சனி, 9 ஜூலை, 2011

சிறிலங்கா விமான சேவை அலுவலகம் முன்பு மறியல்

சென்னையில் உள்ள சிறிலங்க ஏர்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தை இழுத்து மூட வேண்டும் என்று கோரி சாலை மறியலில் ஈடுபட்ட 30 தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தமிழினப் படுகொலை செய்த சிறிலங்க அரசின் துணைத் தூதரகம் சென்னையில் இருக்கக் கூடாது, அந்நாட்டு அரசின் எந்த துறை அலுவலகமும் தமிழ் மண்ணில் செயல்படக் கூடாது என்று கூறி ‘இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள்’ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் இன்று காலை சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில், பாம் குரோவ் உணவகத்திற்கு எதிரில் இயங்கிவரும் சிறிலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்னார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இழுத்து மூடு, இழுத்து மூடு, சிறிலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்தை இழுத்து மூடு இழுத்து மூடு என்று முழங்கிக்கொண்டே சாலையில் அமர்ந்தனர். இதனால் போக்குவரத்து தடைபட்டது. 30 நிமிட நேரத்திற்கு நடந்த இந்த சாலை மறியலையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மறியல் குறித்து கேட்டதற்கு, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க, போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், சிறிலங்காவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் தாங்கள் மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.

இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் அமைப்பில் உள்ள தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை, தமிழ்த் தேசிய மாணவர் இயக்கம், நாம் தமிழர் கட்சி, தமிழக மக்கள் பேராயம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் கைதாகியுள்ளனர்.
http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1107/09/1110709024_1.htm

கருத்துகள் இல்லை: