வியாழன், 7 ஜூலை, 2011

இப்போதைக்கு மத்திய அமைச்சரவை மாற்றம் இல்லை?!- தயாநிதி தப்புகிறார்!

டெல்லி: மத்திய அமைச்சரவையில் இப்போதைக்கு எந்த மாற்றமும் செய்ய வேண்டாம் என்று சோனியா காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதும் சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டிய அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதே போல தனி தெலுங்கானா விவகாரத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் ஏராளமான காங்கிரஸ் எம்பிக்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

மக்களவை மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், பல்வேறு பிரச்சனைகளில் எதிர்க் கட்சிகளை சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ள காங்கிரஸ், திமுகவை இப்போதைக்கு பகைத்துக் கொள்ளும் நிலையில் இல்லை.

தயாநிதி மாறனை நீக்காமல் மத்திய அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டால் அது மக்களிடையே கேள்வி எழுப்பும் என காங்கிரஸ் கருதுகிறது.

லோக்பால் மசோதா, கறுப்புப் பண விவகாரம், ஸ்பெக்ட்ரம், தெலுங்கானா, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு விவகாரம் என ஏகப்பட்ட சிக்கல்களில் உள்ள மத்திய அரசு, அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் மேலும் பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்ளத் தயாராக இல்லை என்று தெரிகிறது.

இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது அரசியல் ஆலோசகர் அஹமத் படேல், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், மத்திய சுகாதார அமைச்சரும் கட்சியின் ஆந்திர, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் தயாநிதி மாறன் விவகாரம், தனி தெலுங்கானா மாநில பிரச்சனை, மத்திய அமைச்சரவை மாற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மத்திய அரசுக்குப் பல்வேறு நெருக்கடிகள் இருப்பதால் இப்போதைக்கு மத்திய அமைச்சரவை மாற்றத்தைச் செய்ய வேண்டாம் என இக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

http://thatstamil.oneindia.in/news/2011/07/07/cabinet-reshuffle-be-deferred-aid0090.html

கருத்துகள் இல்லை: