, கட்டப்பனா, நெடுங்கம், தேக்கடி, புல்லுமேடு, முல்லைபெரியார், ஆணாகெட்டு, முலமற்றம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 1.5 முதல் 3.8 வரை பதிவானது.

பகல் 1.09 மணிக்கு துவங்கிய நிலநிடுக்கம், 1.15 மணிக்கு இரண்டாவது முறை ஏற்பட்டு 2 நிமிடங்கள் தொடர்ந்தது. பின்னர் அவ்வப்போதாக நிலநடுக்கம் ஏற்பட்டு, கடைசியாக 5.21 மணிக்கும் ஒரு முறை ஏற்பட்டது. கோணி பகுதியில் இடி இடிப்பது போன்ற ஒலியுடன், லேசான நிலநடுக்கமும் ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறினார். நிலநடுக்கத்தினால் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது, வீடுகள், கடைகள், பள்ளிகளில் இருந்த மக்கள் சாலைகளுக்கு ஒடி வந்தனர். இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடந்த வாரம் வியாழனன்று அதிகாலை 5.20 மணிக்கும், வெள்ளியன்று இரவு 9.50, 9.55 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபகுதிகளில் நேற்றும் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: