சனி, 9 ஜூலை, 2011

சன் "டிவி' நிர்வாகி மீது மோசடி புகார்கள்... சினிமாத்துறையினர் போலீசுக்கு படையெடுப்பு

சென்னை: "எந்திரன்' பட வர்த்தக ஒப்பந்தப்படி, 1.55 கோடி ரூபாயை தராமல் இழுத்தடிக்கும், "சன் பிக்சர்ஸ்', ஐயப்பன் உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை பெற்றுத் தரும்படி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம், தியேட்டர் உரிமையாளர்கள் ஆறு பேர், மனு அளித்துள்ளனர்.திரைப்பட தயாரிப்பு, வினியோகம் உள்ளிட்டவற்றை செய்து வருகிறது "சன் பிக்சர்ஸ்'. இந்த நிறுவனத்தின் சார்பில், "தீராத விளையாட்டு பிள்ளை' படம் வினியோகம் செய்யப்பட்டது. இப்படத்தை, சேலம் பகுதியில் உள்ள தியேட்டர்களில் வினியோகிக்க, செல்வராஜுடன் ஒப்பந்தம் செய்த சன் பிக்சர்ஸ் நிறுவனம், 1.25 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றியதாக புகார் எழுந்தது.

இதன் பேரில், சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, சண்முகவேல் என்பவர் நேற்று முன்தினம் அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனாவும், அவரது கூட்டாளியான ஐயப்பனும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், "எந்திரன்' படத்திற்கான வர்த்தக ஒப்பந்தப்படி தங்களுக்கு சேர வேண்டிய, 1.55 கோடி ரூபாயை சன் பிக்சர்ஸ், ஐயப்பன் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் தராமல் இழுத்தடிப்பதாக, ஆறு தியேட்டர் உரிமையாளர்கள், கமிஷனர் திரிபாதியிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க இணைச் செயலர் ஸ்ரீதர் கூறியதாவது:"எந்திரன்' படம், கடந்த எட்டு மாதங்களுக்கு முன் வெளியானது. தமிழகத்தில் உள்ள 1,500க்கும் மேற்பட்டவற்றில், 400 தியேட்டர்களில், "எந்திரன்' திரையிடப்பட்டது. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து, வினியோகித்தது. இப்படத்தை, திரையிட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு, தியேட்டர் வைத்திருக்கும் நாங்கள், ஒப்பந்தப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையை கொடுத்தோம்.தற்போது, இதில், எங்களுக்கு வரவேண்டிய பணத்தை தராமல், சன் பிக்சர்ஸ் நிர்வாகம், அதில் தொடர்புடைய ஐயப்பன் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தினர் ஏமாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, பொள்ளாச்சி, ஏ.டிஎஸ்.சி. தியேட்டர் உரிமையாளர் ரகுபதிக்கு, 40 லட்சத்து 10 ஆயிரத்து 761 ரூபாயும், திருப்பூர் கே.எஸ்.தியேட்டர் உரிமையாளர் குமாருக்கு, 10 லட்சத்து 32 ஆயிரத்து 956 ரூபாயும், கஜலட்சுமி தியேட்டர் சீனிவாசனுக்கு, 28 லட்சம் ரூபாயும், பழனி, சினி வள்ளுவர் விஷ்ணுவுக்கு, 21 லட்சத்து 83 ஆயிரத்து 600 ரூபாயும், ராமநாதபுரம் ரமேஷ் தியேட்டர் ரமேஷ் பாபுவுக்கு, 27 லட்சத்து 16 ரூபாயும், ராஜபாளையம் ஜெய ஆனந்த் தியேட்டர் ஆனந்த்திற்கு, 27 லட்சத்து 89 ஆயிரத்து 144 ரூபாயும் என, ஒரு கோடியே 55 லட்சத்து16 ஆயிரத்து 431 கோடி ரூபாய் தரவேண்டியுள்ளது. தரவேண்டிய பணத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் கேட்டால், வினியோகஸ்தர் போல் செயல்பட்ட ஐயப்பனிடம் கேட்கச் சொல்கின்றனர். அவரிடம் கேட்டால், ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனத்தில் கேட்கச் சொல்கின்றார். இதுவரையில் பணத்தை தரவில்லை.இவ்வாறு ஸ்ரீதர் கூறினார்.

கேபிள் ஆபரேட்டர் புகார்:திருச்சி, சன், "டிவி' நிர்வாகி மீது, தோகைமலையைச் சேர்ந்த, கேபிள் ஆபரேட்டர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த தோகைமலை வேதாச்சலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கிலிமுத்து, 43. இவர் அதே பகுதியில், "ஸ்ரீ அம்மன் கேபிள் நெட்வொர்க்' என்ற பெயரில் கேபிள் தொழில் செய்து வருகிறார். மேலும், சன், "டிவி' நிர்வாகம் மூலம் கட்டணச் சேனல்களுக்கான, "டீகோடர்' பெற்றுள்ளார்.சங்கிலிமுத்து, கடந்த 29ம் தேதி கரூர் எஸ்.பி., நாகராஜனிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், "திருச்சி ஒத்தக்கடை பகுதியில் செயல்பட்டு வரும், சன், "டிவி' அலுவலகத்தில் நிர்வாகியாக உள்ள செந்தில் முருகன், மார்ச் 26ம் தேதி என்னை திருச்சிக்கு அழைத்து, வெறும் பேப்பரில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு வழங்கப்பட்ட டி.டி.,க்கு எந்த ரசீதும் தரவில்லை. கடந்த 28ம் தேதி தோகைமலைக்கு வந்த செந்தில் முருகன், மேலும் பாக்கித் தொகை உள்ளதாகக் கூறி கொலை மிரட்டல் விடுத்தார்' என, தெரிவித்துள்ளார்.
புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி., நாகராஜன், புகார் மீது வழக்கு பதிவு செய்ய தோகைமலை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

சன் "டிவி' மீது சிவசேனா புகார்:சன் "டிவி' நிஜம் நிகழ்ச்சி மூலம், பிரிவினையை தூண்டி இந்துக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும், சன் "டிவி' ஒளிபரப்பை தடை செய்வதுடன், சன் குழும தலைவர் கலாநிதி, சக்சேனா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கமிஷனரிடம், சிவசேனா தமிழக தலைவர் குமாரராஜா, மனு அளித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த சில ஆண்டுகளாகவே இந்து மத பற்றுடைய சாமியார்கள், துறவிகள், அருள்வாக்கு சொல்வோர், இந்து கோவில்களில் நடக்கும் கொடைவிழா, தீமிதி விழா மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்து, சன் "டிவி'யில் விமர்சனம் என்ற பெயரால் இந்துக்களையும், இந்து கடவுள்களையும், தொடர்ந்து கேலி செய்து வருகின்றனர். கடந்த மாதம் 13ம் தேதி முதல், 22ம் தேதி வரை, இரவு 10:30 மணிக்கு, நிஜம் நிகழ்ச்சியில், உ.பி., மாநிலம், காசியில், இந்துக்களின் முக்தி ஸ்தலம் என்று போற்றப்படும் காசி விஸ்வநாதர் கோவிலையும், கங்கை நதியை பற்றியும், சன் "டிவி'யில் மிக கேவலமாக, விமர்சனம் என்ற பெயரால் கேலி செய்து அநாகரிகமாக நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இது, இந்துக்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

இந்துக்களின் நம்பிக்கை, பழக்க வழக்கங்களை சீர்குலைக்கும் தீய நோக்கத்தில் மிக கேவலமான முறையில், தொடர்ந்து இந்துக்களின் கோவில்கள், மடாதிபதிகள் குறித்தும், துறவியர், பக்தர்களை கேவலமான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கச் செய்யும் இதுபோன்ற தொடர் விமர்சனத்தால் மன உளைச்சல் ஏற்படுகிறது.எனவே, அநாகரிகமான செய்திகள் தயாரித்து வரும், சன் "டிவி' ஒளிபரப்பை தடை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன், அதன் செயல் அலுவலர் சக்சேனா, சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தள்ளுபடி:"சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தும், சக்சேனா மற்றும் அவரது கூட்டாளி அய்யப்பன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் இருவரையும் 15 நாள் சிறையில் வைக்க, சைதாப்பேட்டை கோர்ட் மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி நேற்று உத்தரவிட்டார்.சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் செல்வராஜ். இவர், சென்னை கே.கே., நகர் போலீஸ் ஸ்டேஷனில், சக்சேனா மீது மோசடி புகார் கொடுத்தார். அப்புகார் தொடர்பாக சக்சேனாவை போலீசார் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். அவ்வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடத்துவதற்கு, சக்சேனாவை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

நேற்று முன்தினம் கோர்ட்டில் சக்சேனாவை போலீசார் ஆஜர்படுத்தினர்.சக்சேனாவுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்ற மனு, சைதாப்பேட்டை 23வது கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கு தொடர்பான சாட்சிகளை கலைத்துவிடும் வாய்ப்பு இருப்பதால், சக்சேனாவுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என, அரசு வழக்கறிஞர் கோபிநாத் ஆட்சேபனை செய்தார். அவரது வாதத்தை ஏற்றுக்கொண்டு, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து, மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி நேற்று உத்தரவிட்டார்.
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=271870

கருத்துகள் இல்லை: