புதன், 6 ஜூலை, 2011

சொல்லாமல் விட்ட கதைகள்

01 கூடாரத்துக்குள்ள இருக்க ஷெல் வந்து விழுந்தது…


நேர்காணல்: விதுல் சிவராஜா


போரினால், கணவனை இழந்த பெண்களின் தொகை இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் அதிகரித்துள்ளது. இதன் மறுபக்கம் தந்தையை இழந்த பிள்ளைகளின் தொகை பெருகியிருக்கிறது என்பதாகும். துணையை இழந்த பெண்களின் வாழ்க்கை – தந்தையை இழந்த பிள்ளைகளின் நிலை என்பது மிகக் கொடுமையானது.
பற்றாக்குறைகள், பாதுகாப்பின்மை, பதற்றம் என்ற மிக மோசமான ஒரு நிலையை இவர்கள் தினமும் தங்கள் வாழ்வில் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பெண்களைப் பற்றியும் இந்தப் பிள்ளைகளைப் பற்றியும் அவ்வப்போது சிலர் பேசினாலும் இன்னும் ஒரு முழுமையான வடிவத்தில் இவர்களுடைய பிரச்சினைகளைப் பற்றியும் இவர்களுடைய தேவைகளைப் பற்றியும் யாரும் சிந்தித்ததாக இல்லை. இவர்களுக்குப் பொருத்தமான ஒரு செயற்பாட்டு வடிவத்தை யாரும் ஏற்படுத்தியதாகவும் இல்லை.
இந்த நிலையில் இவர்கள் நாளாந்தம் சந்திக்கின்ற நெருக்கடிகளைப் பற்றியும் இவர்களுடைய வாழ்நிலையைப் பற்றியும் பேசினோம்.
வன்னியில் ஒரு ஒதுக்குப் புறக்கிராமத்தில் - வலைப்பாட்டில் - வாழும் ஐந்து பிள்ளைகளின் தாயான சாந்தினி அமலம்மா சூசைதாஸன், தானும் தன்னைப் போல இருக்கும் பிறரைப்பற்றியும் சொல்கிறார்.
00
என்ன செய்து கொண்டிருக்கிறீங்கள்? எப்படிப் பிள்ளைகளுடைய தேவைகளையெல்லாம் நிறைவேற்ற முடியுது? நிரந்தர வருமானம் அல்லது வேறு யாருடைய உதவிகள் ஏதாவது கிடைக்கிறதா?
கூலிக்குப் போறன். கூலியெண்டால், கடலுக்குப் போறது. கடலில அட்டை பிடிக்கப்போறது. நாங்கள் ஒரு பத்துப் பன்னிரண்டு பொம்பிளையள், கடலட்டை பிடிக்கப் போறனாங்கள். வலைப்பாட்டுப் பக்கத்தில அட்டை வளர்க்கிறது ஒரு தொழில். அதில வேலை செய்யிறம். பிடிக்கிற அட்டைக்கு ஏற்றமாதிரிக் கூலி தருவினம். சிலவேளை அட்டை வளருகிற களப்பில வேலையெண்டால், நாட்கூலி கிடைக்கும்.
எப்பிடிப் பார்த்தாலும் ஒரு நாளைக்கு ஐநூறு ருபாய் கிடைக்கும். இது என்னத்தைக் காணும்? விலைவாசி ஏறீட்டுது. பெரிய உத்தியோகம் பாக்கிற ஆக்களாலேயே இந்த விலைவாசிக்குப் பொருட்களை வாங்கிச் சமாளிக்க முடியேல்லை. ரண்டு பேரும் உழைக்கிற வீடுகளிலேயே கடன் எண்டு சொல்லுகினம். நான் தனிய, இந்தக் காசை வைச்சுக் கொண்டு என்ன செய்வன்? ஆம்பிளையள் உழைச்சே சமாளிக்க முடியாத வாழ்க்கையில நானொரு பொம்பிளையாக இருந்து என்ன செய்யிறது?
வீட்டில பன்னிரண்டு கோழி வளர்க்கிறன். இவ்வளவுந்தான் வருமானம். இஞ்ச தோட்டம் எல்லாம் செய்யேலாது. தண்ணிப் பிரச்சினை. கோடையில குடி தண்ணி, குளிக்கிற தண்ணிக்கெல்லாம் சரியாக் கஸ்ரப்படவேணும். அதால வேற தொழிலெல்லாம் செய்ய வாய்ப்பில்லை. அதைவிட எங்கட பகுதி ஒரு ஒதுக்குப் புறமாயிருக்கு. ஒரு வியாபாரத்தைச் செய்யிறதாக இருந்தாலும் அதை ஊர் ஆட்களை நம்பித்தான் செய்யலாம். ஊரில இருக்கிறவைக்குப் போதுமான அளவுக்கு கடையெல்லாம் இருக்கு. அதால, இப்ப நான் செய்யிற தொழிலைத் தவிர, வேற வருமானத்தை எதிர்பார்க்க ஏலாது.
பிள்ளையள் கேட்கிறதை எல்லாம் வாங்கிக் குடுக்கேலாது. என்ரை நிலைமை தெரிஞ்சதால வளர்ந்த பிள்ளையள் ஒண்டையுங் கேட்காதுகள். ஆனால், சின்னனுகளுக்கு இதெல்லாம் தெரியுமா? அதுகள் தங்களுக்கு விருப்பமானதைக் கேட்குங்கள். தங்களுக்குத் தேவையானதைக் கேட்குங்கள். நான் என்ன செய்யேலும்? கஸ்ரந்தான், ஆனால், என்ன செய்யிறது?
இந்தப் பிள்ளையளைப் படிப்பிக்க வேணும். அதுகள் படிக்கத் தவறினால், இன்னும் பதினைஞ்சு இருவது வருசத்துக்கு அதுகள் கஸ்ரப்பட வேண்டிவரும். படிப்புச் செலவு முந்தின மாதிரி இல்லை. இப்ப எல்லாத்துக்கும் காசுதான். அதைவிட, இஞ்ச ரியூசன் வசதியும் குறைவு. வெளியில போறதெண்டால், அதுக்குச் சைக்கிள் வேணும். ஒரு சைக்கிளை தொண்டு நிறுவனம் ஒண்டு குடுத்தது. இன்னுமொரு சைக்கிளை வாங்கியிருக்கிறன்.
மீள்குடியேறி இஞ்ச ஊருக்கு வந்தபோது நிவாரணத்துக்குச் சாப்பாட்டுச் சாமான்களைத் தந்தாங்கள். அதால கொஞ்சம் சமாளிக்கக் கூடியதாயிருந்தது. இப்ப அதை நிற்பாட்டிப் போட்டினம். அந்தச் சாமான்கள் வந்தால் ஓரளவுக்குச் சாப்பாட்டுச் செலவைச் சமாளிப்பம். கடற்கரைக்குப் பக்கத்தில இருக்கிறதால, கறிப் பிரச்சினையை எப்பிடியோ சமாளிச்சுக் கொள்ளுவன்.
ஆனால், நிவாரணத்தை நிற்பாட்டினதால, உண்மையில பெரிய சுமையாகத்தானிருக்கு. நாங்களும் இஞ்ச வாற சந்திரகுமார் எம்பியிட்டயும் ஏ.ஜீ.ஏட்டயும் (உதவி அரசாங்க அதிபர்) கேட்டுப்பாத்திட்டம். ஆனால், நிவாரணத்தைத் தாற மாதிரித் தெரியேல்ல. அரசாங்கம் நிவாரணத்துக்குப் பதிலாக சமுர்த்தித் திட்டத்தை இஞ்ச அறிமுகப்படுத்தப் போறதாகச் சொல்லுகினம். அது எப்ப வருமோ தெரியேல்லை.
இப்ப ஒரு தகவல் கிடைச்சிருக்கு. கிளிநொச்சி மாவட்டத்தில இருக்கிற கணவரை இழந்த பெண்களுக்கெல்லாம் சமுர்த்தித் திட்டத்தை அறிமுகப்படுத்திற வரைக்கும் நிவாரணத்தைத் தரப்போகிறதாகச் சொல்லுகினம். அரசாங்கம் அப்பிடி அறிவிச்சிருக்கிறதாகக் கதைக்கினம். அப்பிடி நிவாரணத்தைத் தந்தால், ஓரளவுக்குச் சாப்பாட்டுப் பிரச்சினையைச் சமாளிக்கலாம்.
மற்றப்படி வேற உதவியள் ஒண்டும் இல்லை. எப்பவாவது, எங்கட சித்தப்பா கொஞ்ச உதவி செய்வார். பெரியம்மாவின்ரை மகள் - அக்கா ஒருத்தி இருக்கிறாள். அவவும் கொஞ்சம் உதவி செய்வா. இதை விட ஊருக்குள்ள சில பேரிட்ட கடன் வாங்கித்தான் காலம் போய்க் கொண்டிருக்குது. இப்பிடி எத்தினை நாளைக்குத்தான் கடன் வாங்கியும் கஸ்ரப்பட்டும் சமாளிக்க முடியும்?
'எனக்கொண்டு எண்டால், இந்தப் பிள்ளையளை ஆர் பாக்கிறது?' எண்ட கவலைதான் இப்ப எனக்கிருக்கிற பெரிய கவலை. காய்ச்சல், உடம்பு அலுப்பெண்டாலும் நான் ஓய்வெடுக்கிறதில்லை. அப்பிடி ஒரு நாள் வேலைக்குப் போகேல்ல எண்டால் பிறகு கடன் பெருகியிடும். பிறகு அதைச் சமாளிக்கவே ஏலாது.
அதை விட என்ன கஸ்ரமெண்டாலும் வேலைக்குப் போவன்.
உங்களைப் போல எத்தனை பேர் ஊருக்குள்ள இருக்கிறார்கள்? அதாவது உங்களுடைய வலைப்பாடு, கிராஞ்சி போன்ற பகுதிகளில் இருக்கிறார்கள்?
வலைப்பாட்டில மட்டும் 65 பேருக்கு மேல இப்பிடி ஆம்பிளைத் துணையில்லாத – என்னை மாதிரிப் பொம்பிளையள் இருக்கினம். அதில ஒரு ஏழு எட்டுப்பேர் வயசு போன ஆட்கள். மற்றவை எல்லாம் இளம் பொம்பிளையள். எல்லாரும் போரால பாதிக்கப்பட்டனாங்கள். ஒரு நாலு பேரின்ரை புருசன்மார், முந்தி, நாங்கள் ஊருக்குள்ள இருக்கேக்கையே, (கடற்) தொழிலுக்குப் போய், நேவி (கடற்படை)க் காரங்கள் பிடிச்சுப் போட்டாங்கள். ரண்டு பேற்றை பொடி (உடல்) கிடைச்சுது. மற்றவையைப் பற்றி ஒரு முடிவும் தெரியாது.
எல்லாருக்கும் சின்னப் பிள்ளையள், படிக்கிற வயசுப் பிள்ளையள் இருக்கு. கிராஞ்சி, வேரவில் பக்கத்திலயும் கனக்க ஆட்கள் இருக்கினம். ஆனால், அவையின்ரை தொகை என்னெண்டு எனக்குத் தெரியாது.
ஃபாதரிட்டக் கேட்டால் கணக்குத் தெரியும். இல்லாட்டில் விதானையாரிட்டக் (கிராம அலுவலரிடம்) கேட்டால் தெரியும். ஆர்.டி.எஸ் கார(கிரா அபிவிருத்திச் சங்கத்தின)ருக்கும் தெரியும்.
உங்களுடைய கணவருக்கு என்ன நடந்தது?
ஷெல்லடியில செத்தவர். நாங்கள் இடம்பெயர்ந்து எல்லா இடமும் இருந்திருந்து போய் கொண்டிருக்கேக்க, சுதந்திரபுரத்திலதான் இது நடந்தது. நாங்கள் தரப்பாள் கூடாரத்துக்குள்ளே இருக்கேக்கதான் ஷெல் வந்து விழுந்தது. நாங்கள் அப்பிடியே படுத்திட்டம். பங்கரும் அப்ப இல்ல. நாங்கள் அப்பதான் அங்க இருந்த தென்னந்தோட்டத்துக்கு வந்திருந்தம். இவர், (கணவர்) அப்பதான், எங்களைக் கொண்டு வந்து விட்டிட்டு, அங்கால பக்கத்தில இருந்த பெரியம்மாவைப் பார்த்துக்கொண்டு வாறனெண்டு வெளியில போனவர். அப்பிடிப் போன இடத்திலதான் இது நடந்தது. இவரோட சேர்ந்து எங்கட பெரியம்மாவின்ரை மகள் - என்ரை தங்கச்சிக்கும் காயம். இவரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனம். ஆனால், சரிவரேல்ல. தங்கச்சி தப்பியிட்டாள். அவளுக்குத் தலையிலையும் காலிலையும் பெரிய காயம். ஆனால், தப்பியிட்டாள்.
பிறகு என்ன நடந்தது? எப்படி மிகுதி நாட்களைச் சமாளித்தீர்கள்? பின்னர் எப்போது மீளக்குடியேறி ஊருக்கு வந்தீர்கள்?
பிறகென்ன? அந்த நிலைமையில என்ன செய்ய முடியும்? நல்லாக் கஸ்ரப்பட்டிட்டன். பிள்ளையளைப் பாக்கிறதென்ன? எங்க போறதெண்டு தெரியாது. இடங்களும் புதிசு. எல்லாரும் இடம்பெயர்ந்து கொண்டிருக்கினம். அந்த நிலைமையில மற்றவையின்ரை உதவிகளையும் எதிர்பார்க்க ஏலாது. அவையாலையும் அந்த நேரத்தில ஒண்டுஞ்செய்ய ஏலாது. ஏதோ சனங்களோட சனமாகச் சேர்ந்து போய், படாத கஸ்ரமெல்லாத்தையும் பட்டு, இப்ப தப்பியிருக்கிறம்.
ஏதோ இந்த அளவில வந்திருக்கிறது பெரிய விசயம். வன்னிக்குள்ள இருந்து வெளியில போனாப் போதும் எண்டு ஒரு காலம் இருந்தது. பிறகு முகாமில இருந்து வெளியில போனாப் போதும் எண்டு நினைச்சம். பிறகு, ஊருக்குப் போனால் எப்படியாவது சமாளிச்சுப் போடுவம் எண்டிருந்துது. ஊருக்கு வந்தாலும் பிரச்சினையள்தான். ஆ.... நாங்கள் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊருக்கு வந்தம்.
இப்ப எங்களுக்கு கியூடெக் எண்டு ஃபாதர்மாற்ற நிறவனமொண்டு வீடுகளைக் கட்டித்தருகுது. வலைப்பாட்டில ஒரு இருநூறு வீட்டுக்கு வேலை நடக்குது.
நீங்கள் மீண்டும் ஊருக்கு வந்தபோதிருந்த நிலைமைக்கும் இப்பொழுது இருக்கிற நிலைமைக்கும் இடையில என்ன வித்தியாசம், முன்னேற்றம் எல்லாம் ஏற்பட்டிருக்கிறது?
ம்... நாங்கள் இஞ்ச ஊருக்கு வரேக்க ஊர் முழுக்க ஆமியாகத்தான் இருந்தது. நாங்கள் அப்ப நல்லாப் பயந்தம். இதுக்குள்ள என்னெண்டு இருக்கிறதெண்டு. அப்ப, நாங்கள் வந்து கொஞ்சக்காலம். ஊருக்கு வாறதெண்டாலும் ஊருக்கு வெளியில போறதெண்டாலும் ஆமியிட்டப் பதிஞ்சுபோட்டுத்தான் போய் வரவேணும்.
கடற்கரைக்குப் போறதுக்கும் கட்டுப்பாடுகள் இருந்துது. பிறகு எல்லாம் மெல்ல மெல்லக் குறைஞ்சிட்டுது. இப்ப சேர்ச்சில (தேவாலயத்தில்) ஒழுங்காப் பூசை நடக்குது. இடையில ஒருக்கா கடற்றொழில் அமைச்சரும் வந்திட்டுப் போனார். இப்ப நிலைமை எவ்வளவோ முன்னேறியிட்டுது. ஊருக்கு பஸ் ஓடுது. ஆனால், இன்னும் றோட்டுப் போடேல்ல. கரண்ட்டும் (மின்சாரம்) வரயில்லை.
பூநகரிக்குக் கரண்ட் வந்திட்டுது. கேரதீவுப் பாலத்தையும் போட்டிருக்கினம். ஆனால், சனங்களுக்கு இன்னும் சரியான உழைப்பில்லை. அதைவிடச் சாமான்களின்ரை விலை கூட. எவ்வளவை உழைச்சாலும் செலவுக்குப் போதாது. இது பிள்ளையளைத்தான் பாதிக்குது.
பிள்ளையளுக்கு இந்தப் பருவத்தில நல்ல சாப்பாட்டையும் படிக்க வசதியையும் நாங்கள் குடுக்கேல்லை எண்டால், அதுகளின்ரை எதிர்காலந்தான் பாதிக்கப்படும். பொதுவாகவே வலைப்பாட்டு, கிராஞ்சி போன்ற எங்கட பகுதிகள் பின்தங்கிய இடங்கள். இஞ்ச எல்லா வசதியும் இல்லை. வெளியில விட்டுப் படிப்பிக்கிற வசதி எங்களுக்கில்லை.
முந்திச் சில ஆக்கள் யாழ்ப்பாணத்தில பிள்ளையளை விட்டுப் படிப்பிச்சிருக்கினம். அப்ப ஃபாதர்மாரும் இதுக்கு ஒத்தாசையாக இருந்தினம். அதால எங்கட வலைப்பாட்டில நிறைப்பேர் படிச்சிருக்கினம். இப்ப நிலைமை அப்பிடியில்லைத்தானே.
இப்படி இருக்கிற உங்கட நிலைமையை – உங்களுக்கிருக்கிற பிரச்சினைகளையெல்லாம் எப்படித் தீர்க்கலாம் எண்டு யோசிக்கிறீங்கள்?
என்னைப் போல இப்ப வன்னியில ஏராளம்பேர் இருக்கினம். கணவர்மாரை இழந்த பெண்கள் எண்டால் எல்லாப் பக்கத்தாலையும் பிரச்சினைதான். எல்லாத்தையும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது.
வீட்டில ஆம்பிளை இல்லையெண்டால் அதே ஒரு பிரச்சினைதான். அதைவிட, உழைப்பு, வருமானம் எண்ட பிரச்சினைகள். பிள்ளைகளைத் தனிய வளர்க்கிற கஸ்ரம். தகப்பனில்லாத பிள்ளையள் எண்டாலே அந்தப் பிள்ளையள் வாடிச் சோர்ந்த மாதிரித்தான் இருக்குதுகள். தங்களுக்குள்ள நொந்து நொந்து ஒடுங்கிப் போகுதுகள். நானும் எவ்வளவோ கஸ்ரப்பட்டு முயற்சி செய்து பாக்கிறன். என்னதான் செய்தாலும் இந்த நிலைமையில இருந்து மீளுறது எண்டால் பெரிய பிரச்சினைதான்.
இதுக்கெல்லாம் என்ன தீர்வெண்டு சொல்லிறது? ஓண்டு ரண்டு பிரச்சினையெண்டால் அதைத் தீர்க்கலாம். எங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள். சமூகத்தைத் திருத்தோணும் முதல்ல. இவ்வளவுக்குப் பிறகும் திருந்தாத சாதி நாங்கள். ஒரு ரண்டு வருசத்துக்கு முன்னம் நாங்கள் எப்பிடி இருந்தம்? எண்டதை ஒருக்கால் மறக்காமல் இருந்தால் கன பிரச்சினைகள் தீர்ந்திடும். ஷெல்லடிக்குள்ளயும் இடப் பெயர்வுக்குள்ளயும் எல்லாரும் பட்ட பாட்டை ஒருக்கா நினைச்சுப் பார்த்தமெண்டால், கனகுறைபாடுகளைத் திருத்திக் கொள்ளலாம்.
நாங்கள் பட்ட கஸ்ரங்கள் எல்லாம் எங்களுக்கொரு நல்ல படிப்பினை. எல்லாம் நல்லதொரு அனுபவம். ஆனால், அதைக் கனபேர் மறந்திடுகினம். இப்பிடியிருந்தால் நாங்கள் திருந்தவே மாட்டம். என்னைப் பொறுத்தவரை எங்கட சமூகத்தாலதான் ஏராளம் பிரச்சினைகள் இருக்குது எண்டு சொல்லுவன். ஓராளை மதிக்கிறதுக்கே எங்களுக்கு இன்னும் நல்ல மனம் வரேல்ல. இன்னும் இஞ்ச எங்கட ஊர்ப்பக்கம் வந்து படிப்பிக்கிறதுக்கும் வேலை செய்யிறதுக்கும் யாழ்ப்பாணத்து ஆக்களுக்கு மனம் வரேல்ல. அப்பிடிக் கட்டாயம் வரோணும் எண்டால், ஏதோ சாட்டுக்கு வந்து வேலை செய்யினம். ஒண்டிரண்டு பேர் இதுக்கு மாறாக – விதிவிலக்காக இருக்கலாம். ஆனால், விரும்பி இஞ்ச எங்கட பகுதியளுக்கு வேலை செய்ய வாறது எண்டால், அதில்லை எண்டுதான் சொல்லலாம்.
எங்களுக்கு இஞ்ச இருக்கிற கிராஞ்சி ஆஸ்பத்திரிக்கு டொக்ரர் வாறதில்லை. முழங்காவிலுக்குப் போனால், அங்கயும் சிலவேளை டொக்ரர் இல்லை எண்ட நிலைமைதான். பூநகரியில ஆஸ்பத்திரியே இல்லை. அங்க ஆமிதான் இருக்கு.
கண்ணுக்கு முன்னால கனக்கப் பிரச்சினைகளைப் பார்த்திருக்கிறம். மனிசராக மாறுகிறதுக்கு நல்ல சந்தர்ப்பத்தை எங்கட கடந்த காலம் தந்திருக்கு. ஆனால், நாங்கள்தான் இன்னும் மாறயில்லை.
கடல் அட்டை பிடிக்கும் தொழிலைப் பற்றிச் சொன்னீர்கள். அதைப் பற்றிச் சற்று விளக்கமாகச் சொல்ல முடியுமா?
இது ஓரு சீசன் தொழில். எங்கட கடலில ஒரு பகுதி களப்பு மாதிரி ஆழங்குறைஞ்ச பகுதியாயிருக்கு. பார்த்தாற் சின்னத் தீவுகளைப் போல இருக்கும். கண்டல் மரப் பற்றைகள் இருக்கும். இந்த ஆழங்குறைஞ்ச பகுதிக்கடலில வீட்டுக்கூரைக்குப் போடுகிற சீற்றை நட்டு – ஒரு அடைப்பு மாதிரி ஆக்கி அட்டையை அதுக்குள்ள வளர விடுகிறது. ஒரு ஆறு, ஏழு மாதம் விட்டால் அட்டை வளர்ந்திடும். பிறகு அந்த அட்டையைப் பிடிக்கிறது.
இதை ஒரு தொழிலாக இஞ்ச சிலபேர் செய்யினம். எல்லாரும் செய்யேலாது. முதல் போடக் காசுவேணும். அதைவிட, இந்தத் தொழிலைப் பற்றிய விளக்கம் வேணும். அட்டை வளர்ப்பு எண்டால், அதைப் பக்குவமாகச் செய்யவேணும். ஒரு சீசனுக்கு லட்சக்கணக்கான அட்டைக்குஞ்சுகள் இருக்கும். அதையெல்லாம் அழியவிடாமல், பாதுகாத்து வளர்த்தாத்தான் லாபம். அப்ப, அதுக்கான அறிவு வேணும்.
அட்டைக்கு வெளிநாடுகளில நல்ல மதிப்பு. ஒரு கிலோ அட்டை பதினைந்தாயிரம் ரூபாய்க்கு மேல போகும். சிலவேளை பத்துப் பன்னிரண்டு கிலோ அட்டையும் அடிக்கும்.
ஆனால், முந்தி நாங்களாகவே அட்டையைப் பிடிக்கக்கூடியதாக இருந்தது. இப்ப எங்களைப் போல கஸ்ரப்பட்ட ஆக்களுக்கு அந்த வசதியில்லை. காசுள்ளவையள் எல்லாரும் பண்ணைத்திட்டத்தில இறங்கீட்டாங்கள். அப்ப நாங்கள் என்ன செய்யிறது?
உங்களை விட முன்னர் போராளிகளாக இருந்தவர்களின் குடும்பங்கள் இப்பொழுது மிக நெருக்கடியான ஒரு பொருளாதாரப் பிரச்சினைக்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக 'தடுப்பு' முகாம்களில் உள்ளவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கேட்கிறேன்.
அப்பிடித்தான். அவையளும் ஏறக்குறைய எங்களைப் போலத்தான் கஸ்ரப்பட்டுக் கொண்டிருக்கினம். இஞ்ச பிள்ளையளை வளக்கிறதுக்கும் குடும்பச் செலவுக்கும் வருமானம் வேணும். அங்க புருஷனைப் பாக்கப் போறதுக்கும் காசு வேணும். இப்பிடியே அதுகள் நல்லாக் கஸ்ரப்படுதுகள். எங்களைப் போல இருக்கிற ஆக்களுக்கு அரசாங்கமோ அல்லது வேற அமைப்புகளோ ஒரு சீரா உதவித்திட்டத்தை உருவாக்கி உதவோணும். இல்லாட்டி, சமூகம் சீரழிஞ்சு போகும்.
நான் என்ன சொல்லிறனெண்டால், போரில கசக்கிப் பிழியப்பட்ட எங்களுடைய வாழ்க்கைக்கு ஒரு முழுமையான உதவி தேவை. அதை இன்னும் ஆரும் செய்யேல்லை. அதாலதான் நாங்கள் எல்லாம் இப்பிடிக் கிடந்து கஸ்ரப்பட வேண்டியிருக்கு.
நீங்கள் சொல்வது உண்மைதான். உங்களைப் போன்றவர்களுக்கு இப்பொழுது அவசியமாக இருப்பது உதவிப்பணிகள்தான். இதைப்பற்றித் தொடர்ச்சியாகப் பலரும் சொல்லிக் கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால், உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியென்றால், உங்களைப் போன்றவர்களின் கோரிக்கைக்கு யாரும் மதிப்பளிக்கவில்லை என்று சொல்கிறீர்களா?
இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்லிறது? இந்த உலகத்தில இரக்கமும் மனச்சாட்சியும் இருந்திருந்தால், நாங்கள் இப்பிடிக் கிடந்து அலையவேணுமே! முந்திச் சண்டைக்குள்ள சிக்குப்பட்டுச் செத்துப் பிழைச்சம். அப்பவும் எங்களுக்கு ஒருதரும் உதவேல்ல. இப்பவும் நாங்கள் செத்துப் பிழைச்சுக் கொண்டுதானிருக்கிறம். ஆரும் எங்களுக்கு உதவிறதாக இல்லை. நாங்கள் மனிசரெண்டு ஆரும் கணக்கில எடுக்கேல்ல. உண்மையாச் சொல்லிறன், உங்களோட கூட இதுகளைப் பற்றிக் கதைக்க நான் விரும்பேல்ல. ஆருக்கும் இதுகளைப் பற்றிக் கதைச்சு என்ன பலன்?
00


இது பொங்கு தமிழ் இணையத்தில் வந்த ஆக்கம் பொங்கு தமிழ் இணையத்தைhttp://www.ponguthamil.com உங்கள் நண்பர்களையும் பார்க்கும்படி பரிந்துரையுங்கள்http://www.ponguthamil.com/mugangal-nirangal/mugangalnirangalcontent.asp?sectionid=3&contentid={54A6938D-88B0-492A-867B-029FB7E19A93}

கருத்துகள் இல்லை: