புதன், 6 ஜூலை, 2011

மக்கள் வெள்ளத்தில் களைகட்டிய மாபெரும் பிரான்ஸ் தமிழர் விளையாட்டு விழா !பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பங்கெடுப்புடன் 14வது பிரான்ஸ்- தமிழர் விளையாட்டு விழா மிகப் பிரமாண்டமாக இடம்பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை( யுலை3) காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய நிகழ்வுகள் இரவு 9 மணிவரை இடம்பெற்றிருந்தது.

பிரான்சின் இளையோர் விவகார விளையாட்டுத் துறை முன்னாள் அமைச்சராக இருந்தவரும், கொம்யூனிச கட்சியின் தேசிய செயலாளருமாக இருந்தவருமாகிய, மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர் Mme Marie George Buffet அவர்கள் சிறப்பு அதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

50க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்களின் ஆதரவுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழ் பொது அமைப்புக்கள், சமூக பிரதிநிதிகள், செயற்பாட்டளார்கள் என பலரது உறுதுணையுடன் இடம்பெற்ற இப்பெரு நிகழ்வை, தமிழர் புனர்வாழ்வுக்கழகம்- பிரான்ஸ் மற்றும் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்-பிரான்ஸ் ஆகியன கூட்டாக முன்னெடுத்திருந்தன.

சிறுவர் முதல் பெரியவர்கள் வரைக்குமான, ஐம்பதுக்கும் மேற்பட்ட விiளாயட்டுப் போட்டிகள், கலைநிகழ்வுகள் ஆகியவற்றும் பல பல்சுவை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

விழாவின் ஆரம்பநிகழ்வாக, ஈழவிடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கும், போராளிகளை நினைவுகூரும் வகையில் அமைக்கப்பட்ட நினைவுப்தூபியின் முன், வணக்கம் செலுத்தப்பட்டு, தவில் நாதஸ்வரத்துடன் சிறப்பு பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கூத்திசைக் கலைஞர் பெனடிற் அவர்களின் தமிழ்தாய் வாழ்த்துடன், பிரான்ஸ் தேசியக் கொடியை Mme Marie George Buffetஅவர்களும், ஐரோப்பிய ஒன்றியக் கொடியினை உலகத் தமிழர் பண்பாட்டு இயக்க -பிரான்ஸ் தலைவர் அலன் ஆனந்தன் அவர்களுன், தமிழர் புனர்வாழ்வுக் கழக - கொடியினை பிரானஸ்-உப தலைவர் கருணைராஜன் அவர்களும் ஏற்றிவைத்தனர்.

பின்னர் பிரநிதிநிகளின் உரைகளோடு நிகழ்வுகள் இனிதே ஆரம்பமாகின.

விளையாட்டுத் திடல்கள், சிறுவர் பூங்கா, கலையரங்கள், உணவகம், தமிழர் பொது அமைப்புக்களின் மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் விற்பனைத் திடல்கள் என மைதானம் பூராவும் சிறந்த முறையில் ஓருங்கமைக்கப்பட்டிருந்தது.

தாயக விளையாட்டுக்களான கிளித்தட்டு, சங்கீதக்கதிரை, முட்டியுடைத்தல், தலையணைச்சண்டை, கயிறுழுத்தல், வழுக்குமரம் ஏறுதல் போன்றன வழமைபோல் அனைவரது கவனத்தையும் பெற்றது.

கூடவே கரப்பந்தாட்டம், சதுரங்கம் உட்பட இன்னும் பல வேடிக்கை வினோத விளையாட்டுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு உதைப்பந்தாட்டம், கிரிக்கட் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய கழகங்களுக்கான பரிசளிப்பும் இடம்பெற்றது.
உணவுசாலையில் சுடச்சுட கூழ், அப்பம் தோசை உட்பட கொத்துறொட்டி, பிரியாணி போன்ற பல அறுசுவை உணவுகளும் நாவூறவாயூற பரிமாறப்பட்டன.

இளையோர் உலகின் முன்னணி றாப்பிசை நட்சத்திரங்களான சித்தாடி(கனடா), சுரேஸ் த வன்(நெதர்லாந்து) ஆகியோரின் சிறப்பு நிகழ்சிகள் இளமைத் துள்ளலாக கலையரங்கை களைகட்ட வைத்தது.

ஸ்ருதிலயாவின் வானப்பாட்டி இளங்கலைஞர்களின் பாடல்கள் பரவசமூட்ட பல்சுவைக் கலைஞர் இந்திரின் அறுசுவைப் பாடல்களுடன் ஸ்ரார் இசைக்குழுவின் இன்னிசை விருந்து பொன்மாலைப் பொழுதாக அமைந்திருந்தது.

இதேவேளை, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்ககோரும் பிரான்ஸ்-தமிழர் நடுவத்தின் கையெழுத்துப் போராட்டமும் இந்நாளில் முன்னெடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: