செவ்வாய், 5 ஜூலை, 2011

சன் டி.வி. நிர்வாகி கைது: கிளறப்படும் பழைய புகார்கள்- போலீஸ் விசாரணைக்கு அனுமதி கேட்டு நீதிமன்றத்தில் மனு

சென்னை, ஜூலை 4: திரைப்பட விநியோகஸ்தரை மிரட்டியதாக கூறப்படும் வழக்கில் சன் டி.வி. நிர்வாகி சக்சேனா கைது செய்யப்பட்டதால், அவர் தொடர்பான பழைய புகார்களை சென்னை மாநகரக் காவல்துறையினர் துப்புதுலக்கி வருகின்றனர்.
சேலத்தைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் டி.எஸ்.செல்வராஜ். இவரிடம் சன் டி.வி.யின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, "தீராத விளையாட்டு பிள்ளை' என்ற திரைப்படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமையை தருவதாக ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்தாராம்.
இந்நிலையில் சக்சேனா ஒப்பந்தப்படி அந்த படத்தின் சேலம் பகுதி விநியோக உரிமத்தை செல்வராஜுக்கு கொடுக்காமல், நேரடியாக விநியோகம் செய்தாராம். இதனால், தான் கொடுத்திருந்த ரூ. 82.53 லட்சத்தை செல்வராஜ் திருப்பிக் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் சக்சேனா இழுத்தடிப்பு செய்ததாக தெரிகிறது. மேலும் இப் பிரச்னையில் 5-1-2011 அன்று சக்சேனா, செல்வராஜுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் செல்வராஜ் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீஸôர் நம்பிக்கை மோசடி, வஞ்சித்து ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சக்சேனா மீது வழக்குப் பதிந்தனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சக்சேனாவை கைது செய்தனர். பின்னர் கே.கே. நகர் காவல் நிலையத்தில் சக்சேனாவிடம் போலீஸôர் விசாரணை செய்தபின் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சக்சேனா ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம் அவரை 15 நாள்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.
பழைய புகார்கள்: சென்னை மாநகர காவல்துறையில் சக்சேனா மீது 2 புகார்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் ஒரு பெண்ணை மிரட்டியதாக ஏற்கனவே ஒரு புகார் மாநகர காவல்துறையில் உள்ளதாம். இப் புகார் வந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில், மாநகர காவல்துறை அப் புகார் மீது இப்போது துப்புதுலக்கி வருவதாகக் கூறப்படுகிறது. அதே போல அண்மையில் வெளியான ஒரு திரைப்படத்தின் டி.வி. உரிமத்தை வாங்கியதற்காக ரூ. 2.75 கோடி பணத்தை வழங்காமல் சக்சேனா இழுத்தடிப்பு செய்து வருவதாக அப் படத்தின் தயாரிப்பாளர் மாநகர காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதியிடம் கடந்த மாதம் 7-ம் தேதி புகார் அளித்தார். இப் புகார் குறித்தும் போலீஸôர் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இப் புகார்களின் கீழும் சக்சேனா மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருப்பதாகக் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. இந்தப் புகார்கள் குறித்து இன்னும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை மனு: இதற்கிடையே கே.கே. நகர் போலீஸôர், சக்சேனாவை தங்களது காவலில் எடுத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது
http://www.dinamani.com

கருத்துகள் இல்லை: