திங்கள், 4 ஜூலை, 2011

சட்ட அமைச்சர் பதவியிலிருந்து இசக்கி சுப்பையா நீக்கப்பட்டது ஏன்?

நெல்லை: தமிழகத்தில் 2வது முறையாக நடந்த அமைச்சரவை மாற்றத்தில் சட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா பதவியை இழந்துள்ளார். கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் கதர்துறை அமைச்சராகியுள்ளார். இது அமைச்சரவை மாற்றமாக மட்டும் நெல்லை மாவட்டத்தில் பார்க்கப்படவில்லை. மாறாக, நெல்லை மாவட்ட அதிமுகவினரை பெரும் சலசலப்பில் இந்த அமைச்சரவை மாற்றம் ஆழ்த்தியுள்ளது.

தமிழக அமைச்சரவை நேற்று 2வது முறையாக மாற்றியமைக்கப்பட்டது. இதில் சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையா நீக்கப்பட்டார். புதிய அமைச்சராக கடையநல்லூர் எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நெல்லை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்த செந்தூர்பாண்டியன் இம்முறை சட்டசபை தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் நேற்று அமைச்சராக அறிவிக்கப்பட்டதன் மூலம் கடையநல்லூர் தொகுதிக்கு விஐபி அந்தஸ்து கிடைத்துள்ளது.

நெல்லை மாவட்ட அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் அதிரடியால் கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர். சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றவுடன் பலரும் நெல்லை தொகுதி எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் அம்பை தொகுதியி்ல் இருந்து இசக்கி சுப்பையாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.

சட்டத்துறை அமைச்சராக இருந்த இசக்கி சுப்பையாவும், கால்நடை அமைச்சராக இருந்த கருப்பசாமியும் கடந்த மே 16ம் தேதி பொருப்பேற்றனர்.

இந்த நிலையில், கடந்த வாரத்தில் நெல்லை மாவட்ட அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. நெல்லை புறநகர், மாநகர் மாவட்ட நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டனர். புறநகர் மாவட்ட செயலாளராக இரு்ந்த எம்எல்ஏ செந்தூர்பாண்டியன், ஓருங்கிணைந்த மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என அதிமுக தலைமை அறிவித்தது.

இதற்கிடையில் அமைச்சர் கருப்பசாமியிடம் இருந்த கால்நடை துறை பறிக்கப்பட்டு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை வழங்கப்பட்டது. நேற்று இரண்டாவது முறையாக நடந்த அமைச்சரவை மாற்றத்தில் இசக்கி சுப்பையாவிடம் இருந்து பறிக்கப்பட்ட சட்டதுறை, செய்தி துறை அமைச்சர் செந்தமிழனிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.

கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ செந்தூர்பாண்டியன் புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டார். நெல்லை அதிமுகவில் தொடர்ந்து நடந்து வரும் அதிரடி மாற்றங்களினால் கட்சியினர் மத்தியில் அடுத்தடுத்த என்ன என்கிற பரபரப்பு நிலவுகிறது.

நில ஆக்கிரமிப்பு காரணமா?

இதற்கிடையே இசக்கி சுப்பையாவின் நீக்கத்திற்கு நில ஆக்கிரமிப்பு விவகாரமே காரணம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

சென்னையின் பிரதான பகுதியில் நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அமைச்சர் இசக்கி சுப்பையா ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு முதல்வர் காதுகளுக்குப் போனது. இதையடுத்தே அவரை முதல்வர் ஜெயலலிதா நீக்கியதாக கூறப்படுகிறது.

முதல் நீக்கம்

ஜெயலலிதா அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட முதல் அமைச்சர் என்ற பெயர் இசக்கி சுப்பையாவுக்குக் கிடைத்துள்ளது.

இதுவரை ஜெயலலிதா அமைச்சரவையில் சிறிய அளவிலான மாற்றங்களே நடைபெற்றுள்ளன. ஆனால் பதவியேற்ற 2 மாதத்திற்குள் ஒரு அமைச்சர் நீக்கப்பட்டிருப்பதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளன.
http://thatstamil.oneindia.in/news/2011/07/04/land-grabbing-let-dismiss-isakki-subbiah-aid0175.html

கருத்துகள் இல்லை: