புதன், 6 ஜூலை, 2011

சாய் பாபா போட்டோவில் இருந்து கொட்டிய விபூதி: பக்தர்கள் பரவசம்

ஓசூர்: ஓசூரில் தனியார் கம்பெனி அதிகாரி வீட்டில், சாய்பாபா போட்டோவில் இருந்து விபூதி கொட்டுவதை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து வணங்கி சென்றனர்.

ஓசூர் மத்திகிரி சாலை அம்மன் நகரை சேர்ந்தவர் ராஜு (45). இவரது மனைவி சரஸ்வதி. ராஜு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தீவிர சாய் பாபா பக்தர். வீட்டில் உள்ள ஜன்னல் அலமாரியில் சாய் பாபா உருவம் பொறித்த போட்டோவுக்கு மாலை போட்டு தினம் பூஜை செய்து வணங்கி வந்தார்.கடந்த சில மாதம் முன் சாய்பாபா மறைந்த நாள் முதல், ராஜு வீட்டில் இருந்த அவரது உருவ படத்தில் இருந்து தினம் விபூதி கொட்டி வந்தது. முதலில் அதை பெரிதாக எடுத்து கொள்ளாத ராஜு, படத்தில் இருந்து கொட்டிய விபூதிகளை துடைத்து எடுத்துள்ளார். அதன்பின் பின் மீண்டும், மீண்டும் எடுத்து போட, போட சாய்பாபா போட்டோவில் இருந்து விபூதி கொட்டியதை பார்த்து ராஜு குடும்பத்தினர் பக்தி பரவசம் அடைந்தனர்..அவரது வீட்டின் மர நாற்காலி ஒன்றில் சாய்பாபா அமர்ந்து சென்ற கைரேகை தடயங்களும் காணப்படுகிறது. சாய் பாபா படத்துக்கு முன் வைக்கப்படும் எந்த தண்ணீரும் சில நொடிகளில் விபூதி மற்றும் நற் மணத்துடன் நல்ல சுவையாக மாறி விடுகிறது.சாய்பாபா போட்டோவில் இருந்து விபூதி கொட்டுவதை அறிந்த அவரது பக்தர்கள், சுற்று வட்டார பொதுமக்கள் தினம் ராஜு வீட்டுக்கு சென்று, அந்த படத்தில் இருந்து கொட்டும் விபூதியை பார்த்து பரசமடைந்து விபூதி பெற்று வணங்கி செல்கின்றனர்.வீட்டுக்கு வரும் பக்தர்களை விபூதி கொட்டுவதை பார்த்து செல்ல அனுமதிக்கும் ராஜு குடும்பத்தினர், விபூதி மற்றும் நற்மணத்துடன் கூடிய சாய் பாபா தண்ணீரையும் வழங்குகின்றனர். அதே நேரத்தில் படத்தில் இருந்து விபூதி கொட்டுவதை மட்டும் யாரும் போட்டோ எடுக்க அனுமதிப்பது இல்லை

இது குறித்து ராஜு கூறியதாவது:சாய் பாபா இறந்த பின் தற்செயலாக அவரது படத்தின் முன் நின்று மனம் உருகி வணங்கினேன். திடீரென அவரது போட்டோவில் இருந்து நற் மணம் மிகுந்த விபூதி கொட்டுவதை பார்த்தேன். அதே போல், அவரது கைரேகைகள் காணப்படும் நாற்காலி மீது சாய்பாபா படத்தை வைத்து அவரே அந்த நாற்காலியில் இருப்பதாக வணங்கி வருகிறேன். எங்களுடைய வீட்டில் நிகழ்ந்த இந்த அதிசயத்தை போட்டோ எடுத்து நாடு முழுவதும் தெரிந்தால் வீட்டிற்கு வரும் பக்தர்களை சமாளிக்க முடியாது.என்னுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இருக்காது. அதனால், போட்டோ எடுக்க அனுமதிக்கவும், விபூதி விழுவதை விளம்பரப்படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. உலகம் முழுவதும் சாய் பாபாவுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ள நிலையில், என்னுடைய வீட்டில் உள்ள அவரது போட்டோவில் அதிசயம் நிகழ்ந்துள்ளது கண்டு மகிழ்ச்சியாக உள்ளது. அதே நேரத்தில் இந்த அதிசயத்தால் என்னுடைய வீட்டுக்கு பக்தர்கள் அதிகளவில் வருவதால் பயமாகவும் உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=270046

கருத்துகள் இல்லை: