ஞாயிறு, 3 ஜூலை, 2011

மீண்டும் அமைச்சரவை மாற்றம்-சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்-செந்தூர்ப்பாண்டியன் புதிய அமைச்சர்

சென்னை : தமிழக சட்டத்துறை அமைச்சர் இசக்கி சுப்பையா இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்.எல்.ஏ. செந்தூர்ப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் 2வது முறையாக இன்று முதல்வர் ஜெயலலிதா மாற்றம் செய்தார்.

சட்ட அமைச்சராக இருந்து வந்த இசக்கி சுப்பையா திடீரென நீக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரி மகள் சமீபத்தில் தனது காதலருடன் வீட்டை விட்டு வெளியேறி, மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்தினரால் மிரட்டல் இருப்பதாகவும் இசக்கி சுப்பையாவின் சகோதரி மகள் புகார் கூறியிருந்தார். இருப்பினும் பின்னர் இரு குடும்பத்தினரும் சமாதானமடைந்து திருமண வரவேற்பை நடத்தினர். இந்த நிலையில்தான் இசக்கி சுப்பையா திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

செந்தூர்ப்பாண்டியன் புதிய அமைச்சர்

அமைச்சரவையில் புதிதாக கடையநல்லூர் எம்.எல்.ஏ செந்தூர்ப்பாண்டியன் சேர்க்கப்பட்டுள்ளார். இவருக்கு கதர்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவை அமைந்தபோதே அமைச்சராவார் என்றுஎதிர்பார்க்கப்பட்டவர் செந்தூர்ப்பாண்டியன். ஆனால் அப்போது கிடைக்காத பதவி இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது.

அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்

இதுதவிர சில அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா

இசக்கி சுப்பையா இதுவரை வைத்திருந்த சட்டத்துறை, செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் செந்தமிழனிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உணவுத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இலாகா புத்தி சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

புத்தி சந்திரன் வைத்திருந்த சுற்றுலாத்துறை கோகுல இந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கோகுல இந்திரா வைத்திருந்த வணிகவரித்துறை அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதுவரை கதர்த்துறை அமைச்சராக இருந்து வந்த பி.வி.ரமணா, இனி கைத்தறித்துறை அமைச்சராக செயல்படுவார்.

நாளை பதவியேற்பு

புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செந்தூர்ப்பாண்டியன் நாளை பதவியேற்கவுள்ளார். அவருக்கு ஆளுநர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசியக்காப்புப் பிரமாணமும் செய்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தூர்ப்பாண்டியனின் 30 வருட கால அரசியல் பணி:

செங்கோட்டையை சேர்ந்த கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர் பாண்டியன் கடந்த 35 ஆண்டுகளாக அதிமுகவில் தீவிரமாக பணியாற்றி நகர துணை செயலாளர், நகர செயலாளர், மாவட்ட துணை செயலாளர், மாவட்ட செயலாளர் உள்பட பல்வேறு பதவிகளில் திறம்பட செயல்பட்டவர்.

கடந்த 7 ஆண்டுகளாக நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் இவர் கடந்த சடடமன்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் சட்டமன்ற பொது குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் செந்தூர்பாண்டியன் நெல்லை ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக தமிழக முதல்வரும், கழக பொது செயலாளருமான ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பு நெல்லை மாவட்ட அதிமுகவினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்பு வகித்து கட்சி தலைமையிலும், தொண்டர்களிடமும் நம்பிக்கை பெற்று திறம்பட பணியாற்றி வரும் செந்தூர்பாண்டியன் கடந்த பார்லிமெண்ட் தேர்தலிலும் தென்காசி தொகுதியில் எம்பி லிங்கம் வெற்றி பெற காரணமாக இருந்து ஜெயலலிதாவின் பாராட்டுதலை பெற்றவர்.

இவருக்கு சண்முகதுரைச்சி என்ற மனைவியும், ஐயப்பராஜ் (சென்னை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கறிஞராக உள்ளார்), கிருஷ்ணமுரளி என்ற இரண்டு மகன்களும், பிரியதர்ஷினி (டாக்டர்) என்ற மகளும் உள்ளனர்.

செந்தூர்பாண்டியனுக்கு கடையநல்லூர் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர்கள் கிட்டு ராஜா, தங்கவேல், ஒன்றிய செயலாளர்கள் வசந்தம் முத்துபாண்டி, செல்லப்பன், சங்கரபாண்டியன், தொகுதி துணை செயலாளர் நடராஜன், முருகன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் மூர்த்தி, மாநில விவசாய அணி இணை செயலாளர் ஆணை குட்டி பாண்டியன், நகர ஜெ பேரவை செயலாளர்கள் வக்கீல் வெங்கடேசன், மைதீன், நகர துணை செயலாளர் ராஜா, லிங்கம் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

http://thatstamil.oneindia.in/news/2011/07/03/isakki-sacked-senthoor-pandian-appointed-new-minister-aid0091.html

கருத்துகள் இல்லை: