புதன், 6 ஜூலை, 2011

கார்த்தேகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது அகவையில் இன்று கொழும்பில் காலமானார்

ஈழத் தமிழ் சமூகத்திலிருந்து தலைசிறந்த அறிஞரும்; சமூக அரசியல் விமர்சகரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான கார்த்தேகேசு சிவத்தம்பி அவர்கள் தனது 79 வது அகவையில் இன்று கொழும்பில் காலமானார்

மே மாதம் 10 ம் திகதி 1932 ம் ஆண்டு கரவெட்டியில் பிறந்த சிவத்தம்பி அவர்கள் ஆரம்பக் கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் இடைநிலைக் கல்லூரியை கொழும்பு ஸாகிராக் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் கொழும்பு ஷாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்தார்.
பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் அதே பல்கலைக் கழகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்ட அவர் ஐக்கிய இராச்சியத்திலுள்ள பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு முனைவர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு தொடக்கம் சுமார் 17 ஆண்டுகள் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றினார். பின்னர் மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் இரண்டு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். தொடர்ந்து தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வருகைப் பேராசிரியராகவும் ஓராண்டு வரை பணி புரிந்தார். இந்தியா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல்வேறு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களிலும் வருகைப் பேராசிரியராகவும் இருந்துள்ளார்.

பல்கலைக்கழக காலத்தில் மேடை நாடகங்களில் நடித்ததோடு பின்னர் வானொலி நாடகங்களிலும் நடித்து புகழ் பெற்றவர். இலங்கையர்கோன் எழுதிய 'விதானையார் வீட்டில்' தொடர் நாடகத்தில் இவரே முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

ஆய்வுக்கட்டுரைகள், நூல்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்களை பல்வேறு துறைகளிலும், ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கிய இவர் முதன்மையாகப் பயின்ற துறைகளுக்குப் புறம்பாகவும் பல துறைகளில்; ஆர்வம் கொண்டிருந்தார். இவரது ஆர்வம், தமிழ், சமயம், சமூகவியல், மானிடவியல், அரசியல், வரலாறு, கவின் கலைகள் எனப் பல்வேறு துறைகளையும் தழுவியிருந்தது. மார்க்சியச் சிந்தனைப் போக்குடைய இவர் யாழ்ப்பாணச் சமுதாயத்தின் பல்வேறு குறைபாடுகளையும் கடுமையாக விமர்சித்தார்.

தமிழக அரசின் திரு.வி.க. விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட பேராசிரியர் கா. சிவத்தம்பியின் ஆளுமை ஊற்றுக்களை பதிவு செய்யும் வகையில், 'கரவையூற்று' எனும் தலைப்பில் யாழ்ப்பாணம் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கொழும்புக் கிளை நூல் ஒன்றை வெளியிட்டுள்ளது.


யாழ்ப்பாண சமூகத்தை புரிந்துகொள்வது பற்றி,
இலங்கைத் தமிழர் - யார், எவர்? - யாழ்ப்பாணத்தின் புலமைத்துவ மரபு -
தமிழில் இலக்கிய வரலாறு -இலக்கணமும் சமூக உறவுகளும் -
மதமும் கவிதையும் -
தமிழ் கற்பித்தலில் உன்னதம் - சுவாமி விபுலாநந்தரின் சிந்தனை நெறிகள் -
திராவிட இயக்கக் கருத்துநிலையின் இன்றைய பொருத்தப்பாடு -
தமிழ்ப் பண்பாட்டில் சினிமா
பண்டைத் தமிழ்ச் சமூகம் - வரலாற்றுப் புரிதலை நோக்கி என்பன அவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை

5 கருத்துகள்:

முனைவர் நா.ஐானகிராமன் சொன்னது…

மாபெரும் தமிழறிஞரின் மரணம் நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது.

முனைவர் துரை.மணிகண்டன்.
முனைவர் நா.ஜானகிராமன்.

முனைவர் நா.ஐானகிராமன் சொன்னது…

மாபெரும் தமிழறிஞரின் மரணம் நம்மைத் துயரத்தில் ஆழ்த்துகிறது.

முனைவர் துரை.மணிகண்டன்.
முனைவர் நா.ஜானகிராமன்.

சிவா சின்னப்பொடி சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி ஐயா

கார்த்திகேசு .சிவத்தம்பி அவர்கள் இன்று இரவு எட்டரை மணிக்கு கொழும்புவில் காலமானார் . அவரது இறுதிச் சடங்கு எப்போது என்ற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை . தமது இரங்கலைத் தெரிவிக்க விரும்புகிறவர்கள் இந்த எண்ணுக்குத் தொடர்புகொள்ளவும் .
Contact No. 0094 11 3150803

தங்க முகுந்தன் சொன்னது…

எமது ஆழ்ந்த அனுதாபங்கள்! - தகவலுக்கு நன்றி!

சிவா சின்னப்பொடி சொன்னது…

தங்கள் வருகைக்கும் எங்கள் ஆசானின் மறைவுத்துயர் பற்றி கருத்துரைத்ததற்கும் நன்றி முகுந்தன்